முதல்வர் நாராயணசாமி அபார வெற்றி: அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார்

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முதலமைச்சர் நாராயணசாமி அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

புதுச்சேரியில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவுடன் கூட்டணியுடன் காங்கிரஸ் கட்சி 17 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை முதலமைச்சராக அறிவித்தது காங்கிரஸ் மேலிடம். தேர்தலில் போட்டியிடாத ஒருவர் முதல்வராக பதவியில் அமர்ந்தால் ஆறு மாதங்களுக்குள் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது தேர்தல் விதி. அதன்படி நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட நாராயணசாமிக்கு விடுதலை சிறுத்தைகள், இந்திய கம் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. அவரை எதிர்த்துப்ப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக போன்றவை ஆதரவளித்தது. 19ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்த வாக்குப் பதிவில் மொத்தமுள்ள 31,362 வாக்காளர்களில் 26,985 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தனர். இதில் ஆண்கள் 12,551 (83.99%) பேரும், பெண்கள் 14,344 (87.37%) பேரும் வாக்களித்தனர். மாலை 5 மணிக்கு பதிவான வாக்குகளின் மொத்த விகிதம் 85.76%. இது கடந்த மே மாதம் இந்த தொகுதியில் நடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளை விட 0.33 விகிதம் அதிகம். 

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முதல்வர் நாராயணசாமியே முன்னிலையில் இருந்தார். முதல் சுற்றில் 3,961 வாக்குகளிலும், இரண்டாவது சுற்றில் 7,538 வாக்குகளிலும் முன்னிலையில் இருந்த நாராயணசாமி இறுதி சுற்றான மூன்றாவது சுற்றில் 18,709 வாக்குகள் பெற்று 11,144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இறுதி சுற்று நிலவரம்:

நாராயணசாமி(காங்கிரஸ்) - 18,709

ஓம்சக்தி சேகர்(அதிமுக) - 7,565

ரவி அண்ணாமலை (நாம் தமிழர்) - 90

நாராயணசாமிக்கு ஆதராவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாகவும், திட்டமிட்டு வாக்குப்பதிவு சாதனங்களையும் அவருக்கு சாதகமாகவே மாற்றிவிட்டதாகவும் குற்றம் சாட்டிய அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர், இரண்டாவது சுற்று எண்ணிகையின் போதே வாக்கு எண்ணிக்கை மையத்தைவிட்டு வெளியேறினார். நாராயணசாமி வெற்றி பெற்றிருப்பதை அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.

 

மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் 18,506 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 6,365 வாக்குகள் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஜெ.முருகன்

 படங்கள்: அ.குரூஸ்தனம்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!