வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (14/02/2017)

கடைசி தொடர்பு:08:39 (15/02/2017)

'சசிகலாவைச் சிக்க வைத்த சொந்தங்கள்!’ அதிர்ச்சி விலகா போயஸ் கார்டன் #DACase #OPSVsSasikala

                    சசிகலா

’’அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா-வுக்கு முதல்வர் கனவை உண்டாக்கிச் சொத்துக்குவிப்பு வழக்கில் எப்படியாவது தப்பித்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கி... அவரை, சிறைக்குள்... அவரின் நெருங்கிய உறவினர்களே தள்ளிவிட்டனர்’’ என்று குமுறுகிறார்கள் சசிகலா ஆதரவு அ.தி.மு.க-வினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று (14-2-17) உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, காலை 10.35 மணிக்கு தீர்ப்பை வாசித்தனர். அதில்,சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்ததுடன், நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4  ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இது போயஸ் கார்டன் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு மாயம் நிகழ்ந்து சசிகலா, நீதிமன்றத்தின் பிடியில் இருந்து தப்பிப்பார் என்று எதிர்பார்த்த அவரின் ஆதரவு அ.தி.மு.க-வினர் மிகவும் சோர்ந்து போயுள்ளனர். ’’அமைதியாக இருந்த நீதிபதிகளை, மன்னார்குடி ரத்த சொந்தங்களே தூண்டிவிட்டுவிட்டன’’ என்று கொதிக்கிறார்கள் சசிகலா ஆதரவு பிரமுகர்கள்.

               சசிகலா

இதுதொடர்பாக போயஸ் கார்டன் தரப்பில் தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர்கள் கூறுகையில்,"ஜெயலலிதா மறைவு எங்களுக்குப் பெருத்த இழப்பு. அதிலிருந்து இன்னும் மீளாமல் நாங்கள் தவித்து வருகிறோம். இந்த நிலையில், ’கட்சியை வழிநடத்த நான் இருக்கிறேன்’ என்று கூறி, பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்றார். அவரை, அம்மாவுக்குப்பிறகு... ’எங்களைக்காக்க வந்த சின்னம்மா’ என்று நாங்கள் கொண்டாடினோம். ஆனால், இப்போது நிலைமை வேறாகிவிட்டது. நீதிபதிகளின் கறார் தீர்ப்பில் சசிகலா சிறைவாசம் பெற்றுள்ளார். இதனை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்த நிலைக்கு டி.டி.வி.தினகரனும், திவாகரனும், டாக்டர் வெங்கடேஷும்தான் காரணம். ஏனெனில், சசிகலாவுக்கு முதல்வர் ஆசை காட்டியது அவர்கள்தான். எப்படியும் முதல்வராகிவிட்டால் வழக்கு விடுதலை எளிமையாகிவிடும் என்று கூறி, அவரைத் தூண்டிவிட்டது அவர்கள்தான். அதனால்தான் அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வத்தை நெருக்கடி கொடுத்து ராஜினாமா செய்யவைத்தனர். உடனடியாக சசிகலா முதல்வராக என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தனர். 

ஆனால், நிலைமை தலைகீழ் ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலைக்குத் தள்ளியவர்கள் சசிகலா சொந்தங்களே என்பது இப்போதுதான் அவருக்கே புரிந்து இருக்கும்" என்றனர்.

- சி. தேவராஜன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்