வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (14/02/2017)

கடைசி தொடர்பு:12:10 (14/02/2017)

பன்னீர்செல்வம் எதிர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கு - சட்டை செய்யாத சசிகலா! #OpsVsSasikala #DACase #JudgementDay

சசிகலா

னலாக தகித்துக் கொண்டிருந்த தமிழக அரசியல், இன்றைய தினம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆம்... ஜெயலலிதா, சசிகலா தரப்பு மீது சுமத்தப்பட்ட 'சொத்துக் குவிப்பு வழக்கு' கடந்த 20 வருடங்களில் பல்வேறு கட்டங்களைத் தாண்டி வந்துள்ளது. இறுதியாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இவ்வழக்கில் இருந்து ஜெ.-சசிக்கு விடுதலை அளிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து அடுத்தக்கட்டமாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இதில், விசாரணைகள் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று (14-2-2017) காலை 10.30 மணியளவில், இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கிய இந்த ஒரு வாரகாலத்தில், தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்புகள் ஒட்டுமொத்த இந்தியாவையுமே உற்றுப் பார்க்க வைத்தது. இந்த பரபரப்புகளின் உச்சமாக இன்றையத் தீர்ப்பு ஏற்படுத்தவிருக்கும் அரசியல் மாற்றங்களை எதிர்நோக்கி ஏழரை கோடி தமிழ் மக்களும் நகம் கடித்தபடி காத்திருக்கின்றனர்.

இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் போயஸ்கார்டன் வட்டாரத்திலோ முன் எப்போதும் இல்லாத உற்சாகம் ஊற்றெடுப்பது எல்லோருக்குமே வியப்பைத் தருகிறது. ஒரே நாளில் அடுத்தடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களது கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. அவரது பேச்சில், முன்பிருந்த தயக்கம் உடைபட்டு வார்த்தைகள் சரளமாக கொட்டுகிறது. பத்திரிகையாளர்களின் நாசூக்கான சில கேள்விகளை, சாமர்த்தியமான ஒற்றை வரிப் பதில்களோடு கடந்துபோகிறார். அனுபவம் மிக்க அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சசிகலாவின் இந்த அதிரடி மாற்றத்துக்கான பின்னணி என்ன...?

ஓ. பன்னீர்செல்வம் - சசிகலா

'ஆளுமை நிறைந்த ஜெயலலிதாவோடு கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக, நெருங்கிய தோழியாக இருந்துவந்தவர் சசிகலா. ஆனாலும் அவரது பேச்சு - செயல்பாடுகளில் இன்றைக்கும் சராசரி தஞ்சாவூர் பெண்ணின் சாயலே தென்படுகிறது. படிப்பறிவு இல்லாதவர், அரசியல் அனுபவத்தில் துளியும் தொடர்பில்லாதவர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டுவந்த சசிகலா, இன்றைக்கு தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துள்ளார். இவ்விஷயத்தில் அவருக்கு எதிராகப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டாலும், பிரச்னையின் மூலகாரணமாக சசிகலா அவதாரம் எடுத்திருப்பதே குறிப்பிடத்தக்க வளர்ச்சிதான்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அந்த வகையில், இன்றையத் தமிழக அரசியல் சக்கரத்தின் அச்சாணியாகவே மாறியிருக்கிறார் சசிகலா. 

'வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்... எவ்வளவோ சவால்களைப் பார்த்துவிட்டேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் எனக்கு தூசி மாதிரி... ஊதி தள்ளிவிடுவேன்' என்றெல்லாம் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கெத்தாகப் பதில் அளித்துப் பேசிய சசிகலாவின் உண்மையான சுபாவம்தான் என்ன?

''கிராமத்துப் பெண்களுக்கே உரிய அசாத்திய தன்னம்பிக்கையும் துணிச்சலும் சசிகலாவிடத்தில் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது. 'சிங்கத்தோடே பழகியவள் நான்' என்று அவர் ஜெயலலிதாவை சுட்டிக்காட்டிப் பேசுவது, எழுதி வைத்துக்கொண்டு பேசும் பேச்சல்ல... அரசியல் ரீதியாக இப்போது நடைபெற்றுவரும் இந்த சலசலப்புகள் குறித்தெல்லாம் அவர் ஒருபோதும் சட்டை செய்ததில்லை. ஆனால், 'அக்கா இறந்தபிறகும் நான் உயிரோடு இருக்கிறேனே...' என்று அவர் நொந்து புலம்பும் தருணங்கள்தான் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.

ஆரம்பத்தில் இருந்தே, ஜெயலலிதா மீது கட்டமைக்கப்பட்டிருந்த ராஜ பிம்பம், தெரிந்தோ தெரியாமலோ சசிகலாவின் மீதும் படிந்துவிட்டது. இந்த பிம்பம், ஜெயலலிதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது வளர்ச்சிக்கும் அத்தியாவசியமாகி இருந்தது. ஆனால், சசிகலா விவகாரத்தில் இவை அத்தனையும் அப்படியே தலைகீழாக மாறிப்போய்விட்டது. இன்றைக்கும் சசிகலா மீதான பொதுமக்களின் அபிப்ராயங்களில், பலத்த எதிர்க்கருத்துகள் நிலவுகிறது. இன்னும் சொல்லப்போனால், அவரை பூலான்தேவி அளவுக்கு சித்தரிக்கும் மனநிலையே மேலோங்கி நிற்கிறது. ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது.'' என்று சர்டிஃபிகேட் கொடுக்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். 

ஜெயலலிதா - சசிகலா

அரசியல் களத்தில், திடீர் திருப்பமாக சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் வாள் சுழற்றும் விவகாரம் குறித்துப் பேசும் சசிகலா ஆதரவாளர்கள், ''பிரச்னைகளை கிளப்பிவிட்டு, அமைதியாக - அப்பாவியாக நின்றுகொண்டு மக்களிடம் சிம்பதியை உருவாக்குவதில் ஓ.பி.எஸ் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். இதே வழியில், சின்னம்மாவின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களையும் நேரில் சந்தித்து உருக்கமாகப் பேசி தன்னை மகாத்மாவாக காட்டிக்கொள்ள வேண்டும் அல்லது பிரச்னைகளை ஏற்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது திட்டம். இந்தத் தகவல் எல்லாம் எங்களுக்கு முன்பே தெரிந்துவிட்டது. நேற்று முன்தினம்கூட கூவத்தூருக்கு சென்று எம்.எல்.ஏ-க்களை சந்தித்துப் பேச அவர் முயற்சி எடுத்தார். ஆனால், சின்னம்மா எடுத்த அதிரடி மூவ் தெரிந்து தன் திட்டத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார்.'' என்று ரகசியம் உடைக்கிறார்கள்.

சமீபத்திய நிகழ்வுகளும் சசிகலா ஆதரவாளர்களின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையிலேயே இருக்கின்றன. கூவத்தூரில், தங்கவைக்கப்பட்டுள்ள ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் சென்ட்டிமென்ட்டாகப் பேசி அனைவரையும் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிர முனைப்பில் இருக்கிறார் சசிகலா. அவர்களோடு சகஜமாகப் பேசிப் பழகுகிறார்; அவர்களது பின்னணியில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூர் விசிட் திட்டம் குறித்துப் பேசுபவர்கள், ''கோல்டன் பே ரிசார்ட்டுக்கு சென்று எம்.எல்.ஏ-க்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானதுமே சசிகலா சொன்ன வார்த்தைகள் இதுதான். 'ஓ.பி.எஸ் அங்கே வரட்டும். வாசலில் முதல் ஆளாக நின்றுகொண்டிருக்கும் என்னிடம் நேருக்கு நேர் நின்று முதலில் அவர் பேசட்டும். அடுத்த நொடியே கட்சியை அவரது கையில் கொடுத்துவிடுகிறேன்' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவர், உடனடியாக கூவத்தூருக்கும் பயணமானார். நேற்றைய தினம் அவர்களோடு அங்கேயே தங்கவும் செய்தார்.'' என்கிறார்கள்.

அடுத்தடுத்த கட்டங்களாகப் பரபரப்பை எகிற வைத்த அரசியல் நிலவரம், இப்போது க்ளைமாக்ஸில் வந்து நிற்கிறது... இன்னும் சில மணிநேரங்களில் முடிவு தெரிந்துவிடும்!

- த.கதிரவன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்