ஸ்டாலினோட சிரிப்புக்கு அப்புறமா இவ்ளோ நடந்துபோச்சு மக்களே! | These are the aftereffects of stalin's smile

வெளியிடப்பட்ட நேரம்: 17:29 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:30 (17/02/2017)

ஸ்டாலினோட சிரிப்புக்கு அப்புறமா இவ்ளோ நடந்துபோச்சு மக்களே!

`துன்பம் வரும்போது சிரிங்க'ன்னு சொல்வாங்க, ஆனா அ.தி.மு.க. கட்சில மட்டும் சிரிப்புனாலதான் துன்பமே ஆரம்பிக்குது. அ.தி.மு.க-வுக்கும் சிரிப்புக்கும் அப்படி என்னதான் முன் ஜென்மப் பகைன்னு தெரியலை, எப்போதும் சிரிப்பாலேயே அவங்க கட்சியில் நிறைய பிரச்னை வருது. அதெல்லாம் இருக்கட்டும் ஸ்டாலின் கொஞ்சநாள் முன்னாடி பன்னீர்செல்வத்தைப் பார்த்து சிரிச்சதா சசிகலா சொல்லி இருந்தாங்க. பன்னீர்செல்வத்தைப் பார்த்து ஸ்டாலின் கொடுத்த அந்தச் சின்ன ஸ்மைலி என்னலாம் செஞ்சிருக்குனு யோசிச்சுப் பார்த்தோம்.

சசிகலா

* ஸ்டாலின், பன்னீர்செல்வத்தைப் பார்த்து சிரிச்ச கொஞ்சநாள்லயே அவர் ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் பண்ணார். காலம்காலமா அமைதியா இருக்கிறதையே உலக வழக்கமா வெச்சிருந்த பன்னீர்செல்வம் திடீர்னு `புதிய பன்னீர்செல்வமா` மாறினத்துக்கும் முக்கிய காரணம் ஸ்டாலினோட அந்தச் சிரிப்புதான் பாஸ். #பவர்_ஃபுல்_சிரிப்பு

* அதுவரைக்கும் சசிகலாவை சின்னம்மான்னு மரியாதையா கூப்பிட்டுக்கிட்டு இருந்த பன்னீர் செல்வம் அந்த தியான நிலைக்கு அப்புறம் சசிகலாவை சசிகலான்னு பெயர் சொல்லியே கூப்பிட ஆரம்பிச்சுட்டார். அ.தி.மு.க-வில் எல்லாரும் சின்னம்மான்னு பய பக்தியா கூப்பிட்டுக்கிட்டு இருந்தப்ப இவர்தான் முதல்முதலா அவரை சசிகலான்னு கூப்பிட்டார். இப்போ நிறைய பேர் அப்படிக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. இதுக்கும் ஸ்டாலின் சிரிப்புதான் காரணம். #டிரான்ஸ்ஃபர்மேஷன்_சிரிப்பு

* அதுக்கு அப்பறம் நடந்ததுதான் மிக முக்கிய ட்ரெண்ட். அமைச்சர்கள் எல்லாருக்கும் கோல்டன் பே ரெசார்ட்ல ரூம் எடுத்துக் கொடுத்து ஒரு வாரமா பேச்சுவார்த்தை நடத்துக்கிட்டு இருந்தாங்க. தமிழ்நாட்டுல இருக்கிறவங்களுக்கே அதுக்கு முன்னாடி கூவத்தூர்னு ஓர் ஊர் இருக்கிறது தெரியாது. ஆனா ஸ்டாலின், பன்னீர் செல்வத்தைப் பார்த்து சிரிச்சதாலதான் கூவத்தூர் அதுக்கு அப்பறம் ஆல் இந்தியா லெவல்ல ட்ரெண்ட் ஆனது. இப்போ கூவத்தூர் தமிழக அரசியலின் ஓர் அடையாளம். #ட்ரெண்டிங்_சிரிப்பு

ஓ.பன்னீர்செல்வம்

* எம்.ஜி.ஆர் ஆரம்பிச்ச அ.தி.மு.க கடந்த ஒரு வாரம் சந்திச்சதை விட அதிகமா வேற எப்பவும் பிரச்னையை சந்திச்சு இருக்காது. கட்சியில் இருந்த முக்கியத் தலைவர்களை சசிகலா நீக்க, சசிகலா மதுசூதனனை நீக்க, சசிகலாவை மதுசூதனன் நீக்க, மாஃபா பாண்டியராஜன் ஓ.பி.எஸ் டீமுக்கு மாறன்னு கட்சில ஒரே வாரத்தில் மாத்தி மாத்தி ஓடிப்புடிச்சு விளையாண்டு இருக்காங்க. இது எல்லாம் நடந்ததுக்கு ஒரே காரணம்... வேற என்ன நம்ம ஸ்டாலின் சிரிப்புதான். #நீக்கி_நீக்கி_விளையாடுற_சிரிப்பு

* அதுவரைக்கும் பேசவே தெரியாம இருந்த சசிகலா தினமும் நாலு பிரஸ் மீட் வெச்சு ஏதாவது புதுசு புதுசா பேசிக்கிட்டே இருந்ததுக்கும் அதுதான் காரணம். முக்கியமா அவங்க அவங்களையே `சிங்கம்'னு சொல்லிக்கிட்டதுக்கும், `ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்'னு சொல்லிக்கிட்டதுக்கும்கூட அதுதான் காரணம்.

* அ.தி.மு.க. கட்சி பழைய மாதிரி ஒற்றுமையா இருந்து, சசிகலாவுக்கு எதிரா தீர்ப்பு வந்து இருந்தா கண்டிப்பா ஓ.பி.எஸ்-தான் முதல்வரா தொடர்ந்து இருப்பார். ஆனா அவர்தான் ஸ்டாலினைப் பார்த்து சிரிச்சிட்டாரே இப்போ ஓ.பி. எஸ்கிட்ட இருந்த முதல்வர் பதவி கை மாறி கை மாறி எங்கேயோ இருந்த எடப்பாடி பழனிசாமி கைக்கு போயிட்டு. எல்லாத்துக்கும் ஸ்டாலின் சிரிப்புதான் காரணம். #பட்டர்ஃபளை_எஃபெக்ட்_சிரிப்பு

* அதுவரைக்கும் தன்னோட கோபத்தை எல்லாம் கட்சிக்காரங்கிட்ட மட்டுமே காட்டிக்கிட்டு இருந்த சசிகலா ஜெயிலுக்குப் போறதுக்குக் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி ஜெயலலிதா சமாதியில் கோபமா அடிச்சு எல்லோருக்கும் முன்னாடி அவங்க உணர்ச்சியை வெளிப்படுத்துனாங்க. சசிகலா சபதம் எடுத்ததுக்கும், அது பெரிய மீம் டெம்ப்ளேட் ஆனதுக்கும் காரணம் எல்லாம் ஸ்டாலினோட சிரிப்புதான். #மீம்_சிரிப்பு

ஸ்டாலின்

* இவ்வளவு நாள் கட்சியில் இல்லாம இப்போ திடீர் ஜாக்பாட் அடிச்ச மாதிரி நேரா கட்சியோட துணைப் பொதுச்செயலாளரா தினகரன் மாறினத்துக்கும் அதே ஸ்டாலினோட சிரிப்புதான் காரணம். அவரைக் கட்சியைவிட்டு மதுசூதனன் நீக்கினதா அறிவிச்சதுக்கும் அதுதான் காரணம். இனி தமிழ்நாட்டு அரசியல்ல நடக்கப்போற எல்லாத் திருப்பத்துக்கும் ஸ்டாலினோட அந்த சிங்கிள் ஸ்மைலிதான் காரணம்.

ஆகவே, மக்களே இதெல்லாம் இன்னொரு தடவை நடக்கக் கூடாதுன்னுதான் `முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்னைப்பார்த்து சிரிக்கக் கூடாது'ன்னு ஸ்டாலின் இப்பவே அறிக்கை விட்டிருக்கார். மொத்தத்தில் சிரிப்பது அரசியலுக்கும் மக்களின் தூக்கத்திற்கும் கேடு விளைவிக்கும். கும்மோ கும்! 

- லோ.சியாம் சுந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்