"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது!"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala | It's a planned move by dmk and bjp, says admk spokesperson nanjil sampath

வெளியிடப்பட்ட நேரம்: 18:03 (08/02/2017)

கடைசி தொடர்பு:12:40 (09/02/2017)

"தி.மு.க ஆசை காட்டுகிறது, பா.ஜ.க. மிரட்டுகிறது!"- நாஞ்சில் சம்பத் #OPSVsSasikala

 

மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தின் முன்பு அமர்ந்து திடீரென நாற்பது நிமிடங்கள் தொடர் தியானம் மேற்கொண்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதற்கடுத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்... தன்னை முதல்வராகத் தொடருமாறு பணித்தவர்களே, அந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான்... தானும் ராஜினாமா செய்ததாக கூறிப் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கடுத்து கூட்டப்பட்ட கட்சியினர் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்றிரவு தொடங்கியே... சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் பன்னீர் ஆதரவாளர்கள் என கட்சி இருவேறான நிலைகளில் இருந்துவருகிறது. இந்தநிலையில் பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு தொடர்பாக கட்சியின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.

“ எதிர்க்கட்சியான தி.மு.க-வின் திட்டமிட்ட சதியால்தான் பன்னீர்செல்வம் இவ்வாறு செயல்படுகிறார். அவர், முதல்வராக நீடிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று எப்போது துரைமுருகன் கூறினாரோ, அப்போதே இது ஊர்ஜிதமாகிவிட்டது. 'சின்னம்மா முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்ள இருப்பதே தனக்குத் தெரியாது' என்கிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே அழைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் நிலையில் அவருக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போகும்? இப்படித் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு சின்னம்மா மிரட்டியதாகக் கூறுவதன் பின்னணி என்னவென்று பொய் சொல்லும் அவருக்குத் தெளிவாகவே தெரியும்” என்றார். 

''பன்னீர்செல்வத்தின் இந்தத்  திடீர் நிலைப்பாட்டின் பின்னணியில், பி.ஜே.பி இருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறதே'' என்கிற கேள்விக்குப் பதிலளிக்கையில், ''

நிச்சயம் இருக்கிறது. பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததும், உடனடியாக ஹெச்.ராஜா கூட்டத்தைக் கூட்டி பன்னீர் நேர்மையாகச் செயல்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அவருக்கு என்ன எங்கள் கட்சி மீது திடீரென அக்கறை? இது முழுக்க முழுக்கக் கட்சியைப் பிளவுபடுத்த மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியும் மாநில எதிர்க்கட்சியும் கூட்டாகச் செயல்பட்டு நிறைவேற்றுவது.தி.மு.க ஆசையைக் காட்டி மிரட்டுகிறது, பி.ஜே.பி., அதிகாரத்தை காட்டி மிரட்டுகிறது!” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

''ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்க இருந்த நிலையில், நீங்களுமே கட்சியில் சுதந்திரம் இருக்காது என்று விலகுவதாகத்தானே முதலில் கூறினீர்கள். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான கருத்தைத்தானே முன்வைத்திருக்கிறீர்கள்'' என்றதற்கு, ''அது வேறு... இது வேறு! நான் வேறு... அவர் வேறு! நான் கொள்கைப் பரப்புச் செயலாளர்... அவர் முதல்வர்!  அதற்கான பொறுப்பு அவருக்கு இருக்கவேண்டும்” என்றார்.

'அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்'

-ஐஷ்வர்யா

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்