வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (04/02/2017)

கடைசி தொடர்பு:15:39 (04/02/2017)

‘சசிகலா அனுப்புமுன் நாமே விலகுவோம்..!’ ஜெயலலிதா அபிமானிகளின் விலகல் பின்னணி

                          ஜெயலலிதா-ஷீலா பாலாகிருஷ்ணன்

றைந்த முதல்வர் ஜெயலலிதாவால் பதவி நீட்டிப்பும் புதிய பதவியும் கொடுக்கப்பட்டு, தமிழக அரசில் வலுவான அதிகார மையமாக விளங்கிய அரசு ஆலோசகர் ஷீலா பாலாகிருஷ்ணன் உள்ளிட்ட 3 அதிகாரிகளின் பதவி விலகல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காத்திருந்த சசிகலா முந்திக்கொண்ட ஷீலா!

அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி காலம் வரும் மார்ச் மாதம் இறுதியோடு முடிவடைகிறது. அதே போல தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வெங்கட்ரமணன் பதவி காலம் வரும் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் பதவி நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருவரும் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

"ராம மோகன ராவ் பதவி பறிப்புக்குப் பின்னர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். அதுவரை அரசு ஆலோசகர் தரப்பில் இருந்து முக்கிய முடிவுகளை, ஆலோசனைகளைக் கேட்டு நடந்த முதல்வர் பன்னீர்செல்வம் கிரிஜா நியமனத்துக்குப் பிறகு அவரிடமே நேரடியாக ஆலோசனைகளைப் பெற தொடங்கினார். மேலும் ஷீலா, வெங்கட் ரமணன் இருவருக்கும் பதவி நீட்டிப்பை மீண்டும் கொடுக்கலாமா வேண்டாமா என்பதற்குரிய கோப்பு  முதல்வர் அலுவலகம் சென்றுள்ளது. ஆனால் அதில் என்ன முடிவு என்ன எடுப்பது என்பதை கார்டன் முடிவு செய்யட்டும் என்று இருந்தனர். இதனை உணர்ந்த ஷீலா, வெங்கட் ரமணன் முன்கூட்டியே பதவி விலகிவிட்டனர்."என்றனர்.

போயஸ் கார்டன் வட்டாரத்தில் விசாரித்தோம். "எல்லாமே சசிகலா விருப்பம்தான். அவர் அரசில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். அதே போல அ.தி.மு.க விலும் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். தன்னை ஒத்துக்கொள்ளாத, தனது தலைமைக்கு ஆரம்பக் கட்டத்தில் எதிர்ப்புக் காட்டிய பல முக்கிய பிரதிநிதிகளுக்குக் கூட அ.தி.மு.க வில் மீண்டும் முக்கிய பதவி கொடுத்து அவர்களுக்கே இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் ஷீலா, வெங்கட்ரமணன், ராமலிங்கம் பதவி விலகல் நடந்துள்ளது.

ஜெயலலிதா-ஷீலா பாலகிருஷ்ணன்

இதில் மறைக்க ஒன்றும் இல்லை.ஷீலா, வெங்கட்ரமணன் பதவி காலம் முடிகிறது. அவர்களின் பணித்திறமையை மெச்சும் வகையில்தான் ஜெயலலிதா பதவி நீட்டிப்புக் கொடுத்தார். இப்போது அவர்களுக்கு மீண்டும் பதவி நீட்டிப்புக் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அதனால் சசிகலா வேண்டாம் என்று சொல்வதற்கு முன்பே  நாமே விலகிடுவோம் என்று அவர்கள் முடிவு செய்திருக்கலாம்." என தெரிவிக்கின்றனர் போயஸ் கார்டன் வட்டாரத்தினர்.

இதில் சர்வீஸ் உள்ளவர் ராமலிங்கம் ஐ.ஏ.எஸ். மட்டுமே. அவரும் பதவி விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் ஜெயலலிதாவின் நிர்வாகம் போல இல்லாமல் தனது நடவடிக்கைகள் வேறு மாதிரியாக  இருக்கவேண்டும் என்று சசிகலா விரும்புகிறார் என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள்.

ஷீலா பாலகிருஷ்ணன் 1976-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயலாளராக கடந்த 2002ல் நியமிக்கப்பட்டார். பின்னர் 2006ல் தி.மு.க தமிழக ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் ஷீலா பாலகிருஷ்ணன் ஓரங்கட்டப்பட்டார். ஆனால் மீண்டும் 2011ல் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், தலைமைச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஓய்வு பெறும் நிலையில், ஜெயலலிதாவின் தனி ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். கடந்த 2016ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழக அரசின் ஆலோசகராக தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பை ஷீலா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சி.தேவராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்