வெளியிடப்பட்ட நேரம்: 15:11 (02/02/2017)

கடைசி தொடர்பு:16:04 (02/02/2017)

'திருமண வீட்டில் அரசியல் பேசுவதில்லை..!' ஸ்டாலினின் ஆச்சர்ய மாற்றம்

ஸ்டாலின்

மிழக அரசியல் வரலாற்றில் திருமண மேடைகளை அரசியல் மேடைகளாக மாற்றிய பெருமை தி.மு.க.வையே சேரும். தி.மு.க. தலைவர் கருணாநிதி, திருமண மேடைகளில் பேசிய பல பேச்சுகள், அரசியலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதனால் தி.மு.க. பிரமுகர்களின் திருமணம் எப்போதும் அரசியல் கட்சி மாநாடு போலத்தான் நடைபெறும்.இந்நிலையில் திருமண விழாவில் அரசியல் பேசுவதில்லை எனச்சொல்லி அரசியல் பேசுவதை தவிர்த்து வருகிறார் ஸ்டாலின்.

ஸ்டாலின் தி.மு.க.வின் செயல் தலைவரான பிறகு, தேவையில்லாத செயல்பாடுகளை, ஆர்ப்பாட்டமான அரசியலை ஒதுக்கி வருகிறார். முதல்வர் வாகன அணிவரிசை வரும்போது ஒதுங்கி வழிவிட்டது, சட்டசபையில் கட்சித் தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு பேசும் பிரச்னையின்போது, ‘நாங்கள் ஏற்கெனவே பேசியிருந்தால் அது தவறு. அந்த தவறை இனி செய்யமாட்டோம். ஆளும் கட்சியும் அந்த தவறை செய்ய வேண்டுமா?’ என கேள்வி எழுப்பியது என ஸ்டாலினின் சமீபத்திய அணுகுமுறைகள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விளம்பரங்களால் கவனிக்கப்பட்டு வந்தவர், திடீரென விளம்பரங்களைத் தவிர்ப்பதும், எதிரெதிர் துருவங்களாய் இருந்த இரு கட்சிகளும் இணக்கமாக இருப்பதும் என ஸ்டாலினின் அணுகுமுறைகள் கவனிக்கப்படுகின்றன.

இந்நிலையில், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான வாகை சந்திரசேகரின் மகள் திருமணம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொள்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து கார் மூலமாக பழனி வந்தடைந்தார் ஸ்டாலின். கோயம்புத்தூர் முதல் பழனிவரை ஸ்டாலினை வரவேற்க ஆயிரக்கணக்கான பேனர்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

ஸ்டாலின்

ஆனால் ‘எங்கும் பேனர் இருக்கக்கூடாது. கழகக் கொடிகளை மட்டும் கட்டினால் போதும்' என ஸ்டாலின் கறாராக சொல்லியிருக்க... அச்சடித்த அத்தனை பேனர்களும் கட்டப்படாமல் மூலையில் வைக்கப்பட்டன. திருமண மண்டப வாசலில் ஒரே ஒரு பேனர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று வைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதிலும், அரசியல் இல்லாமல் திருமண பேனராக இருக்க வேண்டும் என்று உத்தரவின் பேரிலே வைக்கப்பட்டதாம். பேனர் கலாசாரத்துக்கு பேர் போன தி.மு.க.வினரை, ஸ்டாலினுடைய இந்த உத்தரவு திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரம்மாண்ட விளம்பரங்கள் மூலம் தன்னை முன்னிறுத்திக்கொண்டு வந்த ஸ்டாலினின் இந்த புதிய அணுகுமுறை வரவேற்பை பெற்றுள்ளது.

வழக்கமாக திருமண விழாவில் அரசியல் பேசும் ஸ்டாலின், இந்த திருமண விழாவில் அரசியல் பேசவில்லை. சந்திரசேகருக்கும் தனக்குமான நட்பை பற்றி பேசியவர், “16 செல்வங்களும் பெற்று மணமக்கள் வாழ வேண்டும்” என்ற வாழ்த்தோடு பேச்சை முடித்துக்கொண்டார். பத்திரிகையாளர்கள் ஸ்டாலினை சந்திக்க முற்பட... இது திருமண வீடு. இங்கு அரசியல் பேசக்கூடாது' எனச்சொல்லி வெளியேறினார்.

மத்திய அரசின் பட்ஜெட், ஜல்லிக்கட்டு பிரச்னை, தமிழக ஆளும்கட்சி நடவடிக்கைகள் என பேசுவதற்கு பல்வேறு முக்கிய விஷயங்கள் இருந்தாலும், திருமண மேடையை அரசியல் மேடையாக மாற்றக்கூடாது என்ற ஸ்டாலினின் முடிவு, தி.மு.க. அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. ஸ்டாலினை தவிர அனைவரும் அரசியல் பேசினர். இருந்தாலும் ஸ்டாலின் அரசியல் பேசுவதை தவிர்த்தார். கடந்த சிலநாட்களாக தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத, நாகரிகமான அரசியல் நிகழ்வுகளை ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. செய்த ஒருசில தவறான முன்னுதாரணங்களை எல்லாம் துடைத்தெறிந்து, நாகரிகமான பாதையில் தி.மு.க.வை ஸ்டாலின் அழைத்துச் செல்வார் என தி.மு.க. தொண்டர்கள் நம்புகிறார்கள். 

எப்படியோ காலம் கடந்தாவது பரிகாரம் தேடினால் சரிதான்.

- ஆர்.குமரேசன்,

படங்கள் : வீ. சிவக்குமார்.                        

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்