வெளியிடப்பட்ட நேரம்: 07:29 (14/12/2016)

கடைசி தொடர்பு:12:05 (14/12/2016)

பிரபாகரனின் அண்ணா 'பாலசிங்கம்!' #BalasingamMemorialDay!

பாலசிங்கம்

ஈழ விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் அரசியல் அடையாளமாக, ஒலித்த குரல் அடங்கி சரியாக பத்தாண்டுகளாகி விட்டன.

இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் ஆன்டன் பாலசிங்கம். கல்லூரிப் படிப்பு முடித்ததும் 'வீரகேசரி' எனும் தமிழ் நாளிதழில் பணிபுரிந்தார். பின், சிறிதுகாலம் பிரிட்டிஷ் தூதரகத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் அடுத்து, லண்டனில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். அப்போதைய காலக்கட்டத்தில் பல நூல்களை மொழிபெயர்க்கவும் செய்தார். அடேல் எனும் ஆஸ்திரேலியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

1979-ம் ஆண்டுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை முதன்முதலாக சந்திக்க நேர்ந்தாலும், பாலசிங்கத்தின் எழுத்துகள் வழியாக இருவரும் அதற்கு முன் உரையாடியிருக்கின்றனர். நெடுநாள் உறவுபோல இருவரும் அன்பு பாராட்டிக்கொள்கின்றனர். நீண்ட உரையாடல் வழியாக, ஆயுதப்போராட்டத்துடன் சரியான அரசியல் கோட்பாடும் இணைய வேண்டிய அவசியத்தைப் பகிர்கிறார் பாலசிங்கம்.  ஆங்கில மொழியில் உள்ள பல கட்டுரைகளை பிரபாகரனுக்கு தமிழில் மொழியாக்கம் செய்தும் தருகிறார். அவரின் மனைவி அடேலை 'அன்டி' என்றே அழைக்கிறார் பிரபாகரன்.
பாலசிங்கத்தின் ஆலோசனைகளைப் பற்றி பலர் எதிர்மறையாக சொன்னபோதும், அதை ஒருபோதும் பிரபாகரன் நம்பவில்லை. பிரபாகரனின் திருமணத்தை முன்னின்று நடத்தியும் வைக்கும் அளவுக்கு நெருக்கமாகிறார். அதன்பின், பேராசிரியர் வேலையைத் துறந்து புலிகள் இயக்கத்தின் அரசியல் முகமாக செயல்படத் தொடங்குகிறார். அடேலும் போராளிகளுக்கான பயிற்சிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறார்.

பாலசிங்கம், மனைவியுடன் சென்னையில் வசித்தபோது கொலை முயற்சியில் நூலிழையில் தப்புகிறார். கடலைப் பார்த்தபடியான வீட்டின் முதல் மாடியில் இருவரும் வசித்துவந்தனர். அதன் மொட்டை மாடியில் குண்டு வெடிக்க, இருவரும் தப்பியது அதிசயமே. அதன்பின் அந்த வீட்டைச் சீரமைக்க பணம் தந்தும், வீட்டைக் காலி செய்ய வேண்டியாதயிற்று. சென்னையில் இருவருக்கும் வேறு  வீடு கிடைப்பது எளிதாக இல்லை.

விடுதலைப் புலிகளின் பல சிக்கலான நேரங்களில் பாலசிங்கம் தன் அரசியல் திறத்தால் மிகவும் உறுதுணையாக இருந்தார். குறிப்பாக, இந்தப் பிரச்னையில் மூன்றாம் நாடு யாரேனும் ஈடுபட்டால் நல்லது என அதற்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைப்பாக இருந்தார். அதுமட்டுமல்லாமல், உலக நாடுகள் மத்தியில் ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டுவதை குறிக்கோளாக்கி அலைந்தார். புலிகளின் சார்பில் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளும் நபராகவும் 2002-ம் ஆண்டில் உலகம் முழுவதும் வந்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பிரபாகரனின் பேச்சை மொழிபெயர்த்துச் சொல்பவராக இருந்தார். இந்திய அமைதிப் படை ஈழத்தைச் சூழந்திருந்த காலத்திலும் துணிவோடு, ஆலோசனைக்கு சென்றவர்.

எந்தச் சூழலிலும் பதட்டத்தை முகத்தில் காட்டாது, இன்முகத்தோடும் அதேசமயம் கருத்தியலிலிருந்து துளியும் சமசரசம் செய்துகொள்ளாதவராக விளங்கினார் பாலசிங்கம். 2006-ம் ஆண்டு இதே நாளில் தான்  இரு சிறுநீரகங்களும் பழுதடைய இவ்வுலகை விட்டு அகன்றார். பாலசிங்கம் மறைவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தம் வீட்டின் இறப்பாகவே கருதினர். உலக நாடுகள் பலவும் அஞ்சலி செலுத்தின. பிரபாகரன் தம் அஞ்சலியில் தேசத்தின் குரல் எனக் குறிப்பிட்டிருந்தார். அதில் சில வரிகள்:

"ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் ராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்" என்ற மாபெரும் கௌரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார். "

- வி.எஸ்.சரவணன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்