வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:19 (09/02/2017)

ஜெயலலிதா மரண விசாரணைக் கமிஷனில் இந்தக் கேள்விகள் இடம்பெறுமா...? #OPSvsSasikala

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் பன்னீர் செல்வம்

முதல்வர் பன்னீர்செல்வம், மெரினாவில்... நேற்று (7-2-17) ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு, 40 நிமிடங்கள் தியானம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து, தனது மன உந்துதலால்தான் சில உண்மைகளைச் சொல்ல வெளிவந்ததாகக் கூறினார். சசிகலா கட்டாயப்படுத்தியதன் பேரிலேதான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், சசிகலா முதல்வராகப் பதவியேற்பதில் தனக்கு இருந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதையடுத்து கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து சசிகலாவால் நீக்கப்பட்டார் ஓ.பி.எஸ். இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை மீண்டும் சந்தித்த பன்னீர்செல்வம், ''ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்த 75 நாட்களும்... அவரைப் பார்க்க தான் அனுமதிக்கப்படவில்லை என்றும், அவரது மரணம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்'' என்றும் கூறியுள்ளார். 

விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்கிற நிலையில், அவர்கள் முன்னிறுத்த வேண்டிய கேள்விகள்: 

ரிச்சர்ட் பியெல்

1. சர்க்கரை நோய் தாக்கம் இருந்ததாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவுக்குத் திடீரென நுரையீரல் மற்றும் இருதயக் கோளாறு ஏற்படக் காரணம் என்ன?

2. டாக்டர் ரிச்சர்ட் பியெல், செப்ஸிஸ் நோய் சிகிச்சை நிபுணர். செப்ஸிஸ் தாக்கத்திலிருந்து ஒருவர் குணமடைந்தாலும், அவரின் 25 சதவிகித உடல் ஆரோக்கியத்தைத்தான் திரும்பப் பெற முடியும் என்பது உண்மையா... செப்ஸிஸ், குணமடைவதற்கான சிகிச்சைகள் உள்ளனவா... சிகிச்சை இல்லையென்றால், ஜெ. உடல்நிலை தேறி வருகிறார் என்று தொடர்ந்து கூறி வந்தது ஏன்?

3. அப்போலோ மருத்துவமனையின் ஒரு தகவலில், முதல்வர் ‘pulmonary edema’ நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய பேட்டியில்... ''ஜெயலலிதா செப்ஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்'' என்றார் டாக்டர் ரிச்சர்ட். இந்த முரண்பட்ட கருத்து ஏன்?

4. தமிழக மருத்துவச் சிகிச்சை வரலாற்றில், ‘எக்மோ’ என்னும் கருவி பற்றிச் சாமான்யர்கள் இப்போதுதான் கேள்விப்படுகிறார்கள். எக்மோ கருவியின் செயல்பாடு என்ன... வென்டிலேட்டர் கருவியைவிட, அது மேம்பட்டதா... எக்மோ கருவியின் உதவியுடன், ஒரு நோயாளியை எவ்வளவு நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்?

5. எக்மோ உதவியுடன் மீண்டும் குணமடைவது சாத்தியமா?

6. 4.12.2016 அன்று திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது?

ஜெயலலிதா

7. ரிச்சர்ட் முதன்முதலில் அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது... அவரால் பேச முடிந்ததா, அவர் உங்களிடம் என்ன சொன்னார்?

8. ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்பாக சிகிச்சை அளிக்க வேண்டி ரிச்சர்டை முதன்முதலில் தொடர்புகொண்டது யார்?

9. ஜெயலலிதா உடல்நிலை தொடர்பான ரிச்சர்டின் முதற்கட்டத் தகவலறிக்கை என்னவாக இருந்தது?

10. ஜெயலலிதாவுக்குத் தர வேண்டிய தீவிர சிகிச்சை தொடர்பாக... என்னென்ன ஆலோசனைகள் ரிச்சர்டால், அப்போலோ டாக்டர்களுக்கு வழங்கப்பட்டன? அவை அத்தனையும் சரிவரப் பின்பற்றப்பட்டனவா?

11. ரிச்சர்ட், கடைசியாக அவரைச் சந்தித்தபோது... அவரது உடல்நிலை எப்படி இருந்தது?

12. கண் இமைக்கும் நேரத்தில், அத்தனையும் நிகழ்ந்தேறி உள்ளன. இது எதிர்பார்த்ததுதானா?

13. ''காப்பாற்ற முடியாது என்று தெரிந்ததும் டாக்டர்களே முடிவு செய்து கருவியை அகற்றினோம்; செயலாளர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்'' என்றார் டாக்டர் பாபு ஆபிரகாம். மாநில முதல்வரின் உயிர் பற்றி முடிவெடுக்க அப்போலோ நிர்வாகத்துக்கு அனுமதி யார் தந்தது? எப்போதும் அந்த அறையில் உடனிருந்த மன்னார்குடி குடும்பத்தினர் அப்போது எதுவுமே சொல்லவில்லையா?

14. ''டிசம்பர் 4-ம் தேதி மாலை, திடீர் மாரடைப்பு ஏற்பட்டது; உடனடியாக, எக்மோ கருவி பொறுத்தப்பட்டது; ஆனால், கருவி மட்டுமே இயங்கியது; ஜெ-யின் இதயம் இயங்கவேயில்லை'' என்கிறார். அப்படியென்றால், ஜெ. இறந்தது எப்போது? 4-ம் தேதியா அல்லது 5-ம் தேதியா? 4-ம் தேதியென்றால் அவரது இறப்பை அறிவிக்கத் தாமதம் ஏன்? அவரது நலனுக்காகவா அல்லது சிலரின் அரசியல் நலனுக்காகவா?

15. ''செப்சிஸ் நோய்த் தாக்கம் ஏற்பட... நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளாது, இரண்டு நாட்களில்கூடப் பரவும்'' என்கிறார் டாக்டர் ரிச்சர்ட். அப்படியென்றால் நீர்ச்சத்துக் குறைவு மற்றும் காய்ச்சல் என்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, செப்சிஸ் நோய்த் தாக்கம் ஏற்பட்டது எப்போது? 

- ஐஷ்வர்யா

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்