வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (12/01/2017)

கடைசி தொடர்பு:11:03 (13/01/2017)

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம், திமுக போராட்டத்துக்கு ஆதரவு - ஜவாஹிருல்லா

 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு அதிகாரபூர்வமாக நடத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து தமிழக மக்களின் உணர்வுகளை வஞ்சித்து வருவதின் தொடர்ச்சியாகவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு அதிகாரபூர்மாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கூடாது என்பது தான் ஆளும் பாஜகவின் மறைமுக செயல்திட்டம் (Hidden Agenda) என்பது இன்று உச்ச நீதிமன்றத்தின் கருத்துரைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களின் அறிக்கைகளில் தெரிய வருகின்றது.

Jawahirullah

மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழக தலைவர்களில் ஒருவருமான பொன். ராதாகிருஷ்ணன், பிரதமரை சந்திக்கச் சென்ற அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பே இதை செய்திருக்கலாமே என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக இந்த ஆண்டு பொங்கலின்  போது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வப்போது தமிழகத்துக்கு வரும்போது ஜல்லிகட்டு நடத்த ஆவணச் செய்யப்படுமென பொன்னார் சொல்லி வந்துள்ளார்.

இப்போது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக தாமதமாக சந்தித்ததே ஜல்லிக்கட்டு பிரச்னை தீராததற்கு காரணம் என்பது போல் கருத்து தெரிவிப்பது ஜல்லிக்கட்டு நடத்துவதை அனுமதிப்பது என்பது பாஜகவில் செயல்திட்டத்தில் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக்கியுள்ளது இந்த லட்சணத்தில் தமிழகத்தில் திராவிட இயக்கங்களை போகியன்று அகற்றி விட்டு பொங்கலை கொண்டாட வேண்டுமென்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்தும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. திராவிடர் இயக்கங்களை அழித்து விட்டு பாஜக வை நிலைநாட்டி தமிழர் கலாசாரத்தையும் பண்பாட்டையும் அழிப்பதே பாஜகவின் உண்மையான செயல்திட்டம் (Real Agenda) என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மற்றொரு பாஜகவின் முக்கிய தலைவரும், மோடியின் நண்பருமான சுப்ரமணியன் சுவாமி இது வரை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளராக வேடம் தரித்து வந்தார். இன்று அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பது அவரது இரட்டை வேடத்தை வெளிச்சப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொல்லைப்புறம் வாயிலாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜல்லிக்கட்டையும் ஒரு சாக்காக பாஜக பயன்படுத்த துணிந்துள்ளது என்பதற்கான வெளிப்பாடு தான் சுப்ரமணியன் சுவாமியின் கருத்தாகும்.

ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்குத் தொடுத்துள்ள பீட்டா அமைப்பு பாஜகவின் ஒரு முகமூடி தான். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் சில தலைவர்களால் அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இயக்கம் தான். பீட்டாவிற்கே பாஜக ஆதரவு  என்பதையும் பாஜக தலைவர்களின் இந்த நிலைப்பாட்டில் வெளிப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கு தமிழக மக்கள் தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை உணர்ந்து தமிழக அரசே தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முன் வரவேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க கோரி திமுக சார்பில் நாளை நடத்ததப்படும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியும் ஆதரவளித்து பங்குக் கொள்ளும்' என்று கூறியுள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க