ஜெயலலிதாவை வியக்க வைத்த குதிரை வண்டிக்காரர்!! | Horse cart driver surprised jayalalithaa

வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (30/12/2016)

கடைசி தொடர்பு:17:08 (30/12/2016)

ஜெயலலிதாவை வியக்க வைத்த குதிரை வண்டிக்காரர்!!

ஜெயலலிதா

எதிலும் கறாராக இருப்பவர்களைக் கண்டாலே எனக்கு (ஜெயலலிதா) ரொம்பவும் பிடிக்கும். எல்லாவற்றிலும் அப்படி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் ஓயா முயற்சியுங்கூட.

கறாராக இருப்பது எளிதான காரியமல்ல. அதற்கு நிறைய மன உறுதி வேண்டும். சில அடிப்படை லட்சிய கோட்பாடுகளை நமக்கு நாமே விதித்துக் கொண்டு, அவற்றின் படி நடக்கும் திடநம்பிக்கையும் இருக்க வேண்டும். அதற்காகப் பிறர் நம்மை ஏளனமாகப் பேசினாலும், பரிகாசம் செய்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாது, நமது லட்சியத்தை விட்டுக் கொடுக்காது அதனைக் காப்பாற்றி நிற்கக் கூடிய துணிவும் தேவை.

பொதுவாக, ஒருவர் பணம் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்தே அவரை எடை போட்டு விட முடியும். ஒருவர் பணம் கொடுப்பதிலும் பெற்றுக் கொள்வதிலும், கறாராக இருந்தால் அப்படிப்பட்டவரை எதிலும் நம்பலாம். அவரை ''நல்லவர், நாணயமானவர்" என்று மதிக்கலாம்.

பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஒருவரின் நடத்தை சரியில்லை என்றால், பொதுவாக எல்லாவற்றிலுமே அவரது நடத்தை அப்படித்தான் இருக்கும் என்றும் கூறலாம்.

இந்த உண்மையை எனது சொந்த அனுபவத்திலேயே பலமுறை உணர்ந்திருக்கிறேன். என்றாலும், இங்கே குறிப்பிட இருப்பது என் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் அல்ல. ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் முக்கிய பங்குவகிக்கும் இருவருமே கறார் பேர் வழிகள் தாம்:

1887-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் நாள் பிற்பகலில் இங்கிலாந்தின் பிரபுக்களில் ஒருவரான வில்லியம் லார்ட் டிராக்ஸ் தனது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார்.

லார்ட் டிராக்ஸ் பெரிய கோடீஸ்வரர், அவர் இருந்தது பிரைட்டன் என்னும் துறைமுக நகரத்தில். கப்பல் (YATCH) ஓட்டுவதில் அதிக ஈடுபாடு உள்ளவரும், அதில் பெரும் புகழும் பெற்றவர்.

ஒருநாள், வாடகை குதிரை வண்டியை கூப்பிட்டார். அதில் ஏறிக்கொண்டு ''மேற்கு கப்பல் துறைக்கு அழைத்துப்போ" என்று ஆணையிட்டார்.

கப்பல் துறையில் இறங்கிக்கொண்டு வாடகை குதிரை வண்டி ஓட்டுனரைக் காத்திருக்கும் படி கட்டளையிட்டார்.

''எனது புதிய கப்பலை முதன் முறையாக பரிசீலிக்க, ஓட்டிச் செல்லப் போகிறேன். பிற்பகலிலேயே திரும்பி வர உத்தேசித்திருக்கிறேன். எப்படியும் மாலைக்குள் திரும்புவேன். நான் வரும்வரை இங்கேயே காத்திரு. நான் திரும்பியதும் நீ தான் என்னை வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும்" என்றார்.

அந்த வாடகை வண்டி ஓட்டுனரின் பெயர் மார்டின் ஹால்லோவே. அவரும், லார்ட் டிராக்ஸ் கேட்டதற்கு, சம்மதம் தெரிவிக்கின்ற வகையில் தலையை அசைத்தார்.

அன்று பிற்பகல், மாலை முழுவதும் மார்டின் அங்கேயே காத்திருந்தார். லார்ட் டிராக்ஸ் திரும்பவில்லை. வெகு நேரமான பின்பு இரவில் மார்டின் தன் வீட்டுக்குச் சென்றார்.

மறுநாள், அதிகாலையிலேயே மார்டின் மீண்டும் துறைமுக வாசலுக்கு குதிரை வண்டியுடன் வந்து காத்திருந்தார். இப்படியே ஒரு நாள் ஒரு வாரம், ஒரு மாதம் கழிந்து விட்டன. ஆனாலும் தொடர்ந்து மார்டின் காத்திருந்தார்.

அதுவே அவரது வாழ்க்கை முறையாகி விட்டது. தினமும் காலையில் மார்டின் குதிரை வண்டியுடன் துறைமுகத்திற்கு வருவார். இரவு வரை அங்கேயே காத்திருப்பார்.

வேறு யார் வண்டியை வாடகைக்கு அழைத்தாலும் ஏற்றிச் செல்ல மறுத்தார். லார்ட் டிராக்ஸின் மாளிகைக்கு மார்டின் போகவுமில்லை, அவர் எப்போது திரும்பி வருவார் என்று விசாரித்துத் தெரிந்து முயற்சிக்கவுமில்லை. தன்னுடைய விசித்திரமான நடத்தைக்கான விளக்கத்தையும் யாரிடமும் கூறவும் இல்லை. ஒவ்வொரு நாளும் காலையிலிருந்து மாலைவரை பேசாமல் அப்படியே குதிரை வண்டியில் உட்கார்ந்திருப்பார்.

இப்படியே 599 நாட்கள் உருண்டோடி விட்டன. கடைசியில் 1889-ம் ஆண்டு, மே மாதம் 12-ம் தேதி, மார்டினுடைய பிடிவாதம் பலன் அளித்தது.

லார்ட் டிராக்ஸின் கப்பல் துறைமுகத்துத் திரும்பியது. அவரும் இறங்கி வந்தார்.

மார்டினைக் கண்டதும் லார்ட் டிராக்ஸ் இவ்வளவு தாமதமாகத் திரும்பியதற்கு விளக்கம் கூறினார். ''ஒரு நாள் பிற்பகலுக்குள் திரும்பி வரத்தான் உத்தேசித்திருந்தேன். ஆனால் கப்பலில் புறப்பட்டதும், கப்பலின் சீரான, ஆடாத அசையாத போக்கு; குளிர்ந்தகாற்று; இனிமையான சூழ்நிலை எல்லாமே என் மனதுக்கு ரொம்ப இன்பகரமாகப் பட்டன. அப்போதே, அந்தக் கணமே, கப்பலில் உலகசுற்றுப் பயணம் மேற்கொள்ளுவது என்று தீர்மானித்தேன். கிளம்பிவிட்டேன்" என்றார்.

நிதானித்த ஆழ்ந்த தோரணையுடன் மார்டின் தனது சட்டைப் பையிலிருந்து மருள வைக்கக்கூடிய அளவிற்கு நீளமான ஒரு காகிதத்தை வெளியே இழுத்தார்.

''பிரபு அவர்களே இதோ என்னுடைய பில். ஒவ்வொரு நாளுக்கான காத்திருக்கும் கட்டணத்தையும் (WAITING CHARGES) சரிவர கணக்குப் பார்த்து பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். காவல்துறை விதிமுறைகளின்படி வாடகை கட்டணம், காத்திருப்பதற்கான கட்டணம் இரண்டையும் சேர்த்து பட்டியல் போட்டிருக்கிறேன்."

"மொத்தத் தொகை எவ்வளவு?" என்று கேட்டார் லார்ட் டிராக்ஸ். மார்டின் காகிதத்தை நீட்டினார் லார்ட் டிராக்ஸ் பில்லைப் பார்த்தார். ஒரு புருவத்தை உயர்த்தினார். மொத்தத் தொகை 989 பவுண்ட்ஸ், 15 ஷில்லிங்க்ஸ் 6 பென்ஸ் - அதாவது ஏறத்தாழ 5000 டாலர்.

அத்தனை நாட்களாக அவருக்காகவே காத்திருந்து வேறு வாடிக்கைக்காரர்கள் எவரையும் வண்டியில் ஏற்றுச் செல்ல மறுத்து வந்தது குறித்து மார்டின் விளக்கம் கூறினார்.

"ரைட்டோ!" என்றார் லார்ட் டிராக்ஸ். மறுவார்த்தையின்றி, கண்ணை ஒரு முறை கூட இமைக்காமல், உடனே நின்ற இடத்திலேயே அத்தனைப் பெரிய தொகையை செலுத்தி விட்டார்.

குதிரை வண்டியில் ஏறிக்கொண்டார். ''வீட்டுக்கு மார்டின்" என்று ஆணையிட்டார்.

லார்ட் டிராக்ஸின் மாளிகை வாசலில் குதிரை வண்டி போய் நின்றது.

வண்டியை விட்டு இறங்கினார். மறுபடியும் மார்டின் அவருக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். மரியாதை காண்பிக்கும் வகையில் தனது தலையில் அணிந்திருந்த தொப்பியைக் கழற்றி மார்டின் அதனைக் கையில் பிடித்திருந்தார்.

"துறைமுகத்திலிருந்து உங்களை வீடு வரை அழைத்து வந்ததற்கு இரண்டு காசு (ஷில்லிங்) வாடகை நீங்கள் தர வேண்டும்" என்றார் மார்டின் கறாராக.

மறுபடியும் லார்ட் டிராக்ஸ் கட்டணத்தைச் செலுத்தினார். இம்முறை தெரிந்தும் தெரியாத நிழலைப் போல, இலேசான ஒரு புன்முறுவல் அவரது முகத்தில் ஒரே ஒரு கணம் தோன்றியது.

- தாய் வார இதழில் ஜெயலலிதா எழுதிய தொடரின் ஒரு பகுதி.

தகவல் உதவி: குறள் பித்தன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close