வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (29/12/2016)

கடைசி தொடர்பு:17:50 (29/12/2016)

நோபல் பரிசுக்கான விதிகளும் தேர்வு முறைகளும்.. ஒரு பார்வை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நோபல் பரிசு பெற தேவையான தகுதிகளும், தகுதியானவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறைகளையும் பற்றி பார்ப்போம்...

நோபல்

யார் யார் பரிந்துரைக்கலாம்?

ஓர் இறையாண்மை நாட்டிலுள்ள அரசாங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக வேந்தர்கள், வரலாறு, தத்துவம், அரசியல், சட்டம் ஆகிய துறைகளின் பேராசிரியர்கள், அயல் உறவு துறைகள் உள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அனைத்துலக நீதிமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், நார்வே நாட்டின் நோபல் கமிட்டியின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், நார்வே நோபல் கமிட்டியின் முன்னாள் ஆலோசகர்கள் போன்றோர் மட்டுமே பரிசு பெற தகுதியானவர்களின் பெயரை பரிந்துரைக்கமுடியும். இவர்கள் தங்கள் பரிந்துரைகளை செப்டம்பர் மாதம் முதல் ஓஸ்லோவில் உள்ள நார்வே நோபல் கமிட்டிக்கு அனுப்புவார்கள்.

இத்தனை வெளிப்படையாக உலகம் முழுவதும் இருந்து பரிந்துரைகளை ஏற்பதே, பல்துறைகளிலும் வெற்றிகரமாகவும் மனிதகுலத்தின் மீது அன்புடனும்  இயங்கும் மனிதர்களை அடையாளம் காண்பதற்காகத்தான் என்கின்றனர் தேர்வுக் குழுவினர். இந்தப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் யாரெல்லாம் விண்ணப்பிக்கப்பட்டார்கள்,  யார் பெயரெல்லாம் பரிசீலிக்கப்பட்டது என்பதை நோபல் கமிட்டியின் விதிமுறைப்படி 50 ஆண்டுகள் கழித்துதான் வெளியிடுவார்களாம்.

காலக்கெடு

பரிந்துரைகளை அனுப்பும் காலக்கெடு அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தோடு நிறைவடைந்துவிடும். பிப்ரவரி - மார்ச் மாதங்களில், வந்திருக்கும் பரிந்துரைகளின் பட்டியலில் இருந்து, சுருக்கப் பட்டியல் தேர்வாகும். யாருக்கு விருது வழங்குவது என்கிற ஆய்வு  எட்டு மாதங்கள் வரை நடக்கும். 5 நபர்களின் தலைமையிலான நார்வே குழு மட்டுமின்றி சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொள்வார்கள்.

தேர்வுமுறை

ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்படும். அரசியல்வாதிகளாக இருந்தால் எத்தகைய அரசியலை அவர்கள் செய்து வந்தார்கள் என்பதில் தொடங்கி பலநூறு கேள்விகள் மூலம் ஒரு தேர்வு பட்டியலை உருவாக்குவார்கள். அதன் பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறிய வாக்கெடுப்பு நடக்கும். பிறகுதான், பரிசுக்கான பட்டியலை வெளியிடுவார்கள். பின்னர், ஆல்ஃபிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் நாள் அன்று, அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் உள்ள ஓஸ்லோ நகரில் வழங்கப்பட்டு, பரிசு பெறுவோரின் சொற்பொழிவு நடைபெறும். மற்ற துறைக்கான பரிசுகள் அதே நாளில் சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படும். இங்கு பரிசு பெறுவோரின் சொற்பொழிவு இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடைபெறும். கடந்த 1964-ல் உலகம் முழுவதும் இருந்து நாமினேட் செய்யப்பட்டவர்களின் பட்டியலே கடந்த ஜனவரியில்தான் வெளியிடப்பட்டது. அதில் இந்தியாவை சேர்ந்த வினோபா பாவே அவர்களை ஒருவரும், சுவாமி மகரிஷி மகேஷ் அவர்களை இரண்டு பேர்களும் பரிந்துரை செய்திருந்தனர். இந்த பட்டியலில் மார்ட்டின் லூதர் கிங்கை இரண்டு பேர் பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஜெயலலிதாவிற்கு அமைதிக்கான நோபல் வழங்கவேண்டும் என்கிற தீர்மானமும் ஒன்று. ஆனால் "1974-ம் ஆண்டில் இருந்து மரணமடைந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. ஒருவர் விருது பெற தேர்வான பின்னர், விருது வழங்கப்படுவதற்கு முன்பே மரணித்துவிட்டால் அவருக்கு பரிசு வழங்கப்படும்" என நோபல் கமிட்டியின் விதிமுறை சொல்கிறது.

 - ப.சூரியராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்