முதல்வரே.... இவ்வளவு மோசமாக நீங்கள் இதைக் கையாண்டிருக்க வேண்டாம்...! | Dear Chief Minister, You could have handled this in a better way

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (28/01/2017)

கடைசி தொடர்பு:13:41 (28/01/2017)

முதல்வரே.... இவ்வளவு மோசமாக நீங்கள் இதைக் கையாண்டிருக்க வேண்டாம்...!

ஓபிஎஸ்

அதிர்ஷ்டம் எல்லோருக்கும் அமைவதில்லை. ஆனால், தமிழக முதல்வர் ஓபிஎஸ்-க்கு  இது உச்சம் பெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். ‘மூன்று முறை முதல்வர் பதவி, முதல்முறையாகக் குடியரசு தினத்தன்று கொடியேற்றும் வாய்ப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வெற்றி’ என தன் சாதனைப் பயணத்தை நிகழ்த்திவரும் ஓபிஎஸ்-ஸின் ஒவ்வொரு செயல்களும்... அவருடைய அரசியல் வரலாற்றில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன என்றால், அதை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? 

அதிர்ச்சியில் உறைந்த அ.தி.மு.க-வினர்!
2001-ம் ஆண்டு டான்சி ஊழல் வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது... ‘அடுத்த முதல்வர் யார்?’ என்ற பரபரப்பு அ.தி.மு.க-வில் எழத் தொடங்கியது. அப்போது, ‘‘பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், உப்பிலியாபுரம் சரோஜா, இளவரசி’’ என்று ஆளாளுக்கு ஒரு பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயலலிதாவோ, ‘‘இப்போது ஏற்பட்டிருக்கிற சூழ்நிலை உங்களுக்கு எல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரைத் தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான், ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன்; அதற்கு, ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் நான் அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்’’ என்று சொல்லி... சில நிமிடங்கள் சஸ்பென்ஸ் காட்டிய அவர்... மீண்டும், ‘‘பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் இப்போதைய வருவாய்த் துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்’’ என்று சொல்ல... ஒட்டுமொத்த அ.தி.மு.க நிர்வாகிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

‘ஜூனியர் விகடன்’ நடத்திய சர்வே!
ஏன், ஓபிஎஸ்ஸே... ஒருகணம் என்ன நடக்கிறது என்று தெரியாமல், அடுத்த நொடி... ஜெ-வின் காலில் விழுந்து வணங்கினார். பிறகு, எழுந்துபோய் பத்தடி தூரத்துக்கு அப்பால் நின்ற ஓபிஎஸ்ஸை., தனக்கு அருகில் ஒரு நாற்காலியைப் போடவைத்து அதில் அமரவைத்தார். அன்று, மிகவும் பவ்யமாக நாற்காலியின் நுனியில் உட்காரத் தெரிந்த ஓபிஎஸ்ஸுடைய அரசியல் அத்தியாயத்தின் அமைதிப் பயணம்தான்... இப்போது, ‘ஜெயலலிதா இடத்தில் யார் இருக்க வேண்டும்’ என்பதை ‘ஜூனியர் விகடன்’ நடத்திய சர்வேயில், தமிழக மக்கள் தெளிவாய்ச் சொல்லியிருந்தார்கள். அதில், முதலிடத்தில் ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவும், இரண்டாவது இடத்தில் ஓபிஎஸ்ஸும் இடம்பிடித்திருந்தனர். ஜெ-வின் 33 வருட கால உடன்பிறவாத் தோழி என்று அழைக்கப்படும் சசிகலா, இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்

அம்மா இடத்தில் மூன்றாவது முறை!
தமிழக அரசியல் வரலாற்றில் பக்தவத்சலத்துக்குப் பிறகு வந்த அண்ணா முதல் ஜெயலலிதா வரை... அனைவருமே திரைத் துறையைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்கையில், அந்தத் துறையைச் சாராத ஒருவராகவும், அவர் இனத்தைச் சேர்ந்தவர்களின் முதல் முதல்வராகவும் அரியணையில் அமர்ந்து வரலாற்றைப் பதிவுசெய்து கொண்டார், ஓபிஎஸ். ‘‘முதல்வர் பதவியில் பத்து நாட்கள் இருந்தாலும் போதும். கோட்டையில் இடம்பெற்றிருக்கும் முதல்வர்களின் பட்டியலில் எங்கள் இனத்தைச் சேர்ந்தவரின் படமும் இடம்பிடித்துவிடும்’’ என்று அன்றே அவர் சமுதாயத்து வி.ஐ.பி-க்கள் புளகாங்கிதம் அடைந்தனர். பதவியேற்ற ஓபிஎஸ்ஸிடம்... பத்திரிகையாளர்கள், ‘‘குறைந்தபட்சம் நாலு கேள்விக்காவது பதில் சொல்லுங்க’’ என்று கேட்டபோது... ‘‘அம்மாவைக் கேட்காமல் உங்களிடம் பேச முடியாது’’ என்றவர்தான், அம்மா இடத்தில் மூன்றாவது முறையாக அமர்ந்துள்ளார்.

தினகரனின் வலதுகரம் ஓ.பி.எஸ்.!
‘‘குறிப்பாக, மன்னார்குடி வகையறாவில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் தீவிரமாக விசுவாசம் காட்டக் கூடியவர் ஓ.பி.எஸ்’’ என்று, அன்றே அவர் இன அ.தி.மு.க நிர்வாகிகளின் எதிர் கருத்துக்கு ஆளானவர். இன்று அதே வகையறாவால்தான் மூன்றாவது முறையாக முதல்வராக அமர்ந்துள்ளார். ‘‘நேரடியாக தனது உறவினர்களில் ஒருவரை முதல்வராக்கினால், தேவையில்லாத விமர்சனங்கள் எழும் என நினைத்துத்தான் ஓ.பி.எஸ்ஸை முதல்வராக்கச் சொல்லியிருக்கிறார் சசிகலா’’ என அன்றே அ.தி.மு.க வட்டாரம் முணுமுணுத்தது. ‘தினகரனின் வலதுகரம் ஓபிஎஸ்’ என்று சொன்னால்... அது மிகையாகாது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் தினகரன் போட்டியிட்டபோது... அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது ஓ.பி.எஸ்ஸுக்கு. அதன்பிறகு, அவருடைய வெற்றிக்காக அல்லும்பகலும் உழைக்கத் தொடங்கினார் ஓ.பி.எஸ். ‘தன்னுடைய வெற்றிக்கு ஓ.பி.எஸ்-தான் காரணம்’ என்று புரிந்துகொண்ட தினகரன், அவரை அழைத்துத் தட்டிக் கொடுத்தார். இதனால் பெரியகுளம் நகராட்சி சேர்மனாக இருந்த ஓ.பி.எஸ்., தினகரன் மூலம் தேனி மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என அடுத்தடுத்த பதவிகளுக்கு உயர்ந்தார். 

சசிகலாவால் ஆட்டிவைக்கப்படுகிறார்!
ஜாதகத்திலும் ஜோதிடத்திலும் நிறைய நம்பிக்கை வைத்திருக்கும் ஓ.பி.எஸ்., ஒருமுறை நியூமராலஜிஸ்ட் ஒருவரைச் சந்தித்தபோது... ‘‘பேச்சிமுத்து என்கிற இந்தப் பேரு, உனக்கு அதிர்ஷ்டம் இல்லை. உன்னோட பொறந்த தேதியைவெச்சு கணக்குப் போட்டுப் பார்த்ததுல... இப்படி ஒரு பெயரை மாத்திவெச்சா நீ ஓஹோனு வருவே’’ என்று சொல்லி ஒரு சீட்டைக் கொடுத்தார். அதை வாங்கிப் பார்த்த ஓ.பி.எஸ்., அன்று முதல்... ‘பன்னீர்செல்வமா’க மாறுகிறார்; பழைய பன்னீர்செல்வமாக இன்றும் இருக்க வைக்கப்படுகிறார். ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒச்சார் என்பவர் பழனியம்மாளைத் திருமணம் செய்தபிறகு, பெரியகுளத்தில் வந்து செட்டிலாக... அந்தத் தம்பதியருக்குப் பிறந்தவர்தான் ஓ.பி.எஸ். பெற்றோரால், ‘பேச்சிமுத்து’ என்ற பெயர் சூட்டப்பட்டிருந்த ஓபிஎஸ்., அம்மா (ஜெ.) எது சொன்னாலும்... அதற்குப் பதில் எதுவும் பேசாமலேயே இருந்து முத்தாய் ஜொலித்ததால்தான் என்னவோ தெரியவில்லை, தற்போது அவர் இருந்த இடத்தில் ஓபிஎஸ் உள்ளார். ‘‘ஆட்சிக் கட்டிலில் ஓ.பி.எஸ் தொடர்ந்தபோதிலும், சசிகலாவால் இன்னமும் அப்படியே ஆட்டிவைக்கப்படுகிறார்’’ என்று சசிக்கு எதிரான தரப்பு குமுறுகிறது. அம்மா இறந்த பிறகும் இந்த அதிர்ஷ்டம் அவருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. முதல்வர் பதவிக்காகப் பலரும் தவம் கிடக்க... ஓ.பி.எஸ்ஸுக்கோ குருட்டதிர்ஷ்டம்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கைகொடுத்திருக்கிறது.

ஓபிஎஸ்

ஜெ-வுக்கு எதிராகக் களமிறங்கினார்!
பள்ளிப்படிப்பையும் பட்டப்படிப்பையும் முடித்த ஓ.பி.எஸ்., பெரியகுளத்தைவிட்டு வெளியேறாமல்... தன் நண்பரோடு டீக்கடையோடு சேர்ந்த ஒரு கேன்டீனைத் தொடங்கி... அதில் எல்லா வேலைகளையும் ஆரம்பத்தில் கவனித்துக்கொண்டார். ஓ.பி.எஸ்ஸின் தந்தை இறந்துவிட, அவரது சகோதரர்களுக்குள் பாகப்பிரிவினை நடக்கிறது. இதனால் அங்கேயே (பெரியகுளத்தில்) ஒரு வீட்டை வாங்கி, தன் மனைவியோடு தனிக்குடித்தனம் செல்கிறார். எம்.ஜி.ஆர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த ஓ.பி.எஸ்., அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் உருவாக்கியபோதே அதில் உறுப்பினரானார். 1982-ல் பெரியகுளம் நகர இளைஞர் அணி துணைச் செயலாளராகக் கட்சியில் முதல் பொறுப்பைப் பெற்ற அவர், எம்.ஜி.ஆர் இறந்தபிறகும் ஜானகி அணியில் தீவிரமாகப் பணியாற்றினார். இன்று, அம்மாவின் விசுவாசியாய் இருக்கும் ஓ.பி.எஸ்., அன்று அவர் (ஜெ.) போட்டியிட்ட தொகுதியில் அவருக்கு எதிராகக் களமிறங்கிக் கட்சிப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு வந்த சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகளினால்... இடப்பெயர்ச்சியாகி, அ.தி.மு.க-வில் அருகுபோல் தழைத்து ஆல்போல் வளர்ந்திருக்கிறார்.

ஜெயலலிதாவால், முதல் முறையாக 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை 162 நாட்கள் தமிழகத்தின் முதல்வராய் பதவிவகித்த ஓ.பி.எஸ்., 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியைக் கண்டிருந்தாலும்... அவர், தான் நின்ற தொகுதியில் வெற்றிபெற்று எதிர்க் கட்சித் தலைவராகும் வாய்ப்பையும் ஜெ-வால் பெற்றிருந்தார். அம்மா அமைச்சரவையில் நிதியமைச்சரான அவருக்கு, கூடுதலாகப் பொதுப்பணித் துறையும் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, அ.தி.மு.க-வில் சொல்லப்படும் புகார்களை விசாரிக்க உருவாக்கப்பட்ட நால்வர் அணியிலும் இவரே ‘முதல்வ’ராக இருந்தார். 

மூன்றாவது முறை முதல்வர்!
முதல்வர் பதவிக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் ராசி உண்டு என்பதுபோல... இரண்டாவது முறையும் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘‘ஓ.பி.எஸ் மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதனால், இந்த முறை அவருக்கு முதல்வர் வாய்ப்புக் கிடைக்காது’’ என அ.தி.மு.க-வினரால் சொல்லப்பட்டபோதுகூட... அதைச் சுக்குநூறாக்கியவர் ஓ.பி.எஸ். சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா, பெங்களூரு சிறைக்குச் சென்றபோது... விசுவாசத்தின் விடிவெள்ளியாகவே மீண்டும் அம்மாவின் கண்களுக்குத் தெரிந்தார் ஓ.பி.எஸ். அதனால், அவரே மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார். இதன் பயனால் ஜெயலலிதா உடல் நலமின்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது... அவரது துறையையும் கூடுதலாகக் கவனித்துக் கொள்ளும்படி நிர்பந்திக்கப்பட்டார். தொடர்ந்து அவரது இறப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்ஸே மூன்றாவது முறையாகத் தமிழக முதல்வராகப் பதவியேற்று பணியாற்றி வருகிறார்.

ஓபிஎஸ்

ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடுகள்!
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக முதல்வராய்ப் பதவியேற்ற ஓ.பி.எஸ்., ‘வர்தா’ புயலின்போது தன்னுடைய நடவடிக்கைகளை வாணவேடிக்கைகளாக்கி மக்கள் மன்றத்தில் இடம்பிடித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வது முதல் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ‘‘அமைதியாக இருந்த ஓ.பி.எஸ்ஸா... இப்படிச் செயல்படுகிறார்’’ என்று பலரும் திருஷ்டி சுற்றும் அளவுக்கு அவருடைய செயல்பாடுகள் இருந்தன. ‘‘சென்னை வெள்ளத்தின்போதுகூட தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இப்படிச் செய்யவில்லை; ஒருவேளை, அவர் இருந்திருந்தாலும் இதுபோலச் செய்திருப்பாரா’’ என மக்கள் நினைக்கும் அளவுக்கு அவருடைய அரசின் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 

இதுதவிர, கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடும்படி ஆந்திர முதல்வரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தப் பிரச்னையும் நொடியில் முடிந்தது. பின்னர் ஜல்லிக்கட்டு, தமிழர்களிடம் மல்லுக்கட்டத் தொடங்கியது. இளைஞர்களும் மாணவர்களும் பொதுமக்களும் எங்கிருந்தோ வந்து... எத்தனையோ லட்சக்கணக்கில் ஒன்றாய் இணைந்து... அறவழியில், ஒருமித்த குரலில் ‘ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்று குரல்கொடுத்தபோது... அவரால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழக அரசு மெளனம் காத்ததால், அந்தப் போராட்டம் நாளுக்குநாள் சூடுபிடித்ததுடன்... வரலாற்றிலும் பதிவானது. இதற்கு முடிவு எடுத்தாக வேண்டிய சந்தர்ப்பத்தில் டெல்லி சென்ற ஓ.பி.எஸ்., பிரதமரை நாடினார். அவர், கையை விரித்தாலும்... ஓ.பி.எஸ் அங்கிருந்தபடியே அவசர சட்டம் பிறப்பிக்க வழிவகை செய்தார். ஆக, ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் அவர் வெற்றிகண்டார்.

ஓ.பி.எஸ்ஸுக்குக் கெட்டப்பெயர்!
‘‘ஆறு நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜல்லிக்கட்டு ஆதரவுக்காரர்களை ஒன்றும் செய்யாமல்... அவர்களுக்கு மறைமுகமாக தமிழக அரசு ஒருவகையில் உதவி செய்திருந்தாலும், கடைசி நாளில் மாணவர்கள் மீதும், குப்பத்து மக்கள் மீதும் போலீஸார் வன்முறையில் ஈடுபட்டது அவருக்கும், அவர் சார்ந்த அ.தி.மு.க அரசுக்கும் கெட்டப்பெயரை ஏற்படுத்தியுள்ளது’’ என்கின்றனர் நடுநிலையாளர்கள். அதேபோல், ‘‘அம்மா இறந்தபோது... அதன் அதிர்ச்சியில் இறந்த தொண்டர்களுக்கு அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் நிதி வழங்கப்பட்டது. ஆனால், அந்தக் கழகத்தைச் சார்ந்த அரசில் இருக்கும் முதல்வரோ, நாளுக்குநாள் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு எந்த நிதியும் அளிக்கவில்லை; ஆறுதலும் சொல்லவில்லை’’ என்று அவருக்கு எதிராக விவசாயச் சங்கங்கள் கோரிக்கை வைக்கின்றன.

‘நல்ல செயல்களைச் செய்வதால்தான் நல்ல பெயர் கிடைக்கிறது’ என்கிறபோது... அதை இன்னும் கொஞ்சம் நிதானித்துச் செய்திருந்தால்... அதைவிட மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். கழகத் தொண்டர்களைப்போல... ‘கலக’ம் செய்யாதவர்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும், முதல்வர் ஓ.பி.எஸ்ஸுக்கும் இருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும்.

- ஜெ.பிரகாஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்