வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (26/12/2016)

கடைசி தொடர்பு:17:45 (26/12/2016)

ஸ்டாலினுக்கு 'புத்தாண்டு பரிசு' செயல்தலைவர் பதவி? தி.மு.க பொதுக்குழுவில் அறிவிக்க திட்டம்!

தி மு க ஸ்டாலின்-கருணாநிதி

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதை அடுத்து, ஜனவரி 4-ம் தேதி, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில், தி.மு.க பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க தலைவர் கருணாநிதி டிசம்பர் மாதத்தில் உடல்நலக்குறைவால் இரண்டுமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். ஏற்கெனவே, அவருக்கு மாத்திரையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டதால், டிசம்பர் 1-ம் தேதி அதிகாலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, மரணம் பற்றிய செய்தி, கருணாநிதியிடம் மருத்துவமனையில் இருந்தபோதுதான் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அறிக்கை அளித்தார். இதனைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். 

இதற்கிடையே, தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடந்த 20-ம் தேதியே (டிசம்பர் 20) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நுரையீரல் தொற்று காரணமாக, கருணாநிதி டிசம்பர் 15-ம் தேதி மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த தி.மு.க பொதுக்குழு கூட்டம் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. எனினும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தெரிவித்த மருத்துவமனை அறிக்கை, சக்கர நாற்காலியில் கருணாநிதி அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டது. இதனை அடுத்து அவர், கடந்த 23-ம் தேதி வீடு திரும்பினார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட தி.மு.க பொதுக்குழு கூட்டம், கருணாநிதி தலைமையில் வரும் 4-ம் தேதி நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் வெளியிட்டுள்ளார். 2017-ம் ஆண்டில் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் என்பதால், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடைய மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா அறிவாலயம்டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்குழு கூட்டத்தில், மு.க. ஸ்டாலினுக்கு கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும், கட்சித் தலைவர் கருணாநிதியே அந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தி.மு.க வட்டாரங்களில் பரவலாக பேச்சுகள் வெளியாகின.

தற்போது கட்சியின் பொருளாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கும் ஸ்டாலினுக்கு, செயல் தலைவர் பதவி வழங்கப்படும்பட்சத்தில், அது கூடுதல் அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற, தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, உடல்நிலை கருதி, கருணாநிதி குறிப்பிட்ட நகரங்களிலேயே பிரசாரம் செய்தார். ஆனால், மு.க. ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, தி.மு.க-வுக்கு வாக்குசேகரித்தார். அதன்பயனாக தி.மு.க 89 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

இந்த நிலையில், தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவை அடுத்து எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து, தி.மு.க பொதுக்குழுவில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலையைக் கருதி, பொதுக்குழு கூட்டம் குறைந்த அளவு நேரமே நடைபெறும் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டாலினுக்கு புதிய பதவி வழங்கப்பட்டாலும், தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகுமா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. எது எப்படியோ, வரும் புத்தாண்டில் மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி அளிக்கப்படுவது மட்டும் உறுதி. 

சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்