'முதல்வர் அல்லது பொதுச்செயலாளர் பதவியை கொங்கு மண்டலத்தினருக்கு கொடுத்திருக்க வேண்டும்' - 'கொங்கு' ஈஸ்வரன்

ஈஸ்வரன்

டந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க-வின் ஆட்சிக் கனவை தகர்த்ததில் மிக முக்கியப் பங்கு கொங்கு மண்டலத்துக்குத்தான். கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கவுண்டர் சமூகத்தினர் பெருமளவு உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் 90 சதவிகித இடங்களில் அ.தி.மு.க. தான் வென்றது. 47 எம்.எல்.ஏ-க்கள், 9 அமைச்சர்கள், 9 எம்.பி-க்கள் என அ.தி.மு.க.வுக்கு அள்ளிக்கொடுத்தது கொங்கு மண்டலம்.

தொடர்ச்சியாக அ.தி.மு.க.வின் ஆதரவுப் பகுதியாக இருந்துவரும் கொங்கு மண்டலத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. ஆதரவு என்பது குறைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. சசிகலாவை நேரடியாக எதிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவின் குரலாக மாறிப்போனாலும், அ.தி.மு.க.வில் கொங்கு மண்டலத்தில் எதிர்ப்பு அலை இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, தி.மு.க. கொங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்கத்துவங்கி இருக்கிறது. தன்னிடம் இருந்த இளைஞர் அணி செயலாளர் பதவியை வெள்ளக்கோவில் சாமிநாதனுக்குக் கொடுத்ததும் கொங்கு மண்டல ஆதரவைக் கவரத்தான் என்கிறார்கள்.

சரியக்கூடும் என அஞ்சப்படும் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க.வும், இழந்த செல்வாக்கைப் பெற்றிட தி.மு.க.வும் கொங்கு மண்டலத்தில் தீவிரமாக இயங்கத்துவங்கி இருக்கிறது. இந்நிலையில், கொங்கு மண்டலத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டி எழுப்பிய செல்வாக்கை, சசிகலா கோட்டை விட்டுவிட்டார் என வெளிப்படையாகவே விமர்சித்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.

ஈஸ்வரன்

அவரிடம் பேசினோம். "கொங்கு மண்டலத்தில் மிகச்சரியாக 60 சட்டமன்றத் தொகுதிகள், மேற்கொண்டு பார்டர்களில் 12 தொகுதிகள்னு ஆக 72 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. 12 எம்.பி தொகுதிகள் இருக்கின்றன. எம்,ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட காலத்தில் இருந்து, ஜெயலலிதா மறைந்தவரை இருவரும் கொங்கு மண்டலத்தை அ.தி.மு.க கோட்டையாகத்தான் வைத்திருந்தார்கள்.

அ.தி.மு.க ஆட்சி அமைக்க மற்ற மண்டல மக்களைவிட கொங்கு மக்களே அதிக உதவியாக இருந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியை அமையவைத்து, அ.தி.மு.கவை தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியமைக்கவைத்த சாதனையைச் செய்யவைத்ததும் கொங்கு மக்கள்தான். ஆனால்,அப்படி அ.தி.மு.க கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தை இப்போது கோட்டை விட்டுவிட்டார் இப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா.

ஈஸ்வரன்இப்போது, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க நிலைமையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அ.தி.மு.கவுக்கு ஓட்டுப்போட்டவர்கள். அதாவது, கொங்கு மக்கள். இன்னொன்று அவர்களின் ஓட்டுக்களை வாங்கியவர்கள். அதாவது, மக்கள் பிரதிநிதிகளாகவும் அ.தி.மு.க கட்சி பதவிகளில் இருப்பவர்கள். முதல் தரப்பான கொங்கு மக்கள் அ.தி.மு.கவை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டாம் தரப்பான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அ.தி.மு.க தலைமையை கடமைக்குத்  துதிபாடுகின்றனர். சசிகலா இரண்டு தவறுகளைச் செய்துவிட்டார்.

அவர் அ.தி.மு.கவுக்கு அதிக பலமாக இருந்த கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவியைக் கொடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையாவது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களுக்கு விட்டுக்கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், இதை அவர் செய்யவில்லை. குறைந்தபட்சம் கொங்கு மண்டலத்தின் முக்கியப் பிரச்னைகளான அவிநாசி அத்திக்கடவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தி, கொங்கு மக்களின் ஆதரவை பெற்றிருக்கலாம். இதில் எதையும் அவர் செய்யவில்லை.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால், அவர்களோடு சசிகலாவை ஒப்பிடவேண்டியதில்லை. சசிகலா கொடுக்கும் பேட்டியும், அந்த குடும்பமுமே கட்சியை கம்பெனி போல நினைத்து நடத்தும் கூத்துக்களையும் பார்த்து மக்கள் வெறுத்துப்போய்விட்டார்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்களைவிட பெண்கள் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.கவை ஆதரித்தார்கள். அதற்குக் காரணம், அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மீது இருந்த ஈர்ப்பு. ஆனால், சசிகலாவின் மோசமான செயல்பாட்டால், அத்தனை பெண்களும் அ.தி.மு.கவை கைகழுவும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.

ஜல்லிக்கட்டு பிரச்னைக்காகப் போராடிய இளைஞர்கள் மீது தடியடி நடத்திய இந்த ஆட்சியின் மோசமான நடவடிக்கையால் இளைஞர்களும் அ.தி.மு.க.வை எதிர்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள். பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கொங்கு மண்டலம் முழுக்க நான் தனியரசுபயணம்செய்கிறேன். அப்போது, சசிகலா எதிர்ப்பு அலையை நான் கண்கூடாக உணர்ந்திருக்கிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு பாதுகாத்துவைத்திருந்த கொங்கு மண்டல செல்வாக்கை சசிகலா செல்லாக்காசாக்கிவிட்டார்" என்றார். அப்படியென்றால், கொங்கு மண்டல மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற நம் கேள்விக்கு யோசிக்காமல், 'கண்டிப்பாக தி.மு.க.வைத்தான்' என்றார்.

"கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக இங்கே வளர வாய்ப்பில்லை. பி.ஜே.பி. காங்கிரஸ் கட்சிகள் இங்கே வளரவே இல்லை. தே.மு.தி.க.வும் மற்ற கட்சிகளுக்கு இங்கு செல்வாக்கு இல்லை. எனவே, அ.தி.மு.க.வை வெறுக்கும் மக்களுக்கு தி.மு.க.வை ஆதரிக்கவேண்டிய நிலைதான் இருக்கு. அதை மனதில் வைத்துதான், ஸ்டாலின் தான் வகித்துவந்த இளைஞர் அணி பதவியை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவருக்கு கொடுத்திருக்கார். ஸ்டாலின் அணுகுமுறையில் நல்ல மாற்றம் தெரிகிறது" என்றார்.

ஈஸ்வரனுக்கு நேரெதிராய் பேசுகிறார் அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவர் தனியரசு, "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறைந்தபோது, அம்மாவையும் தான் ஏற்கவில்லை. தன்னோட திறம்பட்ட செயல்பாடுகளால் தொண்டர்களையும்,மக்களையும் அம்மா ஏற்கவைத்தார். அதுபோல சின்னம்மாவின் செயல்பாடுகளும், எல்லோரையும் அரவணைக்கும் தன்மையும் அவரை மக்கள் விரும்பும் தலைவராக மாற்றிவருகிறது. ஒட்டுமொத்த கொங்கு மண்டலமும் சின்னம்மா பின்னாடி அணிதிரண்டு இருக்கிறது. அ.தி.மு.கவுக்கு கொங்கு மண்டலத்தில் முன்னரை விட பலம் கூடி இருக்கிறது. அந்த பலத்தை இன்னும் இரண்டு மடங்காக்க நாங்க ஊர் ஊராகச் சுற்றி பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்" எனச் சொல்லிவருகிறார்.

- துரை.வேம்பையன்,
படங்கள்; ஆர்.புஷ்பலதா(மாணவ பத்திரிக்கையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!