போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்படுகிறாரா? #OPSVsSasikala #VikatanExclusive | Will Sasikala be evicted from Poes Garden?

வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (09/02/2017)

கடைசி தொடர்பு:18:42 (09/02/2017)

போயஸ் கார்டனிலிருந்து சசிகலா வெளியேற்றப்படுகிறாரா? #OPSVsSasikala #VikatanExclusive

சசிகலா

மிழக அரசியலில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல அதிரடி மாற்றங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஜெயலலிதா மரணத்தில் சிலரால் சந்தேகத்திற்குரியவராகக் கருதப்படும் சசிகலாவே அ.தி.மு.க.வி-னரின் ஏகோபித்த ஆதரவுடன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஜெயலலிதா போலவே உடை, ஒப்பனைகளைப் போட்டுக்கொண்டு 'சின்னம்மாவாக' மாறியதைவிட ஓ. பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டி விட்டு முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒன்றும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விடவில்லை. ஆனால் சில நாட்களில் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் திருப்பம் உண்மையிலேயே தமிழக அரசியல் சூழலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. 

ஓ.பன்னீர்செல்வம், "கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள். மக்கள் விரும்புபவர்தான் முதல்வராகவும் பொதுச்செயலாளராகவும் ஆக வேண்டும். தன்னந்தனி ஆளாக நின்றுப் போராடுவேன்" என்று  மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் 40 நிமிட தியானத்துக்குப் பிறகு பேசப் பேச, மக்கள் மத்தியில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவும், சசிகலாவுக்கு எதிர்ப்பும் கிளம்பியது.  

தற்போது தமிழகம் முதல்வர் இல்லாத 'காபந்து சர்க்கார்' என்ற நிலையில்தான் உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். சசிகலா இன்னும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ஒரு சில எம்.எல்.ஏ-க்களைத் தவிர, பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு முழுவதும் சசிகலாவுக்கே இருக்கிறது. ஆனால், சசிகலா பொதுச்செயலாளராக ஆக முடியாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து ஜார்ஜ் மாற்றம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பொறுப்பில் சஞ்சய் அரோரா ஐ.பி.எஸ் நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அசாதாரண சூழ்நிலையில் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் 'வேதா நிலையம்' வீட்டை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும், சசிகலா அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். 
இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் சொத்து குறித்து உயில் எழுதப்பட்டிருந்தால் அதற்கான உரிமையை ரத்த உறவுகளான ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபக் மற்றும் தீபா இருவரும்தான் கோர முடியும். ஆனால் அவர்களே எந்தப் பிரச்னையையும் கோரிக்கையையும் எழுப்பாமல் இருக்கும் நிலையில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக அரசு மாற்றுவது என்பது சாத்தியமில்லாத காரியம். 

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

- ஜெ.சரவணன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்