வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (03/01/2017)

கடைசி தொடர்பு:17:02 (03/01/2017)

உத்தரப்பிரதேசத்தில் என்னதான் நடக்கிறது? முலாயம் டெல்லி பயணத்தின் பின்னணி!

முலாயம் உடன் அகிலேஷ் மோதல்

த்தரப்பிரதேச மாநிலத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தந்தை முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.

முலாயம் சிங்கைப் பொறுத்தவரை, கடந்த 1989-ல் முதல்முறையாக உத்தரப்பிரதேச மாநில முதல்வரானார். பின்னர், 1991-ம் ஆண்டு பிஜேபி-யிடம் தோல்வியடைந்தார். லோக்தளம் கட்சியில் இருந்து விலகி, கடந்த 1992-ல் சமாஜ்வாடி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் முலாயம் சிங். 1993-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து, முலாயம் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியேற்றார். 

மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சியின் போது, பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் முலாயம் பதவி வகித்துள்ளார். 2012-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக தனது மகன் அகிலேஷ் யாதவை நியமித்தார் முலாயம் சிங்.

அகிலேஷ் யாதவ், 2012 மார்ச் மாதம் தனது 38-வது வயதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அகிலேஷ் முதல்வராகப் பொறுப்பேற்றது முதலே, முலாயம் சிங்கின் குடும்பத்துக்குள் பூசல்கள் ஏற்படத் தொடங்கின. முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பர் அமர்சிங், தம்பி ஷிவ்பால் யாதவ் ஆகியோரை அகிலேஷ் ஓரங்கட்டத் தொடங்கினார். இது கட்சிக்குள் பெரும் விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் தனது தந்தை முலாயம் உடன், அகிலேஷ் கடுமையாக முரண்பட்டு, ஷிவ்பாலை அமைச்சர் பதவியில் இருந்தே நீக்கினார். 
இதற்கிடையே முதல்வர் அகிலேஷ், ராம் கோபால் ஆகிய இருவரையும் சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்குவதாக முலாயம் சிங் யாதவ் அறிவித்தார், இன்னும் ஒரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில், தந்தை - மகன் இடையேயான மோதல் முற்றி வந்த நிலையில், அகிலேஷையும், ராம் கோபாலையும் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக முலாயம் சிங் அறிவித்தார்.

இந்த நிலையில்தான், சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவை, அவரது ஆதரவாளர்கள் கட்சியின் தேசியக் குழுவை கூட்டி அறிவித்தனர். இதையடுத்து, முலாயம் கூட்டியிருந்த சமாஜ்வாடி கட்சியின் அவசர பொதுக்குழு கூட்டம் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எப்போது இக்கூட்டம் நடைபெறும் என்பது பற்றிய தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. சமாஜ்வாடி கட்சி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள், தங்களது தொகுதிக்குச் சென்று வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று ஷிவ்பால் கேட்டுக் கொண்டுள்ளார்.

முலாயம் சிங்கை கட்சியின் தேசியத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓரங்கட்டியதுடன், அவரை கட்சியின் புரவலர் என்று முதல்வர் அகிலேஷ் அறிவித்தார். அகிலேஷ் யாதவ் சமாஜ்வாடி தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தீவிர, ஆதரவாளரான ராம்கோபால் யாதவை சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளராக அறிவித்ததுடன், அமர்சிங்கை அப்பொறுப்பில் இருந்து நீக்கினார்.

அமர் சிங்குடன் முலாயம்இந்த நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவராக,  தான் நீடிப்பதாகவும், கட்சியின் அதிகாரபூர்வ சின்னமான சைக்கிள் சின்னத்தை எதிர்ப்பாளர்கள் பயன்படுத்தத் தடை விதிக்குமாறும் வலியுறுத்துவதற்காக, முலாயம் சிங் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து, முலாயம் இதுதொடர்பாக மனு அளிப்பார் என்று தெரிகிறது. அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள் கட்சியின் சைக்கிள் சின்னைத்தை கைப்பற்றுவதற்கு முன்பாக, விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காகவே முலாயம் சிங் உடனடியாக டெல்லி விரைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முலாயம் சிங்குடன் ஷிவ்பால் யாதவ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அமர் சிங் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். 

இதற்கிடையே லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் சட்டமன்ற மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களின் அவசரக் கூட்டத்தை அகிலேஷ் கூட்டியுள்ளார். அகிலேஷ் யாதவ், கட்சியின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அவர் கூட்டியுள்ள முதல் கூட்டம் இது. இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வெகுவிரைவில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் உத்தரப்பிரதேசத்தில், ஆட்சியில் உள்ள ஒரு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல், வாக்காளர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவை ஏற்படுததுவதுடன், மற்ற கட்சிகளின் வெற்றிக்கு அது வழிவகுத்து விடும் என்பதை உணர்ந்து செயல்பட்டால் சரி. 

- சி.வெங்கட சேது

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்