அன்று எம்.ஜி.ஆர் செய்ததும்... இன்று பன்னீர்செல்வம் செய்வதும்... அடுத்தது என்ன? | What are the similarities between MGR and Panneerselvam?

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (17/02/2017)

கடைசி தொடர்பு:19:31 (17/02/2017)

அன்று எம்.ஜி.ஆர் செய்ததும்... இன்று பன்னீர்செல்வம் செய்வதும்... அடுத்தது என்ன?

எம்.ஜி.ஆர்

ர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால், தர்மம் மறுபடியும் வெல்லும். எது தர்மம் என்றே தெரியாமல் பிளவு பட்டிருக்கும் அ.தி.மு.கவின் முகாம்களில் இதைச் செல்லியே கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டை பரபரப்பாக வைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த பழமொழி அ.தி.மு.கவுக்கு புதிதல்ல. அரசியல் டிரெண்டில் இந்த பழமொழியைச் சொல்லி முதல் பரபரப்பைக் கிளப்பியவர் எம்.ஜி.ஆர். கட்சியில் அதிகரித்திருக்கும் ஊழல் மற்றும் சில காரணங்களுக்காக எம்.ஜி.ஆர்க்கும் தி.மு.கவுக்கும் உண்டான பந்தத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆர் தனது எதிர்வினைகளை கட்சிக்குள் காட்டாமல் பொது வெளிக்கு எடுத்துச் சென்றார்.


சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் போது மெரினாவில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம் “அம்மாவின் ஆன்மாவினுடைய உந்துதலால் உண்மையை பேசுகிறேன்” என்றார். இதையேதான் அன்று எம்.ஜி.ஆரும் செய்தார். 8 அக்டோபர் 1972-ம் ஆண்டு ராயப்பேட்டையில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆரின் பேச்சு தி.மு.கவுக்குள் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது. பேச்சை இப்படித்தான் தொடங்கினார் “ அண்ணாவின் சிலைய திறந்து வைத்துவிட்டு (திருகழுக்குன்றத்தில்) வருகிறேன். ஆக, அண்ணாவை சந்தித்து விட்டு வருகிறேன். அண்ணாவின் அனுமதியோடு பேசுகிறேன்” என்றார்.  

எம்.ஜி.ஆர்

 

பேச்சில் மறைமுகமாக கருணாநிதியையும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் விமர்சித்து பேசினார். கட்சியில் ஊழல் நடந்திருப்பதாகவும், சைக்கிளில் சென்றவர்கள் இன்று காரில் செல்வதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். கட்சிக்குள் இதற்கு ஆதரவு கிடைக்காவிட்டால், இதை மக்களிடம் எடுத்துச் செல்வேன் என மிரட்டல் தொனியில் இருந்தது அவரது பேச்சு. பின்னாளில் “அண்ணாதான் எனக்குள் நுழைந்து அப்படி பேசினார்” என்றார் எம்.ஜி.ஆர். தலைவர்களின் ஆன்மாவின் பலத்தை இருவரும் அறிந்து வைத்திருக்கின்றனர். இன்று பன்னீர்செல்வம் மக்களின் ஆதரவோடு போராடுவேன் என்று சொன்னது அன்று எம்.ஜி.ஆர் பேசியதன் நகல்.


கட்சி கட்டுப்பாட்டுக்கும், ஒழுக்கத்துக்கும் களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்ட பன்னீர்செல்வத்தை நீக்குவதாக அறிவித்தார் பொதுச் செயலாளர் சசிகலா. ஆனால் சசிகலாவை தான் நீக்கிவிட்டதாக அறிவிக்கிறார் மதுசூதனன். இதில் யார், யாரை நீக்கினார்கள் என்று அ.தி.மு.கவினருக்கே குழப்ப நிலை. இதே நடவடிக்கை தான் அன்று எம்.ஜி.ஆர் மீது பாய்ந்தது. கட்சிக்கு எதிராக பொது இடங்களில் பேசியதற்கு எம்.ஜி.ஆர் இடம் விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆரின் பதில், அறிக்கை மூலம் வெளிவந்தது. “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால், தர்மம் மறுபடியும் வெல்லும். நான் நிச்சயம் வெல்வேன்” என்ற வாசகங்களைக் கொண்டிருந்தது அந்த அறிக்கை. இப்போது நடப்பது போலவே இருக்கிறதல்லவா!

கட்சியின் கண்டிப்புக்கு வளைந்து கொடுக்காததால் எம்.ஜி.ஆரை நீக்குவது என்று தி.மு.க செயற்குழுவில் முடிவெடுக்கப்படுகிறது. ஆனால், கட்சி ஜனநாயகத்தை பின்பற்றாமல், ஒரே அறிக்கையில் பொருளாளர் பன்னீர்செல்வத்தை நீக்கியது போல், அன்றைய தி.மு.க பொருளாளர் எம்.ஜி.ஆருக்கு நடக்கவில்லை. செயற்குழு மற்றும் பொதுக் குழுவை கூட்டி, எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்குவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக பெரும்பாலான வாக்குகள் விழ, தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் எம்.ஜி.ஆர்.

இதுவரை எம்.ஜி.ஆர் மற்றும் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.

அடுத்ததாக, கட்சியில் இருந்து நீக்கப்பட பிறகு 17 அக்டோபர் 1972-ம் ஆண்டு அ.தி.மு.கவை தொடங்கினார் எம்.ஜி.ஆர். ஆனால், பன்னீர்செல்வம் இன்னும் கட்சிக்குள் ஆதரவு சேர்ப்பதை செய்து வருகிறார். பன்னீர்செல்வத்தை போலவே தொடக்கத்தில் எம்.ஜி.ஆர்க்கும் 6 முதல் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.  ஆனால், மக்கள் ஆதரவும், 20 ஆயிரம் ரசிகர் மன்றங்களும் எம்.ஜி.ஆர்-ஐ ஒரு பலம் வாய்ந்த தலைவராக முன்னிறுத்தியது. தனித்து நின்றாலும் மிகுந்த பலத்தோடு நின்றார் அவர்.

ஆனால், பன்னீர்செல்வத்துக்கு அப்படிப்பட்ட பலம் இல்லை. கட்சிக்குள்ளும் ஏகோபித்த ஆதரவு இல்லை. அவருக்கு இருந்த ஒரே பலம் முதலமைச்சர் பதவி. ராஜினாமா கையெழுத்து போட்ட பிறகு களத்தில் குதித்தது, அவருக்குஇருந்த பலத்தையும் குறைத்தது. சசிகலாவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பே, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக மக்கள் நிற்கின்றார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மை நிலை வேறு. 40 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் இருந்தவர், எந்த ஒரு அரசியில் அனுபவமும் இல்லாத தீபாவின் பின்னால் நிற்பது, அவரை குறைத்து மதிப்பிடத் தூண்டுகிறது.

 

panneer selvam, பன்னீர்செல்வம்


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்கச் சொல்லிவிட்டார் ஆளுநர். 1972-ம் ஆண்டு பெரும்பான்மையோடு ஆட்சி நடத்தி வந்த தி.மு.கவுக்கு எதிராக, எம்.ஜி.ஆர் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தார். ஆனால் அதில் தி.மு.க தன் பலத்தை நிரூபித்தது. எம்.ஜி.ஆர்க்கு இது, தி.மு.கவு மீதான எதிர்ப்பின் வெளிப்பாடு. இதனால் அவருக்கோ, அ.தி.மு.கவுக்கோ எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், நாளை நடக்கப்போகும், வாக்கெடுப்பில் பழினிசாமி தலைமையிலான ஆட்சி வெற்றி அடைந்தால், என்ன செய்வார் பன்னீர். ஒருவேளை புதுக்கட்சி தொடங்குவாரா? அதற்கு ஆதரவு எப்படி திரட்டப்போகிறார், எதிர்ப்புகளை எப்படிரெதிர்கொள்ளப் போகிறார் போன்ற பல கேள்விகளை அவர் சந்திக்க நேரிடும்.

ஒருவேளை பழனிசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் என்ன செய்வார் பன்னீர்செல்வம். ஆட்சி அமைக்க கோருவாரா? ஒருவேளை கோரினால், தன் பெரும்பான்மையை நிரூபிக்க எங்கே போவார்?. ஜெயலலிதாவுக்கு பிறகு, தன்னை ஒரு சக்தி வாய்ந்த தலைவராக பன்னீர் செல்வம் எப்படி அடையாளப்படுதிக் கொள்ளப் போகிறார்? இன்னும் அவர் தெளிவுபடுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளம்.

எம்.ஜி.ஆர்-ஐ முழுவதுமாக பின்பற்றியது ஜெயலலிதா கூட அல்ல. உண்மையில் பன்னீர்செல்வம் தான். சூழல் அப்படி இருந்துவிட்டதால் பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆரின் நடவடிக்கைகளை பின்பற்றும்படி ஆகிவிட்டது. ஆனால் முடிவில் எம்.ஜி.ஆர் பெருந்தலைவராக உருவெடுத்தார். அவர் வழியை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றிய பன்னீர் செல்வம் என்ன ஆகப் போகிறார். என்ன செய்யப் போகிறார்?

பிரேக்கிங் நியூஸுக்காக காத்திருக்கிறோம்.


ரெ.சு.வெங்கடேஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்