"நம்ம குல சாமி இது, கும்பிட்டுக்கப்பா!” - ஜெயலலிதா சமாதிக்கு ஒரு விசிட்

இடம் - மெரினா கடற்கரையில், எம். ஜி. ஆர் சமாதிக்கு பின்,  ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதி. 

நேரம்  - இன்று காலை 9.30 மணி.

ஜெயலலிதா

சரியாக 36 காவலர்கள்  ஜெயலலிதாவின் பூத உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள்,  வரிசையில் நின்ற அனைவரும், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை நெருங்க, நெருங்க ஒருவித பயபக்தியோடு, முகம் இறுகிப்போயினர்.  அதிமுகவின் உண்மை தொண்டர்கள் இடத்தை நெருங்கியதும் ஓவென பெருங்குரல் எடுத்து அழுகிறார்கள், "உசுரோட இருக்குறப்போ உங்களை நெருங்கவே விடாம தடுத்தாங்கம்மா, இப்போ நாங்க இவ்ளோ பக்கத்துல வந்துருக்கப்ப, மண்ணுக்குள்ளே போயிட்டேயேம்மா" என கதறியழுதார் ஒரு ரத்தத்தின்  ரத்தம். ஒரு பெண் காவலாளி அவரை தேற்ற,  இரண்டடி நகர்ந்தவர்  திடீரென விழுந்து கும்பிட்டு, "அநியாயமாக உங்களை அனுப்பிட்டாங்களேம்மா " என மீண்டும் கதறியபடியே அந்த இடத்தை விட்டு நகர மனதில்லாமல் நிற்கிறார், ஆறுதல் சொல்லி போலீசார்  அனுப்பி வைக்கிறார்கள். 

நிமிடங்கள் நகர நகர, வரிசை நகர முடியாத அளவுக்கு பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கிறது.  நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை நெருங்கும் வரையில் எல்லோரும் இயல்பாகவே இருக்கிறார்கள். நெருங்கியதும் வாடிப் போகிறார்கள். சுமார் ஆறு வயது சிறுவனை கூட்டி வந்த, நாற்பது வயது கருப்பு வெள்ளை சிவப்பு கரைவேட்டிக் காரர்,  அந்தச் சிறுவனிடம் "நம்ம குல சாமி இது, கும்பிட்டுக்கப்பா" எனச் சொல்கிறார், சிறுவனும், தகப்பனும் கும்பிட்டு விட்டு நகர்கிறார்கள், இருபதுகளின் கடைசி வயதில் இருக்கும் இரண்டு வாலிபர்கள் அங்கே செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள், குடும்பத்தோடு வந்தவர்கள் மவுனமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், அயல்நாட்டுப் பெண்மணி ஒருவர் கேனான் கேமராவில் புகைப்படங்களாக கிளிக்கித் தள்ளிக் கொண்டிருந்தார், மாடர்ன் உடையில் வந்த இரண்டு சென்னை யுவதிகள் ஆசிர்வாதம் வாங்குவது போல பக்தியோடு குனிந்து கும்பிட்டுச் செல்கிறார்கள். 

நினைவிடத்துக்கு அருகிலேயே சென்னை மாநகராட்சி சார்பில் வயதானவர்கள், நோயாளிகள் போன்றோருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கிக் கொண்டிருந்தார்கள், அருகிலேயே ஒரு கூடாரத்தில் மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள், சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

 " கோயமுத்தூர் பக்கம் அவினாசியில் இருந்து வாரேனுங்க, எந்த கட்சியும் எனக்கு புடிக்காதுங், ஆனா அம்மாவை மட்டும் அப்போதிலிருந்து புடிச்சு போச்சு. அம்மா எப்பிடியாவது பொழைச்சிடுவாங்க, இரும்பு மனுஷினு நம்பிக்கையா தானுங் இருந்தேன், இப்பிடி பொசுக்குன்னு நம்மள விட்டுப்போட்டு போவாங்கனு நெனைக்கலை. சத்தியமா என் குடும்பத்துல ஒருத்தரா தான் அவுகளைப் பார்த்தேன். வூட்டுல பொஞ்சாதியும், மவனும் சென்னைக்கு வண்டியேற வேணாம்னு தான் சொன்னாங்க, மனசு தாங்கலைங், இன்னிக்கு தான் வர முடிஞ்சது, நான் வந்தது என் பொஞ்சாதிக்கு இப்ப வரைக்கும் தெரியாது, இனிமேல் தான் தகவல் சொல்லோணும்" எனச் சோகமாகச்  சொல்கிறார் செல்லையா.  

ஜெயலலிதாவுக்காக பெண்களும் மொட்டை போடுகிறார்கள், செங்கல்பட்டில் இருந்து வந்த ராஜேந்திரன், குடும்பத்தோடு மொட்டைப்போட்டுக் கொண்டிருந்தார், விவரங்களைக் கேட்ட போது அமைதியாகச் சொல்லிக் கொண்டிருந்தவர், நமது புகைப்பட நிருபர் கேமராவை தூக்கியதும், திடீரென அழ ஆரம்பித்தார், குழந்தைகளை கும்பிடச் சொல்லி கட்டாயப்படுத்த ஆரம்பித்தார், "எப்பங்க டிவில வரும்"  என்றவரிடம், இது வீடியோ இல்லிங்க, போட்டோ தான் எடுக்குறோம்னு சொன்னவுடன், அழுகையை நிறுத்தியவர், "அம்மா தாங்க எனக்கு எல்லாம், அதுக்கப்புறம் தாங்க இதுங்க எல்லாம்" எனச் சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக்கொண்டார். கொஞ்சதூரம் கடந்த பிறகு திரும்பிப்பார்த்த போது ஏதோ ஒரு டிவி சேனலுக்கு ஒட்டுமொத்த குடும்பமும் அழுது புலம்பி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தனர்..

மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் மக்களுக்கு, அதிமுக சார்பிலேயே சாப்பிடுவதற்கு உணவுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. பொங்கலும், தக்காளிச் சட்னியும் இருந்த அந்த பொட்டலத்தை ஆர்வமாய் வாங்கிப் பிரித்து, ஓரமாய் உட்கார்ந்து மக்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள். சாப்பிடும் இடத்தில் கவலைகளை மறந்து சந்தோஷமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் இன்னொரு ரவுண்ட் அஞ்சலி, இன்னொரு உணவுப் பொட்டலம் என ஒன்ஸ்மோர் போட்டுக் கொண்டிருந்தார்கள். 

சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், திடீரென வந்தார், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான பிளான்கள் குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்க ஆரம்பித்தார்கள். “பாதுகாப்புக்கு நின்ற போலீசாருக்கு சாப்பாடு வந்தாச்சா? வரலைன்னா கரெக்ட்டா ஏற்பாடு பண்ணிருங்க, பாவம் இராத்திரி, பகலா நின்னுட்டு இருக்காங்க”  என சொல்லிவிட்டு கிளம்பினார். 

ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்டதையொட்டி, எம்.ஜி,ஆர் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுமக்கள் யாரையும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே,  போலீசார் அனுமதிக்கவில்லை. 

"திண்டுக்கல்லில் இருந்து வாரோம், சென்னை எங்களுக்கு புதுசு, வாத்தியார் எம்.ஜி.ஆர் சமாதிக்கு வரணும்ங்கிறது  இருவது வருச கனவு. நாங்க இரட்டை இலைகாரவுக தான். கொஞ்சம் அனுமதி குடுங்க சார்" என கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர், போலீசார் மறுக்கவே சோகமாக கையில் இருந்த உணவுப் பொட்டலத்தை  தரையில் தூக்கிப் போட்டுவிட்டு கிளம்பினார்.

"சார், அம்மா என்ன பெத்த தாயி, எனக்கு சோறு போட்டவ, கட்டியிருக்க சேலைல இருந்து, சுருக்கு பை வரைக்கும் எல்லாம் அந்த மகராசி தந்த முதியோர் உதவித் தொகை பணம் தான், இல்லன்னா நான் பிச்ச எடுத்துருப்பேன். அம்மா செத்ததும் திருவண்ணாமலைல இருந்து வந்துட்டேன். மூணு நாளா அம்மா  சமாதில தான் இருக்கேன், அம்மா எந்திரிச்சு வரமாட்டாங்களானு  காத்திருக்கேன்" என கதறியழுதார் பழனியம்மாள்.

"அம்மா சாவில் மர்மம் இருக்கு, அவங்க கன்னத்துல ஏதோ நாலு ஓட்டை இருந்துதாம், சசிகலாவ அம்மா சேர்த்திருக்கவே கூடாது" 

"அந்த  கொடிக்கும், இரட்டை இலைக்கும் தான் எப்பவும் எங்க ஓட்டு, தலைவருக்கு அப்பறம் அம்மா வந்தாங்க, அம்மாவுக்கு அப்பறம் இந்த இரண்டும் யாருக்கு இருக்கோ அவங்களுக்கு தான் என் ஒட்டு, அதிமுக என்னிக்கும் அழியாது"

"தப்பு செய்றவுக யாரையும் அம்மா தண்டிக்காம விட்டதே இல்லை, அம்மா அசந்த நேரம் பாத்து அவங்களுக்கு ஏதோ பெரிய தப்பு நடந்திருக்கு, அம்மா ஆவியாக வந்து அவங்களுக்கு தக்க தண்டனை குடுப்பாங்க"

" இப்பத்தாண்டா அம்மா போன் பண்ணாங்க, அவங்க சார்பா அம்மா  நினைவிடத்துல கும்புட சொன்னாங்க இரு... இன்னொரு தடவ  போய் கும்பிட்டுட்டு வர்ரேன்" 

"எம். ஜி. ஆர்   சமாதியை விட பெரிய சமாதியா கட்டுவாங்க போலடி. கொடுப்பினை இருக்கு கட்ட வேண்டியதான்"

"நமக்குலாம் அம்மா சமாதி தான் இனி கோவில்.  இனிமேல் செவ்வாய்கிழமை அம்மா சமாதி வந்து கும்பிட்டுட்டு தான் சோறாக்கணும் புரியுதா"

" எவ்வளவோ பண்ண மகராசி, ஆட்சியை பத்தி கவலைப்படாம இந்த  டாஸ்மாக்கையும்  க்ளோஸ் பண்ணிட்டு போயிருக்கலாம்ல, என்ன இருந்தாலும் ஒரே ஒரு நம்பிக்கை இருந்துச்சு, இப்ப அதுவும் போச்சு"

"வந்தது தான் வந்துட்டோம், அப்பிடியே அண்ணா சமாதி, கடல், கண்ணகி சிலை, லைட் அவுஸ் எல்லாம் பாத்துட்டு போயிருவோம், இனிமேல் பிகினிக் மாதிரி இந்த இடம் ஆயிடும் போல"

"லஞ்சம், ஊழல், ஆணவம்,  எல்லாம் அந்த  ஜெயலலிதாகிட்டஇருந்துச்சு, எனக்கு அவங்கள அரசியல்வாதியா புடிக்கவே புடிக்காது, அம்மானு கூப்பிட்டதே இல்ல, ஆனா டிவில  உயிரில்லாத அந்த உடலை பாத்ததும் மனசு பதறி அம்மான்னு சொன்னேன்டா, மனசு கேக்கல  அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

" நல்ல சாவுடா, நடிகையா, முதலைமைச்சரா அவங்க பாக்காத உயரம் இல்ல, வாழ்ந்தா அம்மா மாதிரி வாழணும்டா"

" 75 நாள் மொகத்த கூட காமிக்காம, செத்ததுக்கு பொறவு எடுத்துட்டு வாரானுக, எல்லாம் நாடகம், அம்மாவ யாரோ ஏமாத்திட்டாங்க" 

" சினிமால மட்டும் தான்  ஹீரோ  செத்த இடத்துக்கு ஹீரோயினும் போவானு நெனச்சேன், ஆனா தலைவர் காட்டிய பாதையில வாழ்ந்து கடைசில தலைவர் பக்கத்துலயே வந்துட்டாங்க பாத்தியா... அம்மா கெத்து!  இறைவனும் இறைவியும் சேர்ந்திருக்க இந்த இடம் தான்டா நமக்கு கோவில்"

"வாத்தியார போலவே அம்மாவையும் வாட்ச்சோட பெட்டில அடக்கம் பண்ணிட்டாங்க,  வாட்ச் 25 லட்சமாம். நேத்து ராத்திரி அமைதியா இருந்தப்ப அங்கையும் டிக் டிக் சவுண்ட் கேட்டுச்சாம்"

ஜெயலலிதாவுக்கு அருகில் தான் இப்படி  பல குரல்கள் பேசிக்கொண்டிருக்கின்றன, ஆனால் இதையெல்லாம் அவரால் கேட்க முடியாதல்லவா...! இனி அதிமுகவில்  அடிமட்டத் தொண்டன் யாருக்கு ஃபேக்ஸ் அனுப்ப போகிறான்? 

- பு.விவேக் ஆனந்த்

படங்கள்: பா.காளிமுத்து 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!