'என்ன...சசிகலா பற்றி கருத்து சொல்கிறாரா பன்னீர்செல்வம்!’ - கனிமொழி ஆச்சரியம் #OPSvsSasikala | Did Panneer Selvam speak about Sasikala, questions Kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:39 (09/02/2017)

'என்ன...சசிகலா பற்றி கருத்து சொல்கிறாரா பன்னீர்செல்வம்!’ - கனிமொழி ஆச்சரியம் #OPSvsSasikala

கனிமொழி

முதலமைச்சர் பதவியிலிருந்து தாம் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவு அளித்த பேட்டியில் அதிரடி தகவலை வெளியிட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி உட்பட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பரவலாக ஆதரவாகவும் சிலர் எதிராகவும் பதியப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக சசிகலா தலைமையில் அமைச்சரவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் முடிவில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பேசும்போது, 'ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. மேலும் அவருக்குப் பின்னணியில் திமுக. இருக்கிறது. சட்டமன்றத்தில் துரை முருகன் ஆதரவளித்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் மெளனம் சாதித்தது ஏன்? என்ற கேள்வியும் கேட்டிருக்கிறார். சசிகலாவின் கருத்திற்கு, திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, 'ஓ. பன்னீர்செல்வம் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு திராணி  இருந்தால் சசிகலா பதில் சொல்லட்டும். அதை விட்டு விட்டு திமுக.வை குற்றம் சாட்ட வேண்டாம்' என பதிலடி கொடுத்துள்ளார்.
 
திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு மற்றும் இப்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து, திமுகவின் மாநிலங்கவை உறுப்பினர் கனிமொழியிடம் கேட்ட போது, ‘தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்ய நிர்பந்தப் பட்டார் எனக்கூறியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். கட்சிக்குள் என்ன நடக்கிறது? இதுவரை என்ன நடந்தது... என்பதை ஜனநாயக ரீதியாக ஓட்டளித்த மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும். இன்று அனைவருமே தமிழகத்தை உற்று நோக்கும் வகையில், ஆளுங்கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தை வளர்ச்சி பயணத்தை நோக்கி செல்லவேண்டும். அதற்கு தமிழக ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுக்கவேண்டும். அதையும் விரைந்து செய்யவேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சி, மக்களின் நலன் என்பது மட்டுமே திமுக.வின் நோக்கம். மக்கள் பிரச்னைக்காக நாங்கள் உதவுவோம் என ஏற்கெனவே திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த அடிப்படையில்தான் திமுக. செயல்பட்டு வருகிறது. அரசியல் காரணமாக திமுக. மீது அதிமுக.வினர் பல்வேறு விமர்சனத்தை வைக்கின்றனர். அதற்கெல்லாம் நாங்கள் விளக்கம் சொல்ல இயலாது. அரசியலில் ஆண், பெண் எனப் பிரித்து பார்க்கமுடியாது. இதுவரை அரசியல் தலைவர்களாக வந்தவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் சென்று, மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி மக்களின் மதிப்பை பெற்றவர்கள். ஆனால் சசிகலாவோ, மக்கள் பிரச்னைக்காக களத்தில் இறங்கி எந்தப் போராட்டமும் செய்யாதவர். அதனால் சசிகலாவைப் பற்றி கருத்து சொல்லும் அளவிற்கு அவர் இன்னும் முழு நேர அரசியலுக்கு வரவில்லை என்பதே என் கருத்து, அவரைப் பற்றி பன்னீர்செல்வம் சொல்லும் விஷயங்கள் ஆச்சர்யமாக இருக்கிறது’ என்றார்.

- ஆர்.ஜெயலெட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close