Published:Updated:

`கட்சிக்காகக் கல்யாணமே செய்து கொள்ளவில்லை!'- தி.மு.க-வைக் கலங்கவைத்த பாப்பாத்தி பாட்டியின் மரணம்

ஸ்டாலினுடன் பாப்பாத்தி அம்மாள்
ஸ்டாலினுடன் பாப்பாத்தி அம்மாள்

கட்சி மேல் கொண்ட காதலால், திருமணமே செய்து கொள்ளாமல் 75 வயது வரை வாழ்ந்து மறைந்திருக்கிறார் பாப்பாத்தி அம்மாள்.

ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (75). தி.மு.க-வின் தீவிர அபிமானி. கட்சியின் அனைத்து நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்துகொள்வது இவரின் வழக்கமாக இருந்து வந்தது. கட்சி மேல் கொண்ட காதலால் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறார். கட்சிக்காரர்கள் கொடுக்கும் சிறுதொகையை வைத்துத்தான், வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

பாப்பாத்தி அம்மாள்
பாப்பாத்தி அம்மாள்

சென்னையில் மாவட்டவாரியாக தி.மு.க-வின் களஆய்வுக் கூட்டம் நடந்தபோது, தனி ஆளாக அறிவாலயத்துக்குச் சென்று வந்தார். தொடர்ந்து, கருணாநிதி உடல்நலிவுற்று இருந்தபோது, அதுகுறித்து நேரில் சென்று விசாரிக்க நினைத்தும் முடியாமல் சோகத்துடன் ஊர் திரும்பினார். இந்தத் தகவலை அறிந்து பாப்பாத்தி அம்மாவை சென்னைக்கு வரவழைத்து, அரைமணி நேரம் கருணாநிதியின் அருகிலேயே இருக்க வைத்து அனுப்பினார் ஸ்டாலின். அத்துடன் விருந்து உபசரிப்பும் செய்து அனுப்பினார். இப்படிக் கடைசிவரை கட்சி, அண்ணா, கலைஞர் எனத் தீவிரப் பற்றுடன் இருந்த பாப்பாத்தி அம்மாள் நேற்று மரணமடைந்துவிட்டார். பாப்பாத்தி அம்மாளின் இறப்பு ஈரோடு உடன்பிறப்புகளையும் தி.மு.க தலைமையையும் வருத்தமடைய வைத்திருக்கிறது.

கருணாநிதி இல்லாத  கோபாலபுரம்!

இதுகுறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், `பாப்பாத்தி அம்மையார் கழகத்தின்மீது கொண்ட பற்றின் காரணமாக, அவரை வரவழைத்து கலைஞரைச் சந்திக்கச் செய்தேன். என்னுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அம்மையார் பாப்பாத்தி போன்ற பயன்கருதா தொண்டர்களால் நிலைத்திருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். அப்படியானவர் மறைவெய்தினார் என்ற செய்தி வேதனையை அளிக்கிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாப்பாத்தி அம்மாள்
பாப்பாத்தி அம்மாள்

அண்ணாவின் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற ஈரோடு தி.மு.க-வினரிடம் பாப்பாத்தி அம்மாள் இறந்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. உடனே அங்கிருந்து கிளம்பிய தி.மு.க நிர்வாகிகள் பலரும் பாப்பாத்தி அம்மாளின் வீட்டுக்குச் சென்றனர்.

தன் வாழ்வின் கடைசி வரை கட்சியே தன்னுடைய மூச்சு என வாழ்ந்த பாப்பாத்தி பாட்டியின் இறுதிச் சடங்கில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். தொடர்ந்து, அவருடைய உடலில் கட்சியின் கொடியைப் போர்த்தி அடக்கம் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு