தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.வுக்குத் திராணி இல்லை! - தகிக்கும் வைகைச் செல்வன் | DMK have no guts to Face Local body Election says Vaigai Selvan

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (05/10/2016)

கடைசி தொடர்பு:16:56 (05/10/2016)

தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க.வுக்குத் திராணி இல்லை! - தகிக்கும் வைகைச் செல்வன்

மிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சித் தேர்தலில் சில முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அவற்றை சரிசெய்யும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் போட்டியிடுவதற்கு பழங்குடியினருக்கு அதிகாரம் உண்டு, ஆனால் நடைபெறப் போகும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பழக்குடியினருக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை. சென்னையில் மட்டும் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, இவற்றை மறுபரிசீலனை செய்யவேண்டும். மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்களாக இருக்கக் கூடாது. என்றும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் குறித்த புதிய வழிமுறைகளை வகுக்க வேண்டும், அதாவது வரப்போகும் உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அவசியம் கொடுக்கவேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்த புதிய அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும், அதுவரை தேர்தல் நடைபெறக் கூடாது என்று உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

மேலும் இந்த அறிவிப்பாணையை வெளியிட்ட பின்னர் தேர்தல் ஆணையம் வரும் டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்திக் கொள்ளலாம் என்றும் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் உள்ளாட்சித் தேர்தலில் சுணக்கம் காட்டாமல் ஆளும் அதிமுக பரபரப்பாக தேர்தல் பணிகளை கவனித்து வந்த நிலையில் இந்த தடை உத்தரவு அவர்களிடம் என்னவிதமான உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது என விசாரித்தோம். முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தி தொடர்பாளருமான வைகைச் செல்வனிடம் இதுகுறித்து கேட்டோம்.

“ இந்த தடை உத்தரவு என்பது தி.மு.க வின் சதி. அடித்தட்டு மக்களையும் ஜனநாயகம் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழக அரசு குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்த முடிவு செய்து அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால் தி.மு.க.வினர் இப்போது இடஒதுக்கீடு பிரச்னையைப் பற்றி பேசி இந்த தேர்தலை கெடுக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுள்ளனர். தோல்வி பயத்தால், தேர்தலை நடத்த விடாமல் தி.மு.க செய்த சதி ” என்றார்.

தேர்தல் ஆணையம் அ.தி.மு.க வுக்கு ஆதராவாக செயல்படுவாதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளதே? என்று அவரிடம் கேட்டோம்.

“இப்படி எதையாவது சொல்லி மக்களை திசை திருப்புவதே தி.மு.க.வின் உள்நோக்கம். தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கட்டவிழ்த்துவிட்ட வன்முறையை உயர் நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா கண்டனம் தெரிவித்ததை இந்த நேரத்தில் திமுகவினருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். எப்படி இருந்தாலும் அ.தி.மு.க, உள்ளாட்சித் தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, எதிர்கட்சியினரை தலைகுனிய செய்யும்” என்றார்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ கூடிய விரைவில் அரசு தரப்பில் இதற்கான பதில் அளிக்கவுள்ளோம். சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரையில் எதுவும் சொல்ல இயலாது” என்றார்.

- ஜெ.அன்பரசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்