“அவரை என்னாத்துக்கு முதல்வர் ஆக்கினாங்க!?” - எடப்பாடி மக்கள் இப்படிச் சொல்றாங்களே! #VikatanExclusive | ‘why he elected as CM?’ Edappadi People about Chief Minister Palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 08:38 (18/02/2017)

கடைசி தொடர்பு:10:02 (20/02/2017)

“அவரை என்னாத்துக்கு முதல்வர் ஆக்கினாங்க!?” - எடப்பாடி மக்கள் இப்படிச் சொல்றாங்களே! #VikatanExclusive

ஓவர்நைட்டில் ஒபாமா ஆவதற்கு இணையாக ஒரே மாலைப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டது, எடப்பாடி பழனிசாமியின் பதவிப் பிரமாணம். ‘பொறந்தா எடப்பாடியா பொறக்கணும்டா’ என்று ஆதங்கத்தில், பொறாமையில், ஏக்கத்தில் பொங்கி வழிகிறார்கள் அ.தி.மு.க வைச் சேர்ந்த பலர். ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, சசிகலா, ஓ.பி.எஸ் வரிசையில், இப்போது அனைத்துத் தொலைக்காட்சிகளின் பிரேக்கிங் நியூஸிலும் எடப்பாடி பழனிசாமி வந்து போகிறார். மீம்ஸ் கிரியேட்டர்கள் பரபரப்பாகி இருக்கின்றனர். சமூக வலைதளங்கள் பிஸியாகி விட்டன.

எடப்பாடி பழனிசாமி‘‘எடப்பாடி பழனிசாமி ஆகிய நான்...’’ என்று ஆளுநர் முன்பு 'பிராணாயாமம்' செய்ததுபோல் அவர் பதவிப் பிரமாணம் எடுத்ததற்குப் பின்பு, நிறைய தில்லாலங்கடி வேலைகள் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் பயங்கர விசுவாசியாக இருந்துவந்த எடப்பாடி பழனிசாமி, ஜெ.வின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் விசுவாசியாக விஸ்வரூபம் எடுத்தார். ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, தனக்கு ஒதுக்கப்பட்ட நெடுஞ்சாலை மற்றும் துறைமுகங்கள் துறையைக் கவனித்தாரோ இல்லையோ, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஸின் நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து வந்தார் பழனிசாமி. ‘‘ஓபிஎஸ் நடவடிக்கை சரியில்லைங்கம்மா...’’ என்று முதன் முதலில் சின்னம்மாவிடம் சொல்லி பேர் வாங்கியது, சாட்சாத் நடப்பு முதல்வரேதானாம். 

‘பொறந்த ஊருக்குப் பெருமை தேடு’ என்று சொன்னதுபோல், எடப்பாடியை உலகப் புகழுக்குக் கொண்டு சென்றுவிட்டதில் பழனிசாமியின் பங்கு ரொம்ப முக்கியமானது. ஆனால், ஊர்க்காரர்கள் மத்தியில் பழனிசாமியின் பெருமை எப்படி இருக்கிறது? 

‘‘உங்க ஊர்க்காரர் முதல்வரா ஆயிட்டாரு... சி.எம் எப்படிங்க? உங்களுக்குச் சந்தோஷம்தானே?’’ என்று எடப்பாடியில் ஒரு ரவுண்டு வந்தபோது, வெரைட்டியாக வரிந்துகட்டிக் கொண்டு வந்தார்கள் மக்கள்.

 

‘‘சத்தியமா எங்களுக்குச் சந்தோஷமே இல்லைங்க; அவரை என்னாத்துக்கு சி.எம்-மா ஆக்குனாங்க? இதுவரைக்கும் சொன்னதுல ஒண்ணுகூட செஞ்சது இல்லை.’’ என்றார் டீக்கடையில் சாயா குடித்துக் கொண்டிருந்த கைலி ஆசாமி ஒருவர்.

‘‘கட்சிக்காரங்க வேணா சந்தோஷமா வேட்டு வெடிச்சுக் கொண்டாடிட்டு இருக்கலாம். ஆனா, எங்களுக்குத் திருப்தியில்லைங்க.“ ‘என்று பிரேம்ஜி ஸ்டைலில் கையை விரித்துக் காட்டினார் டீன்-ஏஜைத் தாண்டிவிட்டிருந்த ஃப்ரெஞ்சு தாடிக்காரர் ஒருவர்.

விவசாயிகளின் முக்கிய எனிமியாக இருக்கிறார் பழனிசாமி என்கின்றனர். ‘‘கொங்கணாபுரத்தில் அரசு நூற்பாலை கொண்டு வருவேன்; ஓட்டுப் போடுங்கனு கேட்டாரு. நாங்க ஓட்டுப் போட்டுட்டோம்; எம்எல்ஏ-வைத் தாண்டி சிஎம்-மாகவே ஆயிட்டாரு. நாங்க மட்டும் அப்படியேதான் இருக்கோம். பருத்தியை இப்போ தனியார் நூற்பாலைக்குத்தான் அடிமாட்டு விலைக்கு வித்துக்கிட்டிருக்கோம். பேசாமப் போயிருங்க!’’ என்று விரட்டியடித்தார் ஒரு பெருசு.

எடப்பாடி பழனிசாமி ஊர்

“திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் தெரியுமில்லீங்க... அதோட பிராஞ்ச் மல்லசமுத்திரம், எலச்சி பாளையம், கொங்கணாபுரம் மூணு இடத்துல இருக்குதுங்க.. பருத்தி, நெல், கடலைக்காய் இதெல்லாம் ஏலம் விடுறதுல 50% கொங்கணாபுரம்ங்க... இதைப் பிரிச்சு, கொங்கணாபுரத்தைத் தலைமையகமா வெச்சு ஒரு மார்க்கெட் சொஸைட்டி ஆரம்பிச்சுத் தர்றேன்னு சொன்னாருங்க.. ஏலம் எடுக்கிற விவசாயிங்க சொஸைட்டிக்குப் பணம் கொடுத்துட்டு எடுத்துட்டுப் போவாங்க... இப்போ அந்த மார்க்கெட்டிங் சொஸைட்டி அப்படியேதானுங்க இருக்கு.. அதுக்குள்ள சி.எம் ஆகி என்னாத்த சாதிக்கப் போறார்னு தெரியலீங்க!’’ என்கிறார் வேறு ஒரு விவசாயி.

இது தவிர, எடப்பாடி நகரத்தைச் சுற்றி ஒரு சுற்றுச்சாலை அமைத்துத் தருவதாகச் சொன்னவர், அந்தத் திட்டத்தைக் கைவிட்டு புறவழிச் சாலை ஆரம்பித்ததையும் சுட்டிக் காட்டுகிறார்கள்.  

‘‘பெர்சனலா உங்க சி.எம் எப்படி?’’ என்றபோது, அதற்கும் நெகட்டிவ் மற்றும் காமெடி ஸ்மைலிகளும் கமென்ட்களுமே பதிலாகக் கிடைத்தன.

‘‘விஷம் வெச்சுக் கொல்றவங்களைப் பார்த்திருப்பீங்க... நம்மாளு வெல்லம் வெச்சே கொன்னு போடுவாருங்க.. இனிக்க இனிக்க முன்னால பேசி... பின்னால உங்களுக்குப் பெரிய ஆப்பா சொருகிருவாருங்க..’’ என்றார் இன்னொரு ஸ்பைக் தலை ஆசாமி. அதாவது, ஆரம்பத்தில் பழனிசாமி, வெல்ல வியாபாரம் செய்து வந்ததை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி வீடு

பெண்களின் ரியாக்ஷனும் கடுமையாகவே இருக்கிறது.

பழனிசாமிக்கு, அம்மா என்றால் உயிர். 'அதுதான் தெரியுமே' என்கிறீர்களா? இது, தன்னைப் பெற்றெடுத்த அம்மா தவுசாயம்மாள். கிட்டத்தட்ட 90-களை நெருங்க இருக்கும் தவுசாயம்மாளுக்கு, சென்னைக்கு வந்து தன் மகன் முதலமைச்சர் பதவியேற்பதைப் பார்க்க ஆசையாம். ஆனால் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவரை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டாராம் பழனிசாமி. இது தவிர, கண் சிகிச்சை முடிந்து மூன்று மாதங்களாக ரெஸ்ட்டில் இருக்கிறார் தவுசாயம்மாள். மகன் பதவிப் பிரமாணம் எடுத்ததைத் தொலைக்காட்சியில் தெளிவாகப் பார்க்க முடியவில்லை என்றாலும், கேட்டுணர்ந்து சந்தோஷப்பட்டாராம் அவர். 

கிட்டத்தட்ட 3.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்தச் சட்டமன்றத் தொகுதியில், 10 சதவிகிதம் மட்டும் உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்களும் பழனிசாமியின் ஆதரவாளர்கள் அல்லது கட்சிக்காரர்கள். ‘‘அவரு பிரதமரே ஆனாலும் எங்க தொகுதிக்கு எதுவும் நல்லது நடக்கப் போறதில்லீங்... இது மட்டும் உறுதி..’’ என்று ‘கிளம்பு காத்து வரட்டும்’ என்கிற தொனியிலேயே அனைவரும் பேசுகின்றனர்.

ஒன் மேன் ஆர்மியாக எம்ஜிஆரால் ஆரம்பிக்கப்பட்ட அ.தி.மு.க., இப்போது ஓபிஎஸ் அ.தி.மு.க., சசிகலா அ.தி.மு.க.வாக இரண்டாகிக் கிடக்கிறது. நாளைக்கு யார் அ.தி.மு.க.வோ? காங்கிரஸ்போல் இன்னும் பல அ.தி.மு.க-க்கள் உருவாகாமல் இருந்தால் சரி!

- தமிழ் 

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்