வெளியிடப்பட்ட நேரம்: 07:01 (15/02/2017)

கடைசி தொடர்பு:08:43 (15/02/2017)

"உச்ச நீதிமன்ற தீர்ப்பு முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வரை" - நேற்று நடந்தது என்ன?


பிப்ரவரி 14-ம் தேதி, நேற்றைய நாள் தமிழக அரசியலின் மாற்றத்தை நிர்ணயித்த நாள். இந்தியாவே எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்த வழக்கிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். 21 வருடங்கள் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. தீர்ப்புக்கு முன்னர், கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியலில் ஆளும் கட்சியானது ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என இருவேறு அணிகளாக பிரிந்து செயல்பட துவங்கின. முதலமைச்சர் பதவிக்காக பிரிந்து சென்ற இரு அணிகளும் அவர்களது எம்.எல் ஏ.க்களை தமது பக்கம் இழுக்கும் முயற்சிகளை மேற்கொள்வதில் மும்முரமாக இறங்கின. இதில் சசிகலா அணி ஒரு படி மேலே சென்று ஒரு ரிசார்ட்டையே வாடகைக்கு எடுத்து ஆதரவு எம்.எல்.ஏக்களை தங்க வைத்து 'சிறப்பாக' கவனித்துக் கொண்டது. மறுபுறம் ஓ.பி.எஸ் அணியோ தன் பக்கம் வரும் எம்.எல்.ஏ.க்களை எல்லாம்  வரவேற்று தனது அணியினை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. அதற்கிடையே நேற்று வெளியான தீர்ப்பு அரசியலில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தீர்ப்பிற்குப் பின்னர் என்ன நடந்தது என்பதை விரிவாக காண்போம்.
 
காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வந்தது:
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு தகர்ந்தது. 6 வருடங்கள் மூவரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனையடுத்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து சசிகலாவும் ஆலோசனை நடத்தினார். ஒ.பன்னீர்செல்வமும் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் ஆங்காங்கே சசிகலா எதிர்ப்பாளர்கள் தீர்ப்பினை கண்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

மதியம் 12 மணி:
   தீர்ப்பு வெளியான சிலமணிநேரங்களில் அரசியல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. எதிர்கட்சி முதல் இடதுசாரிகள் வரை அவரவர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

மதியம் 2 மணி:
   சசிகலா கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏக்களுடன் கலந்தாலோசித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மதியம் 3 மணி:
      ஓ.பி.எஸ்-க்கு ஆதரவளித்த அனைவரையும் கட்சியிலிருந்து நீக்கினார் சசிகலா. ஆனால் சட்டபடி நீக்கும் உரிமை சசிகலாவிற்கு இல்லை என ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்தார். 

மாலை 4 மணி : 
   ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள், மாஃபா பாண்டியராஜான் உள்ளிட்ட பலரும் கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ-க்களை சந்திக்க சென்றனர். அவர்களை காவல்துறை வழியிலேயே தடுத்து நிறுத்தியது. 

மாலை 5 மணி : 
கூவத்தூரில் பதற்றம் நிலவியதால் 144 தடை உத்தரவு போடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கஜலெட்சுமி இந்த உத்தரவை பிறப்பித்தார். அதுவரை அமைதியாக வெளியில் இருந்த காவல்துறை விடுதிக்குள் நுழைந்தனர். எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளைத் தவிர தொடர்பில்லாத நபர்களை வெளியேற்றினார்கள்.

மாலை 5.30 : 
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வேலுமணி, 'திண்டுக்கல்' சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ மற்றும் அவைத்தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் அடங்கிய அமைச்சர் குழு ஆளுநரை சந்தித்தது. 

இரவு 8 மணி : 
கூவத்தூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசினார் சசிகலா. "எனக்கு வந்துள்ளது தற்காலிக பிரச்னைதான். அதை என்னால் சமாளிக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நமக்கு உள்ளது. எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்." என்றவர், சென்டிமென்ட் காரணமோ என்னமோ இன்று நாள் முழுவதும் பச்சை கலர் புடவையை அணிந்திருந்தார்.

இரவு 9 மணி : 
மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவு இடத்திற்கு வந்தார், ஒ.பன்னீர்செல்வம். எதிர்பாராத டிவிஸ்டாக ஜெயலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அங்கு வந்தார். நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்ற போவதாக தெரிவித்தார் தீபா. "இன்று முதல் எனது அரசியல் பிரவேசம் தொடங்கியதுரெனவும் தெரிவித்தார்.  இதே சமயத்தில் கூவத்தூரில் இருந்து சுமார் 9.30 மணி வாக்கில் போயஸ்கார்டனை நோக்கிப் புறப்பட்டார் சசிகலா.

இரவு 10 மணி : 
போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தவரை பூ தூவி வரவேற்றார்கள் இவரது ஆதரவாளர்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியவர் "என் இதயத்தில் இருந்து அ.தி.மு.கவை பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் கட்சிப் பணிகளையும், உங்களையும்  பற்றி கேட்பேன்.  நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். பேரறிஞர் அண்ணா போல எதையும் தாங்கும் இதயம் வேண்டும். அந்த இதயம் எனக்கு இருக்கிறது." என்றார்.

இதையொட்டி பல அரசியல்வாதிகளும், முக்கிய அரசியல் பிரமுகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்தவாறு இருக்கிறார்கள்.
தற்போதைய தகவல்படி, இன்று (பிப்ரவரி 15-ம் தேதி) காலை 9 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து விசாரணை மன்றத்திற்கோ அதன் பின்னர் 'பரப்பன அக்ரஹாரா சிறை'க்கோ செல்லலாம். 

ஆக, கட்சி சசிகலாவின் கைப்பொம்மையாக எடப்பாடி தலைமையிலும், தீபா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரும் ஒன்று சேரும் அணியாக ஒரு தலைமையிலும் இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையானது இப்போது இரண்டாம் முறையாக ஆட்டம் கண்டு பரிதாபமாக நிற்கிறது. இதற்கு முன்னர் ஜெயா, ஜானகி அணி என பிரிந்து கட்சி சின்னம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

-நா.சிபிச்சக்கரவர்த்தி, துரை.நாகராஜன். 


டிரெண்டிங் @ விகடன்