வெளியிடப்பட்ட நேரம்: 06:04 (16/02/2017)

கடைசி தொடர்பு:10:41 (16/02/2017)

வேறு இரண்டு பெண் கைதிகளுடன் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என பிப்ரவரி காலை 14-ம் தேதி 10.32 மணிக்கு உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது. இத்தீர்ப்பினை தொடர்ந்து சசிகலா தனது ஆதரவாளர்களுடன் கூவத்தூர் விடுதியில் ஆலோசனை நடத்தினார். அதன்படி எடப்பாடி' பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி எடப்பாடி பழனிச்சாமியும் நேற்று பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு ஆளுநரைச் சந்தித்தார். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் சசிகலா சென்னை, போயஸ்கார்டனை வந்தடைந்தார். அதன்பின்னர் இரவில் நடந்த ஆலோசனையில் டி.டி.வி. தினகரனுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுப்பதென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி காலையில் 9.35 மணிக்கு டிடி.வி தினகரன் அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என அறிவிப்பு வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் மற்றும் எம்.ஜி.ஆர் இல்லம் எனப் பயணம் செய்யும் சசிகலா இறுதியாக பெங்களூருக்கு காரில் செல்வதாக முடிவெடுத்து காரில் செல்கிறார். சிறை செல்லும் முன்னர் 'சில மணிநேரங்கள் வெளி உலகைப் பார்ப்போமே' என்ற காரணத்துக்காக கார் பயணத்தைத் தேர்வு செய்திருக்கலாம். சரியாக மாலை ஐந்தரை மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் சசிகலாவும், இளவரசியும் சரணடைகிறார்கள். இதன் தொடர்ச்சியாக நடந்தவை இங்கே...

சசிகலா, "உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால் எனக்கு இரண்டு வாரம் கால அவகாசம் தேவைப்படுகிறது. தனக்கு நீரிழிவு நோய் இருக்கும் காரணத்தால் தனி மருத்துவரை அமர்த்திக்கொள்ள அனுமதி தர வேண்டும். எனக்கும் இளவரசிக்கும் ஒரே அறை ஒதுக்க வேண்டும். எங்களுக்கு ஒதுக்கப்படும் அறையானது முதல் வகுப்பாக ஒதுக்க வேண்டும்" எனத் தனது சார்பில் கோரிக்கைகளை முன்வைக்கிறார். இதுபோக நீரிழிவு நோய் இருக்கும் காரணத்தால் வீட்டு உணவு வேண்டும், தனிகட்டில், டி.வி, மினரல் வாட்டர் ஆகியவையும் கேட்டுள்ளார். 

அதற்குப் பதிலளித்த நீதிபதி, "கால அவகாசம் வழங்க முடியாது. ஒரே அறையில் தங்க அனுமதி கிடையாது. இருவரும் தனித்தனி அறையில்தான் தங்க வேண்டும். சசிகலாவுடன் வேறு இரண்டு பெண்கைதிகளும் தங்குவர். சசிகலா இங்கு தினமும் பணி செய்ய வேண்டும். ஒரு கைதிக்கு ஒருநாளுக்கு 50 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். வாரம் ஒருநாள் விடுமுறையும் அளிக்கப்படும். தனி மருத்துவரை அனுமதிக்க முடியாது. அதே போல முதல் வகுப்பு வசதியும் கொடுக்க முடியாது. முதல் வகுப்பு பற்றி நீங்கள் சிறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் கொண்டு வந்த துணிகள் உள்ளே அனுமதிக்கப்படாது. மாறாக இங்கு உங்களுக்கு மூன்று சேலைகள் வழங்கப்படும். அதனைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டார். அதன்படியே இருவருக்கும் தலா மூன்று சேலைகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து நீதிபதி உறவினர்களிடம் பேசிக்கொள்ள அனுமதி வழங்கினார். சசிகலாவின் கணவர் நடராஜன், உறவினர்களான டாக்டர் வெங்கடேஷ், விவேக், இளவரசியின் மகள் மற்றும் தம்பிதுரை ஆகியோர் அங்குக் குழுமியிருந்தனர். அங்கு வந்த சசிகலா, நடராஜனின் கைகளைப் பிடித்துக் கொள்ள இருவரும் கண்ணீர் விட்டனர். அதனைப் பார்த்த மற்றவர்களும் அழத்தொடங்கினர். அதன்பிறகு சசிகலா அவர்களுக்குத் தைரியம் சொல்லி பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு சிறைக்குச் சென்றார்.  

அ.தி.மு.கஎம்.எல்.ஏ-களை தன் 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்த சசிகலா, தான் விரும்புவதை எப்போதும் மாற்றிக்கொள்ளும் மனநிலை மாறாத சசிகலா, மன்னார்குடி வகையறாக்களின் முதல் அடையாளம் 3295 என்ற அடையாள எண்ணுடன் புதிய அடையாளத்தையும் சுமந்து குற்றவாளியாகச் சிறைக்குள் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தில் சரணடைய சுதாகரன் தரப்பில் உடல் நிலை சரியில்லாததால் சரணடையக் கால அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிபதிகள் நிராகரித்ததைத் தொடர்ந்து அடுத்த அரை மணிநேரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் சுதாகரன் சரணடைந்தார். அதன் பின்னர் சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார். நீதி நின்று கொல்லும் என்பது எவ்வளவு நிஜம்?

-துரை.நாகராஜன்.


டிரெண்டிங் @ விகடன்