‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே உங்கள் ‘சின்னம்மா’ சபதத்தை நிறைவேற்றவா வாக்களித்தோம்?!’ தமிழச்சிகளின் கடிதம் #VikatanExclusive | A letter to 122 MLAs who voted in Tamilnadu Assembly by the order of Sasikala's family!

வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (19/02/2017)

கடைசி தொடர்பு:10:04 (21/02/2017)

‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே உங்கள் ‘சின்னம்மா’ சபதத்தை நிறைவேற்றவா வாக்களித்தோம்?!’ தமிழச்சிகளின் கடிதம் #VikatanExclusive

சட்டசபையில் எம்.எல்.ஏக்கள்

'ஷேம்ஃபுல்' - நேற்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஒளிபரப்பியபோது, தேசிய சேனல்கள் பல தமிழ்நாட்டைக் குறிப்பிட்டுப் பேசிய வார்த்தை இது. இந்த வார்த்தையை எதற்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தமிழ்மக்களும் வாங்கிக்கொள்ள வேண்டும்? அதை நாங்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்குக் கொண்டுசேர்க்க விரும்புகிறோம். 'சட்டமன்றத்தில் நடந்த சம்பவங்களுக்கு 'சின்னம்மா' குடும்பத்தின் முதல்வர் நாற்காலித் திட்டம் முதல் தி.மு.க-வின்  அவை நடவடிக்கைகள் வரை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, 122 பேரை விரல் சுட்டுவது ஏன்..?' என்று கேட்கலாம். ஏனெனில், எங்கள் ஓட்டுக்குப் பதில் சொல்ல வேண்டியவர்கள் அவர்களே. பொருளை ஒப்படைத்தவர்களிடம்தான் அதன் சேதாரத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். 

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அணி 122 வாக்குகளும், ஓ.பன்னீர்செல்வம் அணி 11 வாக்குகளும் பெற, முதல்வர் பழனிச்சாமி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மன்னார்குடி குடும்பத்துக்கு இந்த வெற்றியைப் பெற்றுத் தர நீங்கள் விலையாகக் கொடுத்திருப்பது, தமிழர்களின் ஓட்டு. சசிகலா தரப்பின் காய் நகர்த்தல்களைப் பற்றிப் பேசி ஓய்ந்தாகிவிட்டது. இது, எங்கள் ஓட்டுகளை 'விசுவாசமாக' மாற்றியுள்ள உங்களுடன், உங்கள் சுயமரியாதையுடன், மனசாட்சியுடன் பேச வேண்டிய தருணம். 

2016 சட்டமன்றத் தேர்தலில் 134 சட்டமன்றத் தொகுதிகளில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார்கள் மக்கள். ஒன்றே முக்கால் கோடி  மக்களின் தேர்வு அது. அவரது மறைவுக்குப் பின் சசிகலாவின் தலைமையை ஓட்டளித்த மக்கள் விரும்பவில்லை என்பதும், அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு அதில் பெரும்பான்மையினர் வந்தனர் என்பதும் கடந்த இரண்டு மாதங்களில் தமிழகம் பார்த்து வரும் காட்சிகளில் கண்கூடு. ஆனால், பதவி ஆசையில் உக்கிரமான சசிகலா தரப்பினர், கிட்டத்தட்ட 2 கோடி மக்களின் ஓட்டுகளை, ரிசார்ட்டுக்குள் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளக் காரணமாக இருந்தது எது என்பதை தமிழகம் அறியும். 'அது' மக்களிடம் இருந்தே எடுக்கப்பட்டது; 'விட்டதைப் பிடிச்சிடலாம்' என்று அதே மக்கள் மீது நம்பிக்கைவைத்துதான் இப்போதும் ஆட்டத்தில் இறக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின் 95% மக்களின் மனநிலைக்கு எதிராக நேற்று சட்டசபையில் வாக்களித்த 122 'மக்களின் பிரதிநிதி'களை, ஒரு குடும்பத்தின் பேராசையை தமிழகத்தின் அரசியல் அவலமாக, தமிழக அரசாகவே  ஈடேற்றிக் கொடுத்துள்ள எம்.எல்.ஏ-க்களான உங்களை, நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் உரிமை, உங்களுக்கு வாக்களித்த 17,617,060  மக்களுக்கும் உள்ளது. மற்ற கட்சிகளுக்கு வாக்களித்த 25,291,161 மக்களுக்கும்கூட உள்ளது. ஏனென்றால், இது அவர்களின் தமிழ்நாடும்தான். இதற்கு முன் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புகள் நடந்தபோதும் இதுபோன்ற காட்சிகள் நடந்திருக்கின்றனதான். ஆனால், இப்போதுபோல ஒட்டுமொத்த மக்களின் மனநிலையும் 'இவர் வேண்டாம், இவர்கள் வேண்டாம்' என்று ஒரே புள்ளியில் திரண்டதில்லை. அப்படித் திரண்ட வெறுப்பை நன்கு உணர்ந்தும், அதைப் புறக்கணித்து 'விசுவாசம்' காட்ட, 'இவர்களால் என்ன செய்துவிட முடியும்?' என்ற உங்களின் அதிகார அலட்சியம்தானே காரணம்? 

சசிகலா சபதம்

'சின்னம்மா'வின் ஆணைக்கிணங்கிய சட்டமன்ற உறுப்பினர்களே... கடந்த ஒரு வாரமாக, 'கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்' என்று, ஏதோ உங்களுக்கு அநியாயம் நடப்பதுபோல தமிழகமே பதற்றமாக இருந்தது. ஆனால், சொகுசு அறைகளிலும், நீச்சல் குளத்திலும் 'விசுவாசத்துக்கான கைமாறு' கணக்குகளைப் பற்றிப் பேசிக்கிடந்த  உங்களை, தமிழகத்தின் அரசியல் சூழலை மாற்றவந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்த்து, ரிசார்ட் கேட்டையே கவனித்துக்கொண்டிருந்த அப்பாவிக் கூட்டம் நாங்கள். மக்கள் நம்பி ஓட்டளித்த உங்களிடம் ஒரு ஹீரோயிக் மொமென்ட் எதிர்பார்த்து மீடியாவும் காத்திருந்தது. ஆனால், 'இந்த முறையும் எங்களை நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க' என்று நேற்று சட்டசபையில் சரியாக  நிரூபித்துவிட்டீர்கள். 

தமிழ்நாட்டின் 122 சட்டமன்றத் தொகுதிகளும் உங்கள் முன் தலைமுறையினர் வாங்கிவைத்த சொத்தா, நீங்கள் உங்கள் சின்னம்மாவுக்கு தாரை வார்ப்பதற்கு? 'ஏதோ புதுசா செஞ்ச மாதிரி கொதிக்கிறீங்க..? எல்லா அரசியல்வாதிகளுமே இப்படித்தான்' என்பதை இங்கு ஏற்க முடியாது. மக்களின் ஓட்டின் மூலம் அடைந்த அதிகாரத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளை காலம் காலமாக பார்த்துவருகிறோம்தான். ஆனால், மக்களின் ஓட்டையே பண்டமாற்றுப் பொருள் ஆக்கியிருக்கும் உங்கள் துரோகம், ஜனநாயகத்துக்கு மிக ஆபத்தானது. ரிமோட் தாவலில் சேனல் செய்திகளைக் கொரித்து, கிழிந்துபோன ஸ்டாலினின் சட்டையில் தொங்கவிடப்படும் மீன்ஸ்களில் சிரித்து, என இம்முறையும் தமிழக அரசியலைப் பார்வையாளர்களாக நாங்கள் கடந்துவிட்டால், இந்திய அரசாங்கம் குடிமக்களுக்குக் கொடுத்துள்ள முதல் மரியாதையான ஓட்டுரிமையின் கூர்மை இன்னும் மழுங்கிவிடும். விரைவில் உங்களை நெருங்குவோம். அப்போது உங்கள் துரோகத்துக்கு எதிரான எங்களின் கேள்விகளுக்கு உங்களால் தன்மானத்துடன், மனசாட்சியுடன் பதில் தர முடியுமா?  


சின்னம்மா


'சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்றிவிட்டோம்' என்று விசுவாசத்துடன் பேட்டி கொடுத்த, இதற்கு முன் நாங்கள் பெயர், முகம் கூட அறிந்திடாத தமிழகத்தின் புதிய முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி எம்.எல்.ஏ அவர்களே... 'எங்கள் சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டும், அதற்காக வாக்களியுங்கள்' என்று சொல்லியா எங்களிடம் சென்ற வருடம் ஓட்டுக்கேட்டு வந்தீர்கள்? யாருடைய ஓட்டை வைத்து யாரின் சபதத்தை நிறைவேற்றுகிறீர்கள்? 'மக்களின் தேவைகளை நிறைவேற்றிவிட்டோம்' என்று சொல்லும்படி உங்கள் தொகுதியில் ஏதாவது இதுவரை செய்திருக்கிறீர்களா?  என்பதை, உங்கள் தொகுதி மக்கள் 'விளக்கமாகவே' சொல்லிவருகிறார்கள். இப்போது உங்கள் கைகளில் தமிழகம். நீங்கள் மன்னார்குடி கைகளில். சரி... உங்களின் 'சின்னம்மா', ஓட்டுப் போட்ட எங்களுக்கு யார்? இது, மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்த குடியாட்சியா? 


எடப்பாடி பழனிச்சாமி


'மக்களின் மனநிலையாவது, தமிழ்நாட்டின் அரசு நிர்வாகமாவது... எங்களுக்கென்ன?' என்று காதடைத்து, வாய்மூடி, 122 பேரும் ஒற்றுமையாக, ஒருமித்த மனநிலையுடன், உங்கள் சின்னம்மாவின் சபதத்தை நிறைவேற்றிவிட்டீர்கள். சொல்லப்போனால், நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் எதிர்காலத்திலும் உங்களுக்கு அக்கறையில்லை. அதில் காட்சிகள் விரைவில் மாறும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 'அப்போ பார்த்துக்கலாம்' என்ற பச்சோந்திப் போர்வை உங்கள் அரசியல் அலமாரியில் பத்திரமாக இருக்கும். இப்படி வாக்களித்த மக்களுக்கு, சார்ந்த கட்சிக்கு என்று எதற்குமே உண்மையாக, நேர்மையாக இல்லாத உங்களின் அடையாளம்தான் என்ன? இப்போது அப்பட்டமாகியிருக்கும் இந்த அடையாளத்துடன் எப்படி நீங்கள் நாளை மக்களைச் சந்திப்பீர்கள்? சுயமரியாதை என்பது, நீங்கள் உங்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அதை இனி உங்களால் உங்களுக்குக் கொடுக்க முடியுமா? 

தமிழ்நாட்டு மக்கள் மொத்தமாக எதிர்க்கும் ஒரு குடும்பத்தின் கைப்பாவையாக மாறிவிட்ட நீங்கள், நாளை எந்த முகத்துடன் உங்கள் தொகுதி மக்களைச் சந்திப்பீர்கள்? ஓட்டளித்த ஒன்றே முக்கால் கோடி தமிழர்களின்  சாட்டையடிக் கேள்விகள், தன்மானம், மனசாட்சி இருப்பவர்களைத் துரத்திக்கொண்டேதான் இருக்கும். இருப்பவர்களைத்தானே? அதனால் அது உங்களுக்குப் பொருட்டாக இல்லாமல் இருக்கலாம்.


சட்டசபை

ஆனால், உங்கள் சின்னம்மாவின் சபதங்களை நிறைவேற்ற அடுத்த முறை எங்களிடம் ஓட்டுக் கேட்டு வரும் உங்களிடம் கேட்க, கேள்விகளுடன் காத்திருக்கிறோம்.
 

- இப்படிக்கு, 
தேர்தலில் தவறாமல் ஓட்டுப்போடும் தமிழச்சிகள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்