Published:Updated:

ஸ்பெக்ட்ரம் ஊழல்: அதிமுக விழிப்பு உணர்வு கூட்டங்கள்

சென்னை, ஜன.23,2011

 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட திமுகவினரின் பல்வேறு ஊழல்களை மக்களுக்கு தெரியப்படுத்த தமிழகம் முழுவதும் பிரசார விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என அதிமுகவினரை அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்தும், இந்த ஊழலில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்தும், அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதியின் துணைவி ராசாத்தி, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் குறித்தும், தி.மு.க. அரசின் அராஜக நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் உள்ள மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில், 27.1.2011 முதல் 15.2.2011 வரை 20 நாட்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நாள் ஒன்றுக்கு மூன்று ஊராட்சிகள் வீதம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளரின் மேற்பார்வையில், ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய தெருமுனைக் கூட்டங்கள் மாலை நேரங்களில் நடத்தப்பட வேண்டும்.  மேலும் பேரூராட்சிகளிலும், நகரங்களிலும், மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும். 

இதனையடுத்து, 19.2.2011 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 

இக்கூட்டங்கள் சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், சட்டப்பேரவைத் தொகுதிக் கழகச் செயலர்கள், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதி, வட்டச் செயலர்கள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலர்கள், ஊராட்சி கழகச் செயலர்கள் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடத்தப்பட வேண்டும்.

இது மட்டுமல்லாமல், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை, நில ஆக்கிரமிப்பு மற்றும் திமுக-வினரின் இதர ஊழல்கள் குறித்து சுவர் விளம்பரங்கள், டிஜிடல் போர்டுகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றின் மூலமாகவும் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்," என அதிமுகவினரை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.