'ஓ.பன்னீர்செல்வத்துக்கு பின்னால் பிஜேபியா'? - தமிழிசை செளந்தரராஜன் விளக்கம்! #OPSvsSASI

தமிழிசை

மெரினா கடற்கரையில் நேற்று இரவு மனம் திறந்த பன்னீர்செல்வத்தின் பேட்டி அரசியல், சமூகம், ஊடகம் என பலதளங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பேட்டியின் பின்னணியில் இருப்பது மத்தியில் ஆளும் கட்சியா அல்லது மாநில எதிர்க்கட்சியா என்ற கருத்துகளும் கசியாமல் இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் உருவான மர்மமுடிச்சுகளின் பா.ஜ.க.வின் தந்திரம் இருப்பதாக இட்லிக் கடை ஆயா வரை புட்டுப் புட்டு வைக்கும் இந்த சூழலில், இதுவரை மவுனம் காத்த தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தாம் நிர்பந்திக்கப்பட்டதாக மக்கள் மன்றத்தில் மனம் திறந்துள்ளார். பா.ஜ.க.வுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் என்ன சம்பந்தம் என நம்மிடம் கொதித்தெழுந்தார் தமிழிசை.

‘தமிழக முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அவர் முழு அதிகாரத்தோடு செயல்பட்டாரா என்பது சந்தேகத்துக்குரியது. அவரது அமைச்சரவை அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையும் சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் அவர் எந்தளவுக்கு மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருப்பார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது முதல்வர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்றபோதும், தற்போது ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் சரி தனது அரசியல் அனுபவத்தில் திறம்பட செயல்பட்டார் ஓபிஎஸ்.

இதுவரை பொறுமை காத்த அவர் நேற்று தனது மௌனம் கலைத்திருக்கிறார். சசிகலாவை விரும்பாத அடிமட்டத் தொண்டர்கள் எங்கே செல்வது? என்ற சூழலில் தவித்துக் கொண்டுள்ளனர். இம்மாதிரியான சூழலில் கட்சிக்கு உள்ளே நடைபெறும்  பூசல்களில் ஒரு சிலவற்றை பற்றி மட்டும் மனம் திறந்திருக்கிறார் பன்னீர்செல்வம்.
 
ஓ. பன்னீர்செல்வத்துக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு எந்தளவில் இருக்கிறது என்பது கேள்விக்குறியே... தமிழகத்தில் கடுமையான அரசியல் சூழல் நிலவுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் ஆட்சி ஸ்திரத்தன்மை இல்லாத நேரத்தில் வளர்ச்சியை நோக்கி செல்வது என்பதும் இயலாத நிலை.

தமிழக மக்கள் பல்வேறு சோதனையான கட்டங்களை கடந்து வந்துள்ளனர். இச்சூழலில் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை இப்போது சொல்ல இயலாது. சமூக வலைத்தளங்களின் வாயிலாக மக்கள் தங்களது கருத்துகளை சொல்லி வருகின்றனர். ஊடகங்களும் பெரும்பான்மையான மக்களின்  கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படிதாம் ஆளுநர் நடந்து கொள்ள முடியும். ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளது உட்கட்சி விவகாரம் என ஒதுக்கி விட இயலாது.

-ஆர்.ஜெயலெட்சுமி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!