’எப்பவுமே இப்படின்னா... என்னதான் பண்றது!?’ - சுப்பிரமணியன் சுவாமி குறித்து தமிழிசை #OPSVsSasikala

பன்னீர்செல்வம் - சுப்பிரமணியன் சுவாமி - தமிழிசை - சசிகலா

மிழக அரசியல் சூழலில் எந்நேரமும் திருப்பம் ஏற்படலாம் என்கிற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக பாரதிய ஜனதாவும் பன்னீர்செல்வம் முதல்வராக நீடிப்பதே முறை என்கிற நிலைப்பாட்டில் உள்ளன. ஆனால், அண்மையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, ''சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதே முறை என்றும், தமிழக பாரதிய ஜனதாவும் திராவிடக் கட்சிகள் போன்றுதான் செயல்படுவதாகவும், திராவிடக் கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமை தமிழகத்தில் கால் ஊன்றினால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்'' என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை பதிலளித்துப் பேசுகையில், '' 'தமிழக பாரதிய ஜனதா தனது நிலைப்பாட்டை எடுக்க உரிமை உள்ளது' என்று மத்தியில் அமித்ஷா கூறியுள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமி, இப்படிப் பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. ஆனால், அவரது கருத்துக்குப் பதில் கூறி எங்களது நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. மேலும் நாங்கள் காங்கிரஸ் போன்று ஒவ்வொருவரும் ஒரு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் இல்லை. தமிழக பாரதிய ஜனதா, 'பன்னீர்செல்வம்தான் முதல்வராக மீண்டும் வரவேண்டும்' என்கிற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்கு பதவி ஆசை ஏற்பட்டிருக்காவிட்டால்... இந்த நிலைமை உருவாகி இருக்காது. தமிழக மக்களின் அமைதியான வாழ்வுதான் எங்களுக்கு முக்கியம். பன்னீர்செல்வமே முதல்வராக நீடித்திருந்தால் இப்படியான சூழல் உருவாகி இருக்காது. அதனால்தான் நாங்கள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளிக்கிறோம். மற்றபடி தமிழகத்தில் பாரதிய ஜனதா கால் ஊன்ற சதித் திட்டம் தீட்டுகிறது என்பதெல்லாம் முற்றிலும் பொய்யான வாதம். தேர்தலில் நேரடியாக மோத விரும்புபவர்கள் நாங்கள். திராவிடக் கட்சிகளுக்கே சவால்விடும் கட்சியாக தமிழகத்தில் பாரதிய ஜனதாவை வளர்த்து வருகிறோம். மத்திய நிர்வாகிகளுக்கும் இது நன்றாகவே தெரியும்” என்றார்.

''அப்படியென்றால், சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டுக்கு மத்தியத் தரப்பில் ஏதேனும் புகார் தெரிவிக்கப்படுமா'' என்றதற்கு, “அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை. எப்பவுமே இப்படித்தான் என்றால், புகார் கூறி என்னதான் செய்வது” என்று புலம்பினார். 

ஒரு கட்சியிலேயே இப்படியா?

-ஐஷ்வர்யா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!