Published:Updated:

''கட்சி நடத்துறீங்களா? கம்பெனி நடத்துறீங்களா?''

கொந்தளிப்பில் உடைகிறதா பா.ம.க.?

''கட்சி நடத்துறீங்களா? கம்பெனி நடத்துறீங்களா?''

கொந்தளிப்பில் உடைகிறதா பா.ம.க.?

Published:Updated:
##~##

தேர்தல் முடிவுக்குப் பிறகு பா.ம.க-வினர் ரொம்பவே உடைந்துகிடக்கிறார்கள். ஒவ்வோர் ஊரிலும் ராமதாஸ் குடும்பத்துக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் வெளிப்​படையாக வெடிக்கத் தொடங்கி இருப்பதால், எப்படி சரிக்கட்டுவது என்று குழப்பத்தில் தவிக்கிறார் ராமதாஸ்! 

பா.ம.க. செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவரான கோ.க.மணி தலைமையில் கடந்த வாரம் சேலத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ''தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நடக்கும் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால், கட்சியின் தோல்விபற்றித்தான் எல்லோருமே பேசினார்கள். எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான காவேரி, 'தமிழ்நாட்டுல எந்தக் கட்சி... எந்தத் தொகுதியில் தோற்றாலும், சேலம் மாவட்டத்தில் மட்டும் பா.ம.க. தோற்காது. காரணம், சேலம் மாவட்டம் எப்போதுமே பா.ம.க-வின் கோட்டை. ஆனால், இன்று அந்தக் கோட்டையிலேயே ஓட்டை விழுந்து இருக்கிறது. அதற்குக் காரணம்... நம் கட்சித் தலைவர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கட்சி நடத்துறீங்களா? கம்பெனி நடத்துறீங்களா?''

கோ.க.மணிதான். அவர்தான் மருத்துவர் ஐயாவை தப்பான வழிக்கு இழுத்துச் செல்கிறார். சேலம் மாவட்டத்தில் பா.ம.க. எம்.எல்.ஏ-க்களான நாங்கள், வீரபாண்டி ஆறுமுகத்தை எதிர்த்து கடந்த ஐந்து வருடங்களாக எந்த அளவுக்கு அரசியல் செய்தோம் என்பது மக்களுக்குத் தெரியும். இன்னிக்கு அதை எல்லாம் மறந்துவிட்டு, அவரைப்பற்றி புகழ்ந்து பேசச் சொன்னா, எப்படி முடியும்? மக்கள் காறித் துப்ப மாட்டாங்களா..?’ என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

அவருக்குப் பிறகு எழுந்த இன்னொரு நிர்வாகி, 'இங்கே கட்சி நடத்துறீங்களா.. கார்ப்பரேட் கம்பெனி நடத்துறீங்களா..? 1987-ம் ஆண்டு வன்னியர் சங்கமாக இருந்தபோது நடந்த போராட்டத்துல, 27 பேர் உயிர்த் தியாகம் செய்து உருவான இயக்கம் இது. கட்சி ஆரம்பிச்ச நேரத்தில், ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு பெட்டியைத் தூக்கிட்டு ஊர் ஊரா வந்து கட்சிக்காரர்களை சந்திச்சதை இன்னிக்கு மருத்துவர் ஐயா மறந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் மறக்கவில்லை. இன்னிக்கு உங்களை சந்திக்கிறதே பெரிய விஷயமா இருக்கு. உங்களுக்கும் சின்னய்யாவுக்கும் விசுவாசமா இருக்கிறவங்களுக்கும், நீங்க வெளியூர் வரும்போது சோறு வாங்கிப் போட்டு காக்கா பிடிக்கிறவனுக்கும் மட்டும்தான் ஸீட் கொடுத்தீங்க. கட்சிக்காக உண்மையாக உழைச்சவனையோ, தியாகம் செய்தவனையோ சந்திக்கக்​கூட உங்களுக்கு நேரம் இல்லை. அப்புறம் எப்படிங்க நாம ஜெயிக்க முடியும்..? இப்படியே போயிட்டு இருந்தா, நம்ம கட்சி இருக்கிற இடம் தெரியாமப் போயிடும். குடும்ப ஆதிக்கத்தால் கருணாநிதி குடும்பம் எந்த நிலைமையில இருக்குதுன்னு நீங்களும் பார்த்துட்டுத்தான் இருக்கீங்க. நமக்கும் அப்படி ஒரு நிலை வந்துடக் கூடாது!’ என்று தீயாக வெடித்தார் என்கிறார்கள்.

விவரம் தெரிந்த இன்னும் சிலரோ, ''எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-​வான காவேரியும், தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணையனும் இணைந்து, அதிருப்தியில் இருக்கும் பா.ம.க-வினரையும், ஸீட் கிடைக்காத முன்னாள் எம்.எல்.ஏ-க்களையும் ஓர் அணியாகத் திரட்டிக் கொண்டு இருக்கிறார்​கள். மருத்துவர் ஐயாவும், அவரது குடும்பத்தினரும் இனியும் தன்னிச்சையாக செயல்பட்டாலோ... அல்லது நிர்வாகிகளை சந்திப்பதைத் தவிர்த்தாலோ, கட்சியில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் இருக்கிறார்கள். அதற்கான முன்னோட்டம்தான் செயற்குழு கூட்டத்தில் நடந்தது...'' என்கிறார்கள்.

காவேரியைச் சந்தித்துப் பேசினோம். ''பா.ம.க-வின் மிகப் பெரிய தோல்விக்கு முழுக் காரணமும், கருணாநிதியின் ஏஜென்ட்டாக செயல்படும் கட்சியின் தலைவர் மணிதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தோம். அந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகும், அ.தி.மு.க-வுடன் நிலையான கூட்டணி என்ற மனநிலையில் இருந்தோம். தி.மு.க-வினரையும் எதிர்த்தோம். ஆனால், திரிலோகசஞ்சாரி போல மணி கொடநாடு சென்றார். அங்கே ஜெயலலிதாவுடன் என்ன பேசினார் என்று தெரியவில்லை... மறுநாளே அ.தி.மு.க-வுடன் கூட்டணி முறிந்தது.

பென்னாகரம் இடைத் தேர்தலை தனித்து எதிர்கொண்டோம். அங்கு உண்மையான போட்டி பா.ம.க-வுக்கும் தி.மு.க-வுக்கும்தான். அதிலும் நாங்களே முன்னணியில் இருந்தோம். அப்போது கோ.க.மணி, கட்சியினர் யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லாமல், திருச்சியில் நடந்த கலைஞர் வீட்டு வசதித்

''கட்சி நடத்துறீங்களா? கம்பெனி நடத்துறீங்களா?''

திட்டத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு கருணாநிதியை புகழ்ந்துவிட்டு வந்தார். அப்போது எங்கள் கட்சியினர் மட்டும் அல்ல... பென்னாகரம் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர் சமுதாய மக்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதனால், அங்கு தோல்வி அடைந்தோம். இத்தனைக்கும் அங்கு போட்டியிட்டது கோ.க.மணியின் மகன் தமிழ்குமரன்!

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு இரு மாதங்கள் முன்பு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள். பல்வேறு கட்சிக் கூட்டங்களில் கருத்து கேட்கப்பட்டபோதும் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்பதையே அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால், மணி மட்டும் கருணாநிதி மீதுகொண்ட பாசத்தால் கட்சியை அவரிடம் அடகு வைத்துவிட்டார். எங்கள் ஐயாவை எப்படிப் பேசி, மசியவைக்க முடியும் என்ற வித்தை தெரிந்தவர் மணி. அதனால், அவரைத் தவறான வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கிவிட்டார்.

ராமதாஸ் ஐயா, தனது பேரன் திருமணத்துக்கு கருணாநிதிக்கு பத்திரிகை வைக்கப் போவதாக மட்டுமே சொன்னார். கூட்டணி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அந்த சமயத்தில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை கட்சி எடுத்து இருந்தது. ஆனால், கருணாநிதியிடம் பேசிய மணி, 'ராமதாஸ் பத்திரிகை வைக்க வருகிறார். இதைவிட்டால், சந்தர்ப்பம் கிடைக்காது. அ.தி.மு.க-வுடன் போய்விடுவார்கள்’ என்று சொன்னார். ராஜதந்திரியான கருணாநிதியும் அன்றைய தினமே ராமதாஸ் ஐயாவிடம் வற்புறுத்திக் கூட்டணியை முடிவு செய்துவிட்டார்.

ஆக்டோபஸ் போல எங்கள் ஐயாவைக் கட்டி அமுக்கி, தவறான முடிவுகளை எடுக்கவைக்கும் மணி ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அவரை, கட்சித் தலைமையே பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் கட்சி உருப்படும். இல்லைன்னா கஷ்டம்தான்..!'' என்று பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.

தாரமங்கலம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வான கண்ணையனிடம் பேசினோம். ''எனக்கு உடம்பு சரி இல்லாததால் நான் அந்தக் கூட்டத்துக்குப் போகவில்லை. அதனால், என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. சேலம் மாவட்டத்தில் பா.ம.க. தோல்விக்குக் காரணம், தி.மு.க-வுடன் கூட்டணி வைத்ததுதான். அதில் எந்த மாற்றமும் இல்ல. தனித்து நின்று இருந்தால்கூட தாராளமாக மூன்று ஸீட்கள் ஜெயித்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்!'' என்று சொன்னார்.

பா.ம.க-வின் மாநிலத் தலைவரான கோ.க.மணியிடம் இந்த விவகாரம் தொடர்பாகக் கேட்டோம். ''தேர்தலில் வெற்றி, தோல்வி எல்லாமே வரும்... போகும். அதையே நினைச்சு வருத்தப்படக் கூடாது. எங்க கட்சிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லோரும் ஒற்றுமையாத்தான் இருக்கோம். தி.மு.க-வோடு கூட்டணி வெச்சதால்தான் தோற்றுப்போனோம் என்பதை நான் ஒப்புக்க மாட்டேன். அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க. அதனால், இந்த முறை அ.தி.மு.க-வுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காங்க. நாங்க மட்டும்தான் அடிக்கடி கூட்டணி மாறிட்டு இருக்கோமா? மற்ற கட்சிகள் எல்லாம் ஒரே கூட்டணியில்தான் இருக்காங்களா? எங்களைக் கொச்சைப்படுத்தணுங்கிற நோக்கத்தில், எது வேணும்னாலும் பேசலாம். இப்போ கட்சியைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம். ஊர் ஊருக்கு கூட்டங்கள் நடத்தி, கட்சிக்காரர்களை முடுக்கிவிட ஆரம்பித்து இருக்கிறோம்!'' என்று பதில் சொன்னார்.

இந்த விவகாரங்கள் ராமதாஸ் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டதாம். சேலம் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசி வருகிறார் ராமதாஸ். எதிர்ப்பு கோஷ்டிகள் சமாதானம் அடையுமா அல்லது வெளியேறுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!

- கே.ராஜாதிருவேங்கடம், டி.எல்.சஞ்சீவிகுமார் படங்கள்: க.தனசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism