'மான, அவமானம் பற்றி கவலைப்பட்டால் ஆகுமா?’ ’அடடா’ மதுரை ஆதீனம் | Madurai aadhinam explains why he support ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 15:19 (17/11/2016)

கடைசி தொடர்பு:17:37 (17/11/2016)

'மான, அவமானம் பற்றி கவலைப்பட்டால் ஆகுமா?’ ’அடடா’ மதுரை ஆதீனம்

மதுரை : "புரட்சித்தலைவி அம்மா தான் பத்து கோடி தமிழர்களின் தாய். நானும் அவருக்கு மகன்தான். சந்நிதானமான எனக்கும் புரட்சித்தலைவிதான் அம்மா. மானம், அவமானத்தை நெனைச்சா சமுதாயப்பணி கெட்டுவிடும், அதைப்பற்றி கவலைப்படாமல் அம்மாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம்," என தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார் மதுரை ஆதீனம்.

தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் வரும் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடாவையும் பிரசாரத்தையும் வேகமாகவும், விறு விறுப்பாகவும் நடத்தி முடித்தார்கள். ஓ.பி.எஸ்.தலைமையில் பத்து அமைச்சர்கள், பத்து எம்.பி.க்கள், 65 எம்.எல்.ஏ.க்கள், இருபது மாவட்டச் செயலாளர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான வெளியூர் கட்சி பிரமுகர்கள் என்று, கரை வேட்டிகளும், கார்களுமாக திருப்பரங்குன்றத்தையே திணறடித்து விட்டார்கள்.

தினந்தோறும் நடிகர் பட்டாளத்தையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் அழைத்து வந்து சந்து பொந்தெல்லாம் பிரசாரம் செய்ய வைத்தவர்கள். ஹைலைட்டாக மதுரை ஆதீனம் பிரசாரம் செய்வதற்காக திருப்பரங்குன்றத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தையே நடத்தினார்கள் அ.தி.மு.க.வினர்.  இதில் புறநகர் மா.செ.ராஜன் செல்லப்பாவும், வேட்பாளர் ஏ.கே.போஸ் ஆகியோர் மட்டும் சில நிமிடங்கள் பேசினார்கள். ஓ.பி.எஸ்.உட்பட பத்து அமைச்சர்களும் அமைதியாக அமர்ந்து ஆதீனம் பேச்சை ரசித்தனர்.

ஆதீனமும் அவர்களை ஏமாற்றவில்லை, தான் ஒரு பாரம்பர்யம் மிகுந்த மடத்தின் அதிபதி என்பதை மறந்து தரை டிக்கெட் ரேஞ்சுக்கு கீழே இறங்கி பேசி அவர்களை குஷி படுத்தினார்.

"மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தருகிற இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க.  ஆட்சியில் இருப்பதால்தான் தமிழகத்தில் ஆன்மிகம் வாழ்கிறது. இதற்குக் காரணம் அம்மா. அவர்தான் உலகத்தில் இருக்கிற அனைவருக்கும் தாய். அவர் அறிவாற்றலைக் கண்டு உலகமே வியக்கிறது. உலகத்தில் எந்த தலைவருக்கும் நடக்காத பிரார்த்தனைகள், அபிஷேகங்கள் அம்மாவுக்காக மக்கள் நடத்தினார்கள். இதை அப்போலோவிலிருந்து உலகத்துக்கு உடனுக்குடன் தெரிவித்த தொலைக்காட்சி நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனை நம்பினால் நல்லது நடக்கும் என்பதற்கு அம்மாவே உதாரணம்.  இதோ அவர் கையெழுத்திட்டு மக்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். கடவுள் தான் திருப்பரங்குன்றம் வேட்பாளராக ஏ.கே.போஸ் பெயரை அம்மாவுக்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பினார். அம்மா அவரை அறிவித்தார். ஏ.கே.போஸ், நவம்பர் 19-க்கு பிறகு ஓ.கே. பாஸ். பாஸ்னா முதலாளி. இனி திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவர்தான் முதலாளி. திருப்பரங்குன்றம் மட்டுமல்ல, தமிழ்நாடே அதிமுக கோட்டைதான்.

நான் ஒன்னும் அ.தி.மு.க.வை புதுசா ஆதரிக்கலை. 1990லருந்து புரட்சித்தலைவி அம்மாவை ஆதரித்துக் கொண்டிருக்கிறேன். இதை சிலர் விமர்சிக்கிறார்கள். சமூகத்துக்கு நல்லது செய்யும்போது நம்மை பற்றி பிறர் பேசுவதை கண்டுகொள்ளக் கூடாதென்று வள்ளுவர் கூறியிருக்கிறார். என் உயிர் இருக்கிறவரை புரட்சித்தலைவியை ஆதரிப்பேன்.

இன்று நாம் நெற்றியில் விபூதி குங்குமம் வைக்க காரணம் அம்மாதான். அ.தி.மு.க. கடவுளை நம்புகிற கட்சி. அம்மா ஆட்சியில் ஸ்டூடண்டுக்கும் நன்மை செய்திருக்கிறார், ஹஸ்பண்டுக்கும் பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். அம்மா ஆட்சியில் தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் எல்லோரும் கோடீஸ்வரர் ஆகிவிட்டார்கள். அல்லா, இயேசு, சிவபெருமான் எல்லோரும் அம்மாவுக்கு அருகில் இருக்கிறார்கள். இறைவன்தான் அம்மாவை கையெழுத்து போட வைத்தவன். விரைவில் அவர் கோட்டையில் வந்து அமர்வார்.

அம்மா ஒரு ஞானி, மகா ஞானி, அரசியல் ஞானி, ஆன்மீக ஞானி, மொத்தத்தில் மனித தெய்வம். அவரை எவற்றாலும் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. புரட்சித்தலைவி பத்து கோடி தமிழர்களின் தாய். நானும் அவருக்கு மகன்தான். சந்நிதானமான எனக்கும் புரட்சித்தலைவிதான் அம்மா.
மானம், அவமானத்தை நெனைச்சா சமுதாயப்பணி கெட்டுவிடும்,  அதைப்பற்றி கவலைப்படாமல் அம்மாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். எனக்காகவே இந்த கூட்டத்தை ஓ.பி.எஸ்.ஏற்பாடு செய்தார். ஓபன் மேடை போடனுமா, கவர் பண்ணின மேடை போடனுமா என்று கேட்டார். குளிர்காலம், உடம்பு தாங்காதுன்னு சொன்னேன். அந்தளவுக்கு சந்நிதானத்தின் மீது பற்று கொண்டவர். அவரைப்போல் ஒருவரை காண முடியாது. அம்மாவுக்கு ஓ.பி.எஸ். விசுவாச மகன்.

செல்லூர் ராஜும் எனக்கு நல்ல நெருக்கம்தான். (என்றவர், ராஜு...விவசாயிகள் கடன் எவ்வளவு தள்ளுபடி பண்ணினீங்க என்று கேட்க, அவர் திடீரென்று கேட்டதும் முழிக்க, பிறகு யோசித்து 5080 கோடி என்றார்) பார்த்தீங்களா இவ்வளவு கோடிகள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கு. அமைச்சர் மணிகண்டனுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே நான்தான். என்ன மணிகண்டன், நான் சொல்றது சரியா....(அமைச்சர் மணிகண்டனும் பதறி எழுந்து நின்னு ஆமாம் என்று சொன்னார்). இப்ப நான் சபாநாயகர் மாதிரி, கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லனும்....

ராஜன் செல்லப்பா எனக்கு முப்பத்தஞ்சு வருஷமா பழக்கம். ராஜேந்திர பாலாஜியும் ரொம்ப பழக்கம். எல்லா அமைச்சர்களோடும் பழக்கம் வச்சுக்கிறது சாதாரண விஷயமில்லை. ராஜலட்சுமி.... நீ எந்த ஊரு....என்று அவரை பார்த்து கேட்க, அவரும் பதறியபடி சங்கரன்கோயில் என்று சொல்ல, ஓ.,...என்றவர், பார்த்தீங்களா... அதிமுகவில் நன்றாக உழைத்தால் பெண்கள் நல்ல பதவிக்கு வரலாம்.

நம்ம பாண்டியராஜன் இருக்காரே அவர் அமைச்சராவார்னு யாரும் எதிர்பார்க்கல. அவருடைய பேச்சாற்றல், திறமை அம்மாவுக்கு தெரிந்து அமைச்சராக்கினார். அவரும் நமக்கு நல்ல பழக்கம். பெஞ்சமின் நீங்க சி.எஸ்.ஐ.யா, ரோமன் கத்தோலிக்கா? என்று கேட்க, அதிர்ச்ச்ச்சியான அவரும் ஏதோ பதில் சொன்னார். முத்துராமலிங்கம் நானும் இருக்கேன்னு காட்டுறாரு. எம்.பி. கோபாலகிருஷ்ணனும் எந்திரிச்சு பார்க்கிறார். தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தங்கத்தாயின் பிள்ளை. வக்கீல் ஜெயசந்திரன் வந்திருக்காரா, வக்கீல் ரமேஷ் வந்திருக்கார்.

இந்த படை வீரப்படை,  இறை நம்பிக்கைப்படை, ஞானப்படை, அறிவுப்படை, ஆற்றுப்படை, புரட்சித்தலைவியின் போர்ப்படை....இப்படை தோற்கின் எப்படை வெல்லும், இப்படையை வெல்ல உலகில் யாருமில்லை. போஸ், நீங்கள் வெற்றி பெற்றதும் திருப்பரங்குன்றத்துக்கு பல திட்டங்களை செய்யுங்கள்.  இதை ஓ.பி.எஸ்.கிட்டே சொன்னாலே செய்து முடித்துவிடுவார். எல்லோரும்   இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். உங்கள் பிள்ளைகளை அதிமுகவில் இணையுங்கள்.... எல்லோருக்கும் ஆசிர்வாதம்." என்று பேசி முடித்தார் ஆதீனம்.

- செ.சல்மான்,

படங்கள் : வீ.சதீஷ்குமார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்