வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (11/02/2017)

கடைசி தொடர்பு:20:02 (11/02/2017)

'சசிகலா, ஜெயலலிதா போல வேஷம் போட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா?' - கடுகடுக்கும் லதா #OPSvsSasikala

லதா

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார். அதன்பிறகு மன்னார்குடியின் கை ஓங்க, அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் சசிகலா. அதனை தம்பிதுரை உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஆதரித்தனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் 'தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து வைத்து விட்டனர்' என பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க அரசியல் களம் பற்றிக் கொண்டது. அதனைத்  தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நடிகர், நடிகையர், பிரபலங்கள் என பலத்துறையை சேர்ந்தவர்களும் தங்களின் ஆதரவு யாருக்கு என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இச்சூழலில் திரைப்பட நடிகை லதா 'எம்ஜிஆர் வளர்த்த கட்சி பிளவுபட்டிருப்பதைக் காணும் போது வேதனை அளிக்கிறது. விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்'  என அதிரடியாக கூறியுள்ளார். அவரிடம் பேசினோம்.

 '‘தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலைப் பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எம்ஜிஆர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்திற்காகவே அதிமுகவைத் துவக்கினார். கட்சி ஆரம்பிக்கும்போது அவருடன் நான் இருந்து கண்கூடாக அவருடைய வளர்ச்சியை, முயற்சியை, அயராத பணியை பார்த்திருக்கிறேன். கட்சியை துவக்கி அதன் வளர்ச்சிக்காக எத்தனை எத்தனை சிரமங்களை அவர் தாங்கிக் கொண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது.

 அதிமுகவுக்காக 1977ல் திருச்சி, மதுரை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நாட்டிய நாடகம் நடித்து, அப்போதே கட்சிக்காக ரூ.40 லட்சம் நிதி திரட்டி கொடுத்துள்ளேன். எம்ஜிஆர் இன்றும் மக்கள் மனதில் வாழ்கின்ற தலைவர். அவருடைய சின்னமான இரட்டை இலைக்கு மக்கள் மத்தியில் அமோக மரியாதை இருக்கிறது. அவர் மக்களுக்கு செய்த நல்ல விஷயங்களை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதுதான் அதிமுக இன்னமும் நிலைத்து நிற்பதற்கான அடித்தளம் என்பதை தொண்டர்கள் முதல் மக்கள் வரை புரிந்து வைத்திருக்கிறார்கள்.

எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதா வந்தார். அவரும் அந்தப் பதவியை அடைய அத்தனை அவமானங்களையும், சவால்களையும் சந்தித்தார். அதன் விளைவாகவே அகில இந்திய அளவில் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக அதிமுக மாறியது. அதிமுக என்பது ரிலே ரேஸில் ஓடிக் கொண்டிருக்கும் கட்சி. அது எம்.ஜி.ஆர் என்கிற மாபெரும் சிகரத்திடம் இருந்து ஜெயலலிதா என்கிற ஆளுமைக்கு சென்றது. கட்சியின் பெயரும் நற்பெயரும் வளர்ந்தது. கட்சி வளர ஒரு நாள் ரெண்டு நாளிலில்லை, பல வருடங்கள் ஆனது. விதை நட்டு, செடியாக வளர்ந்து, விருட்சமாக மாறியது. இப்போது அதிமுக என்கிற ஆலமரத்தை இரண்டாக பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். இதனால் யாருக்கு நலன் என்பதைப் பற்றி யோசிக்காமல் தன் நலன், பதவி ஆசையில் இருக்கிறார்கள். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு மக்களின் மனதில் இருக்கின்ற ஒருவரே முதல்வராக வரவேண்டும் என்று நான் அறிக்கை விட்டிருந்தேன்.

எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா வளர்த்த கட்சியை ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பிளவுப்படுத்தப்படுவதை பார்க்கும்போது மனம் வேதனையில் தவிக்கிறது.
 
ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம் தலைமையில் நல்ல முறையில் தமிழகம் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு சீக்கிரம் கட்சியை  உடைத்து, முதல்வர் ஆக வேண்டும் என்ற அவசியம் சசிகலாவிற்கு எதற்கு? ஓ.பன்னீர்செல்வம் தன் கடமையை சரியாகதானே செய்து கொண்டிருந்தார். இன்னமும் சில வருடங்கள் கழித்து தேர்தலில் நின்று ஜெயித்து அல்லவா கட்சிக்குள் நுழைந்திருக்க வேண்டும். பிரச்னையை தங்களுக்குள் பேசி தீர்ப்பதுதானே நல்ல ஆளுமைக்கான அழகு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். பதவிக்காக அவசர, அவசரமாக கட்சியை உடைத்ததால், தமிழகத்தை உலகமே பார்த்து சிரிக்கின்ற நிலைமைக்கு ஆளாக்கியிருக்கிறோம்.  இது நம் மாநிலத்துக்கு நல்லதல்ல.

சசிகலாவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்கிறது என்பதுதான் வெளிப்படையாக தெரிகிறதே. நான் மக்கள் மத்தியில் தினமும் பேசி வருகிறேன். ஜெயலலிதா போல் சேலை கட்டிக் கொள்கிறார். கொண்டை போட்டுக் கொள்கிறார். ஜெயலலிதா போல் பேசுகிறார். இப்படியெல்லாம் மாறுவேஷம் போட்டால் இவர் ஜெயலலிதா ஆகிவிட முடியுமா? எனக்கு புரியவில்லை. ஆளுநர் நடவடிக்கை என்பது அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டதாக அமையும். இந்நிலை அதிமுகவில் தொடர்ந்தால் நான் என்  முடிவையும் தமிழக மக்களுக்கு அறிவிக்கின்ற நாள் வரும்" என்று கடுகடுப்புடன் பேசி முடித்தார் நடிகை லதா.

-ஆர்.ஜெயலெட்சுமி

படம்: சு.குமரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்