‘தமிழக அரசியலில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது!’ - துரைமுருகன்

ராமநாதபுரம் : “தமிழக அரசியல் சூழல் இதுவரை சந்திக்காத சூழல். தமிழக அரசியலிலும் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என தி.மு.க.முதன்மைச் செயலர் துரைமுருகன் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற தி.மு.க. முதன்மைச் செயலர் துரைமுருகன், மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,

இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற மோடி அரசு முயன்று வருகிறது. இன்று ஒரே திருமண சட்டம் கொண்டு வர முயல்பவர்கள் நாளை ஒரே கடவுளைத்தான் வணங்க வேண்டும் என சட்டம் போடுவார்கள். மோடி அரசு மத்தியில் ஆட்சி செய்வது ஒரு விபத்து. அந்த விபத்து மீண்டும் நடக்க நாம் இடம் கொடுக்கக் கூடாது.

பி.ஜே.பி ஆட்சியை போன்றதுதான் தமிழகத்தின் அ.தி.மு.க ஆட்சியும். இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. உகாண்டாவில் என்ன நடக்கிறது. ஆப்பிரிக்காவில் என்ன நடக்கிறது. இங்கிலாந்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் கேளுங்கள் என்னால் சொல்ல முடியும். ஆனால் தமிழ்நாட்டு ஆட்சியில் என்ன நடக்கிறது என யாருக்கும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. தமிழகத்தில் தற்போது உருவாகியுள்ள சூழல் இதுவரை தமிழகம் சந்திக்காத சூழல். நாளை விடிந்தால் என்ன நடக்குமோ என தெரியாத சூழல். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வருவதற்கான அறிகுறி தூரத்தில் தெரிகிறது. அது சட்டமன்றத்திற்கா? நாடாளுமன்றத்திற்கா? என தெரியவில்லை.

புயல் வரும் அறிகுறியை தெரிந்து கொள்ளலாம் ஆனால் அது ஏன் வருகிறது என்பதை அறிய முடியாது. இப்போது புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ளவேண்டும். இப்போது நம் வண்டியை ஓட்ட முடியாவிட்டால் இனி எப்போதும் ஓட்ட முடியாது. எனவே தமிழகம் முழுவதும் உள்ள நம் கட்சியினர் தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கோஷ்டி பூசலை மறந்து ஒற்றுமையாக இயங்க வேண்டும்," என்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலாவை கட்சியின் சீனியர்கள் முன்மொழிந்துள்ள நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

- இரா.மோகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!