சின்னம்மா பிரஸ்மீட்டில் நாம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #TuesdayThagaraaru | A satirical article on sasikala's pressmeets

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (14/02/2017)

கடைசி தொடர்பு:09:33 (14/02/2017)

சின்னம்மா பிரஸ்மீட்டில் நாம் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்! #TuesdayThagaraaru

தமிழ்நாட்டு முதல்வர் பன்னீர்செல்வம் போய் எப்ப மெரினால தியானம் பண்ணாரோ அப்ப இருந்து தமிழ்நாட்டு அரசியல் சும்மா தகதகன்னு மின்னிகிட்டு இருக்கு. அப்ப இருந்து இப்ப வரைக்கும் முதல்வரும், சசிகலாவும் மாறி மாறி சேனல் சேனலா பேட்டி கொடுத்துட்டே இருக்காங்க. ஒரு காலத்துல இவங்க வாய்ஸ் எப்படி இருக்கும்ன்னு எல்லாரும் யோசிச்சுக்கிட்டு இருந்தது போய் இப்பலாம் “இவங்க வாய்ஸ் என்ன பாஸ் இப்படி இருக்கு?'' ன்னு நினைக்கிற அளவுக்கு நிறைய டைம் பேட்டி கொடுத்துட்டாங்க. தினமும் ரெண்டு தடவை பிரஸ் மீட் வைக்கிற சசிகலாவை நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா ஈஸியா வாழ்க்கைல முன்னேற சில வழிகளைக் கண்டுபிடிக்கலாம்... என்ன மாதிரி வழிகள்னு நீங்களே பாருங்க பாஸ்..! 

சசிகலா


*வாழ்க்கைல எப்போதும் எல்லாத்துக்கும் நிதானம் வேணும்ன்னு சொல்லுவாங்க. அதிமுகவோட சில தொண்டர்களால சின்னம்மான்னு அன்போடு அழைக்கப்படுற சசிகலாவோட பேட்டியை பார்த்தீங்கன்னா உங்களுக்குக் கண்டிப்பா பொறுமையா இருக்குற குணம் வந்துடும். `இதுல்ல என்ன பாஸ் தத்துவம் இருக்கு?'ன்னு கேட்க்குறீங்களா.... மூணு வார்த்தைல பதில் சொல்ல மூணு மணிநேரம் எடுத்துக்குறது மூலமா சின்னம்மா எல்லாரையும் பொறுமையா இருக்கச் சொல்லுறாங்க.எப்படி போன வாரம் வரைக்கும் ஏடிஎம்ல பொறுமையா நின்னீங்களோ அந்த மாதிரி.பொறுமையா அவங்க பேசுறதை கேளுங்க..... ஆனந்தமா இருங்க. 

*காலங்காலமா நம்ம அரசியல்ல தூய தமிழ் ஸ்லாங்ல பேசுறதுதான் வழவழ... வழக்கமா இருந்திருக்கு. அந்த மாதிரி பாரம்பரிய வழக்கமா இருந்ததை எல்லாம் உடைச்சு லோக்கல் ஸ்லாங்ல பேசுறதையே டிரெண்டா மாத்தி இருக்காங்க சசிகலா. இந்தக் குறியீடு மூலமா நாம தெரிஞ்சிக்க வேண்டியது ஒருவிஷயம்தான்.நீங்க என்னதான் ஒரு பாரம்பரியமான இடத்துல இருந்தாலும் பழைய விஷயம் எதையும் ஃபாலோ பண்ணாம புதுசா நீங்களே ஒரு டிரெண்ட் உருவாக்கணும். #பேஜாரா_ இரிக்கி 

*ரொம்பக் காலமாவே மேடைப் பேச்சுனா அது கையை ஆட்டி ஆட்டி பேசுறதுதான்னு எல்லாரும் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க.ஆனா மேடைப் பேச்சு மட்டும் இல்ல நான்லாம் பிரஸ்மீட்லயே கையை ஆட்டி ஆட்டிதான் பேசுவேன்ன்னு இப்ப சசிகலா நிரூபிச்சுக்கிட்டு வர்றாங்க. `சாப்பிட்டீங்களா?'ன்னு கேட்டா `சாப்பிட்டேன்'னு சைகைலேயே சொல்றது, எங்க போறீங்கன்னு கேட்டா வீட்டுக்குன்னு சைகைலேயே சொல்றதுன்னு எல்லாத்துக்குக் கையை ஆட்டி ஆட்டி பேசிக்கிட்டே இருப்பாங்க. இது மூலமா நாம வாழ்க்கைக்கான முக்கியமான தத்துவத்தைத் தெரிஞ்சிக்கலாம்.இதுக்கு முன்னாடி பாயிண்ட்ல பாரம்பரியத்தைக் கடைபிடிக்கிறது எப்படித் தப்புன்னு சொன்னேனோ அது மாதிரி இல்லாம இந்தப் பாயிண்ட் மூலமா எல்லா விஷயத்துலயும் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கணும்னு சொல்லி இருக்காங்க. கடைபிடிங்க பிரெண்ட். #அதோ_அந்தப்_பறவைபோல 

சசிகலா

*வாழ்க்கைல சில சமயங்கள் நாம சில கேள்விக்குப் பதில சொல்ல தெரியாம திணறுவோம். அந்த மாதிரி நேரத்துல நாம கஷ்டப்படாம இருக்க நல்ல தீர்வு ஒண்ணை சொல்லி இருக்காங்க சின்னம்மா சசிகலா. உங்களுக்கு ஒரு கேள்விக்குப் பதிலே தெரியலைனா உடனே கேள்வி கேட்டவங்ககிட்டயே, ``உங்களுக்கே இதுக்குப் பதில் தெரியுமே,,” அப்படின்னு அறிவுப்பூர்வமா பதில் சொல்லிடணும். கடைசி வரைக்கும் கேள்வி கேட்டவன், `இது என்ன பதில்டா!' ன்னு குழம்பிப் போயிடணும். பதில் சொன்ன மாதிரியும் இருக்கண்ணும்... சொல்லாத மாதிரியும் இருக்கணும். #சொல்லாதே_பதில்_சொல்லாதே! 

*வாழ்க்கைல எப்பவாச்சும் கஷ்டம் வந்தா அதை உள்ளேயே வெச்சுக்காம உடனே வெளிப்படையா அழுதுடணும். சசிகலா ஒவ்வொரு பேட்டியிலயும் லைட்டா கண்ணீர் விடுறத்துக்கு முக்கியக் காரணம் இதுவாத்தான் இருக்கும். பதில் சொல்ல முடியாத கேள்வி யாராவது கேட்டா உடனே சின்னம்மா சின்னதா அழுதுடுவாங்க. இது மூலமா நாம வாழ்க்கைல ஒரு விஷயம்தான் தெரிஞ்சிக்கலாம். எதாவது பிரச்சனைனா உடனே வெட்கத்தைவிட்டு கண்டபடி அழுதா மனசு கண்டிப்பா சரியாகிடும். #கூல்_டவுன்! 

*சசிகலா சமீபத்துல கொடுத்த பேட்டில `சிங்கம் கூடவே இருந்திருக்கேன்... நான் குட்டி சிங்கம்!'னு சொல்லி இருப்பாங்க. இது நாம வாழ்க்கைல எங்கே போனாலும் கண்டிப்பா மறக்காம கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான தத்துவம். நாம் என்னதான் சின்ன ஆளா இருந்தாலும் ஒரு பெரிய புத்திசாலி கூடப் பழகுனா கண்டிப்பா நாமளும் அதே மாதிரி ஆகிடுவோம். ஆகவே மக்களே... நீங்க எப்படிப்பட்டவரா இருந்தாலும் சரி உங்க நண்பர்கள் கண்டிப்பா நல்லவர்களா இருக்கணும்! # ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்..? 

*கடைசியா சசிகலா பெரும்பாலான பேட்டிகள்ல சொல்லக்கூடிய விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.எப்போ பேசுனாலும் என் 33 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்ன்னு நீளமா வசனம் பேசுவாங்க.33 வருஷத்துல அவங்க எத்தனை முறை மக்கள் பிரச்சனைக்காகப் போராடுனாங்க, மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுத்தாங்கன்னு நமக்கும் தெரியாது, அவங்களுக்கும் தெரியாது. ஆனாலும் இதுல நாம் கத்துக்க வேண்டிய விஷயம் என்னன்னா... ``நீங்க எதுவுமே பண்ணலைனாலும் உங்க வரலாறை மட்டும் கண்டிப்பா மறக்கவே கூடாது. #வரலாறு முக்கியம் அமைச்சரே! 

- லோ.சியாம் சுந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்