''என் பணியை தடுத்தால் நான் ராஜினாமா செய்வேன்...'' அமைச்சருக்கு எதிராக கொந்தளிக்கும் எம்.எல்.ஏ

ராமநாதபுரம் : "நான் எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவிடாமல் அமைச்சர் மணிகண்டன் தடுக்கிறார். கடமைகளை செய்ய முடியவில்லை என்றால் எனக்கு இந்த பதவி எதற்கு?. இது போன்ற குறுக்கீடுகள் தொடர்ந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன்" என அ.தி.மு.க. அமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொந்தளித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மூன்றை அ.தி.மு.க பிடித்தது. வெளியூரை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியதாலும், அ.தி.மு.க. வினரிடையே எழுந்த கோஷ்டி பூசலாலும் முதுகுளத்தூர் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைபற்றியது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பாண்டி எம்.எல்.ஏ ஆனார்.

ஆளும் கட்சியின் நேரடி பிரதிநிதி இங்கு இல்லாததால் மாவட்ட அமைச்சரான மணிகண்டனின் தலையீடு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் அதிகளவில் இருந்து வருகிறது. மாவட்டத்தில் எது நடந்தாலும் தன்னை முன்னிலைபடுத்தியே நடத்தப்பட வேண்டும் என கட்சிகாரர்களையும், அதிகாரிகளையும் வற்புறுத்தி வருகிறார் என்ற குற்றசாட்டு உள்ளது. இந்நிலையில் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள சாயல்குடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதுகுளத்தூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார். இதனை தொடர்ந்து செல்வநாயகபுரம், பேரையூர் பள்ளிகளில் நடக்க இருந்த விழாக்கள் அமைச்சரின் தலையீட்டால்  திடீரென ரத்து செய்யப்பட்டது.

தான் பங்கேற்க  இருந்த விழாக்களைஅமைச்சர் மணிகண்டன் ரத்து செய்ததால் ஆத்திரம் அடைந்த எம்.எல்.ஏ பாண்டி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்.எல்.ஏ பாண்டி நம்மிடம் "சாயல்குடியில் நடந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிளை வழங்கினேன். பகல் 2 மணிக்கு பேரையூர், செல்வநாயகபுரம் பள்ளிகளில் நடக்கும் விழாவிற்காக புறப்பட்டு கொண்டிருந்தேன். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் போன் செய்து 'விழா ரத்து செய்து விட்டார்கள்' என தகவல் சொன்னார்கள். காரணம் கேட்டதற்கு அமைச்சர் மணிகண்டன் ரத்து செய்ய சொன்னதாக கல்வி அதிகாரிகள் சொன்னதாக கூறினார்கள்.

சரி அமைச்சர் நமது மாவட்ட அமைச்சர் தானே என்பதால் அவரிடமே இது குறித்து பேசினேன். அவரோ  'நீங்கள் இதில் தலையிட வேண்டாம். நாங்கள் நடத்தி கொள்கிறோம்' என்றார். பரமக்குடியில் டாக்டர் முத்தையாவும், திருவாடானையில் கருணாஸும் நடத்தும் போது நான் மட்டும் ஏன் நடத்த கூடாது என கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமலே போனை வைத்துவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான நான் எனது தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவிடாமல் அமைச்சர் மணிகண்டன் தடுக்கிறார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது  எத்தனையோ அரசு விழாக்களை எனது தொகுதியில் நடத்தி உள்ளேன். அப்போது இது போன்று நடக்கவில்லை. இது குறித்து எங்கள் கட்சி தலைமை மூலம் முதல்வரிடம் தகவல் தெரிவித்துள்ளேன். எனது தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியவில்லை என்றால் எனக்கு இந்த பதவி எதற்கு. இது போன்ற குறுக்கீடுகள் தொடர்ந்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயங்க மாட்டேன்" என்றார்.

சொந்த கட்சிகாரர்களோடு பனிப்போர். எதிர்கட்சி எம்.எல்.ஏ வுடன் மோதல் என தொடர்கிறது அமைச்சர் மணிகண்டனின்  அத்துமீறல். அடக்கி வைப்பாரா ஓ.பன்னீர்செல்வம்.

- இரா.மோகன்,

படங்கள்: உ.பாண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!