வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (07/01/2017)

கடைசி தொடர்பு:15:24 (07/01/2017)

'இளவயது ஜெயலலிதாவாக ஐஸ்வர்யா ராய் பொருத்தமாக இருப்பார்!' - ஜெயலலிதா பேட்டி #FlashBack

சிமி கேர்வல், 'ரான்டவு(Rendevous)' என்ற தன் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 1999-ம் ஆண்டு ஜெயலலிதாவை எடுத்த நேர்காணல்தான் இன்று வரை அத்தனை பிரபலம். ஜெயலலிதாவின் உண்மை முகம், அவருடைய உள்ளத்தை.. அச்சு அசலாக, அப்படியே அம்சமாக வெளிப்படுத்தியிருக்கும் அந்த நேர்காணல் வீடியோ. 

நேற்று முன் தினம் இரவு எடிட் செய்யப்படாத அந்த வீடியோவை வெளியிட்டார் சிமி. ஜெயலலிதாவின் அசத்தலான பதில்கள் அடங்கிய அந்த வீடியோவின் பல பகுதிகள் நேரமின்மை காரணமாக எடிட் செய்யப்பட்டிருந்தன. சிமி வெளியிட்ட அவற்றின் தொகுப்பு இதோ... 

''உங்கள் வாழ்க்கையை திரைப்படமாக்கினால் யார் அதில் நடிக்க வேண்டும்?''

''என் வாழ்க்கை திரைப்படமாக்குவதை நான் விரும்பவில்லை''.

இருவர் படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் ஐஸ்வர்யா ராய்

''ஒருவேளை... படமாக்கினால்?''

''என்னுடைய இளமைக் காலத்தை படமாக்கினால், ஐஸ்வர்யா ராய்தான் என்னுடைய தேர்வு. ஆனால் என்னுடைய தற்போதைய பகுதியை நடிக்க, யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று தெரியவில்லை".

(இந்த பதிலை ஜெயலலிதா சொன்னது 1999-ம் ஆண்டு. இருவர் படத்தில் ஜெயலலிதா கதாப்பாத்திரம் என்று பேசப்பட்டு அதில் ஐஸ்வர்யாராய் நடித்தது 1997)

''எதாவது வருத்தம்?''

''என்னுடைய அம்மா வழிப்பாட்டியை கருணையுடன் நடத்த முடியாமல் போய்விட்டதை நினைத்து வருந்துகிறேன். என் அம்மாவின் மறைவுக்குப் பிறகு, சிறு பெண்ணாக நானே தனிக்காட்டில் விட்டதைப் போல அலைக்கழிந்து கொண்டிருந்த நேரத்தில், என் அம்மாவை மட்டுமே நம்பியிருந்த என் பாட்டியை கனிவுடன் நடத்த முடியவில்லை. அதற்காக மிக வருந்துகிறேன்''.

''பல போராட்டங்கள், பல தோல்விகள், ஏராளமான வெற்றிகள். உங்களுடைய வாழ்க்கையில் மிக கடினமான போராட்டம் என்றால் அது என்ன?''

''அது, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின், அதிமுகவில் என்னுடைய இடத்தை தக்க வைப்பதற்கான போராட்டம்தான் என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக கடினமான போராட்டம். ஏன் என்றால்,  நான் விரும்பாத ஒன்றை, சூழ்நிலைகளின் கட்டாயத்துக்காக நான் செய்ய வேண்டியதாக இருந்தது''.

''ஏன் உங்களுக்கு விருப்பமில்லை என்று கூறுகிறீர்கள்??? உங்களின் அரசியல் போராட்டத்தால், நாங்கள் அதாவது பெண்கள் பெருமிதம் அடைந்திருக்கிறோம்.''

''உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஆனால், என் மீது சேறு வாரி இறைக்கப்பட்டது. மிக மிக மோசமாக இழிவுப்படுத்தப்பட்டேன். அது எனக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நான் ஒரு கல்வியாளராவோ, அல்லது வழக்கறிஞராகவோ இருந்திருந்தால் என்னை யாரும் இந்தளவுக்கு எளிதாக அவமானப்படுத்தி இருக்க மாட்டார்கள். கேள்விகளை வீசி இருக்க மாட்டார்கள். ஆனால், அரசியலில் இருக்கிறேன் என்பதால் மட்டுமே, யாரும் எதை வேண்டுமானாலும் நம்மைப் பற்றி பேசலாம் என்பதை என்னைப் போன்ற மிக நுண்ணுணர்வு கொண்ட பெண்ணால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை".

''அணுகுவதற்கு மிகவும் கடினமானவரா நீங்கள்? ''

''இல்லை. வாழ்க்கை என்னை அப்படி மாற்றிவிட்டது. இப்போது கூட எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், மற்றவர்களின் கண்களில் இருந்து மறைந்துவிடவே விரும்புகிறேன். ஹைதராபாத்தில் உள்ள என்னுடைய பண்ணைத் தோட்டத்துக்குச் சென்று அங்கு ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். யாரையும் பார்க்காத, யாருடைய கேள்விகளுக்கும் பதில் அளிக்காத, எந்த கவனச் சிதறலும் இல்லாத ஒருத்தியாக வாழ விரும்புகிறேன். என்னுடைய புத்தகங்கள், இசை, என்னுடைய நாய் என எனக்காக தனிமையுடன் வாழ விரும்புகிறேன்''.

''உங்களின் நம்பிகையைப் பெற என்ன செய்ய வேண்டும்?''

''நேர்மையாக இருந்தாலே போதும். ஆனால் என்னிடம் வருகிறவர்கள் எல்லோருமே எதாவது ஒரு தேவையுடன்தான் வருகிறார்கள்''.

''வாழ்க்கை தேவையின் அடிப்படையிலானதுதானே?''

''இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை போன்ற தேவைகளை யாரும் மறுக்க முடியாத அடிப்படைத் தேவைகள். ஆனால் பேராசை காரணமாக ஏற்படும் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாது''.

- அதிதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்