Published:Updated:

2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை: ஜெயலலிதா கண்டனம்

Vikatan Correspondent

சென்னை, ஜன. 14- : 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை என்பது போபர்ஸ் விசாரணை வழியில் சென்று கொண்டிருக்கிறது என்று  ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் குறித்த விசாரணை இரண்டு வாரங்களுக்கு முன்பு சரியான பாதையில் செல்வது போல் தோற்றமளித்தது. இது குறித்த கடுமையான அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் முன்பு இந்தியாவின் உயரிய தணிக்கை அமைப்பான, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத்தலைவர் சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் கைபேசி சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் தவறான கொள்கையை கடைபிடித்த தன் காரணமாக இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊழலை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து விசாரணை செய்ய மத்தியப்புலனாய்வுத்துறை ஏன் அஞ்சுகிறது என்று கேள்வி எழுப்பியது. மத்திய புலனாய்வுத்துறை தனது பங்கிற்கு இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் 40-க்கும் மேற்பட்ட இடங்களை ஒரே நாளில் சோதனை செய்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது.

டெல்லியைச் சேர்ந்த அரசியல் தரகர் நீராராடியாவிடமும் முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ராசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை கண் காணிக்கிறது என்பதால் இதில் சம்பந்தப்பட்டவர்களை மத்திய புலனாய்வுத்துறை விரைவில் கைது செய்யும்; குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்ற பொதுவான கருத்து நிலவியது. கருணாநிதி - மன்மோகன் சிங் சந்திப்பிற்கு பிறகு இரு கட்சிகளின் உறவும் கெடா மல் இருக்கிறது என்று கருணாநிதியும், மன்மோகன்சிங்கும் தனித்தனியாக ஊடகங்களுக்கு தெரிவித்தனர். இதற்குப் பின், அனைத்தும் மாறின. மூன்று நாட்களுக்கு உள்ளாகவே, உச்ச நீதி மன்ற அவமதிப்பு என்று சொல்லக்கூடிய வகையில், இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறைத்தலைவரின் அறிக்கை முற்றிலும் தவறானது என்று தற்போ தைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் அபத்தமாக பேசினார். இது மட்டுமல்லாமல், ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது இந்த நாட்டிற்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்ததோடு, பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக் காலத்தில் 1,50,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது என்றும் கபில் சிபல் தெரிவித்தார்.
 
தன்னுடைய வழக்கறிஞர் யுக்தியைக் கொண்டு ஒட்டுமொத்த இந்திய மக்களின் காதில் பூ சுற்ற வெறிகொண்டு முயற்சி செய்கிறார் கபில்சிபல். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்வது முடிவாகிவிட்ட நிலையில், ராசா அப்ப ழுக்கற்றவராகிவிட்டார். மத்திய புலனாய்வுத் துறை விசாரணை என்பது புஸ் வாணமாகிவிட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணைகளில் கிடைத்த விவரங்கள் அனைத்தும் யாரையும் கைது செய்வதற்கு வழி வகுக்கவில்லை.
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் இந்திய நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த கணக்கு மிகவும் சரியான மற்றும் காலத்திற்கேற்ற அடிப்படையில் துல்லியமாக கணிக்கப்பட்டது என்ற இந்திய கணக்கு மற்றுத் தணிக்கைத் துறையின் கருத்து மதிக்கப்படாத ஒன்றாகி விட்டது. அரசியலமைப்புச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தணிக்கை அமைப்பின் அதிகாரம் திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. இந்த இமாலய ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை தேவை என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை நிராகரித்ததோடு, நாடாளுமன்றத்தின் ஒரு முழுமையான கூட்டத்தொடரையே முடக்கி விட்டது.

கபில்சிபல், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் முன்போ, இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கை மீது விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற பொதுக் கணக்குக் குழு முன்போ தன்னுடைய கருத்தைத் தெரிவிக்காமல், பத்திரிகையாளர்கள் முன்பு வெளிப்படையாக தெரிவித்ததன் மூலம், தன்னுடைய கூட்டணிக் கட்சியான தி.மு.க.விற்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அமைப்பையும் காங்கிரஸ் நிர்மூலமாக்கும், தகர்க்கும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் கபில்சிபல். 2ஜி ஸ்பெக்ட்ரம் விசாரணை என்பது போபர்ஸ் விசாரணை வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதும், இதை நிகழ்த்தியவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விடுவார்கள் என்பதும் தெளி வாகிறது.

ஆதர்ஷ் வீட்டுவசதி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ஆகியவற்றில் தன் பெயரை கெடுத்துக் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் தன்னை சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அபாயகரமான கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களை தன் பக்கம் இழுக்கப்பார்க்கிறது. தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்ற சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்கப்பாடம் புகட்டுவது தமிழக மக்களின் கடமை.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.