வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (30/11/2016)

கடைசி தொடர்பு:11:59 (30/11/2016)

கோஷ்டி பூசலால் போட்டி போட்டு பட்டாசு.... புகைக்கு மயங்கிய இளங்கோவன்!

கோவை : தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோஷ்டி பூசலால் போட்டி போட்டு வைத்த பட்டாசு புகையின் காரணமாக அவர் உடல்நலிவுற்றதாக கூறப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள்  அமைச்சர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "ரூபாய் நோட்டுகள் பிரச்சனையால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆனால் மோடி எந்த ஒரு கவலையும் இல்லாமல் தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறார் . அன்றாடம் வேலைக்குச்செல்லும் ஏழை எளிய மக்களின் கஷ்டங்கள் மோடிக்குத் தெரிகிறதா? இல்லை தெரியாதது போல் நடிக்கிறார என்று தெரியவில்லை . ரயில் நிலையத்தில் மோடி டீ விற்றவர் என சொல்கிறார்கள் ஆனால் அப்படிபட்ட ஏழைகளின் கஷ்டங்களை ஏன் மோடி உணரவில்லை .

இந்திராகாந்தி ஆட்சியிலும்  மக்கள் வங்கி முன்பு வரிசையில் நின்றார்கள் ஆனால் இப்படி பட்ட பிரச்சனையால்  இல்லை விவசாயத்துக்கு நிதி வாங்கவும், இழப்பீடுகள் பெறவுமே நின்றார்கள். இதைப்போல துயரத்தை அடைய இல்லை," என்றவர், "என்னால் அதிக நேரம் பேச முடியாது' எனச்சொல்லி உரையை சுருக்கமாகவே முடித்துக்கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுத்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நேற்று இரவு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இளங்கோவனின் உடல்நிலையில் முன்னேற்றம் எற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களாகவே உடல்நலக்குறைவில் இருந்த இளங்கோவனுக்கு, அதிகளவு பனிப்பொழிவு உள்ளிட்ட காரணத்தால் சளி பிடித்திருக்கிறது. இந்நிலையில் நேற்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த இளங்கோவனை வரவேற்க வைத்த பட்டாசு புகையின் காரணமாக அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புகையினால் மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்பட்டு, அதுவே மூச்சுத்திணறல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுகிறது.

இதற்கு கோஷ்டி பூசலும் ஒரு காரணம் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். "கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பங்கேற்ற நிலையில், இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆதரவாளர்களிடையே தலைவர்களுக்கு வரவேற்பு கொடுப்பதில் போட்டி நிலவியது. இந்த போட்டியில் அதிக பட்டாசுகளை வெடித்து, மாலையிட்டு வரவேற்பு கொடுத்து அசத்தினர் இளங்கோவன் ஆதரவாளர்கள். திருநாவுக்கரசருக்கு அந்தளவு வரவேற்பும் இல்லை. ஆரவாரமும் இல்லை. இளங்கோவனை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் வெடித்த அளவுக்கு அதிகமான பட்டாசே அவரது உடல்நலக்குறைவுக்கு காரணமாகி போனது," என்கிறார்கள்.

உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ள இளங்கோவன் இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும், கண்காணிப்பு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- கே.சின்னதுரை,

படங்கள் : தி.விஜய்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்