Published:Updated:

பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்...  -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்...  -கார்டனைப்  பதறவைத்த எடப்பாடி பழனிசாமி
பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்...  -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

பன்னீர்செல்வத்தின் பதவியைப் பறித்தால்...  -கார்டனைப் பதறவைத்த எடப்பாடி பழனிசாமி

படம்: ஆ.முத்துக்குமார்

'அறப்போருக்குத் தமிழக மக்களும் தொண்டர்களும் அமோக ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். எம்.ஜி.ஆரின் புகழை நிலைநிறுத்தவும் அம்மாவின் ஆட்சியை நிலைநாட்டவும் நாம் மேற்கொண்டுள்ள தர்மயுத்தம் தொடரும்' - சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தைகள் இவை. 'அ.தி.மு.க-வின் சட்டமன்றக் கொறடாவின் உத்தரவுக்கு மாறாக வாக்களித்ததால், அவர் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 ஓட்டுக்களைப் பெற்று முதல்வர் பதவியைத் தக்க வைத்துக்கொண்டார், எடப்பாடி பழனிசாமி. நம்பிக்கை வாக்கெடுப்பு ரகசியமாக நடத்தப்படாததை எதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது தி.மு.க. ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து, சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை விளக்கினார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். புதிய அரசு தன்னுடைய பணிகளைத் தொடக்கினாலும், தி.மு.க தரப்பில் கொந்தளிப்பு அடங்கவில்லை. ஆளுநரும் மும்பைக்குப் பயணமாகிவிட்டார். "அரசியல் களத்தில் கடந்த இரண்டு வாரங்களாக லைம் லைட்டில் இடம் பெற்ற பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் பங்களாவில் தற்போது எந்தக் கூட்டமும் இல்லை. ஆவடி தொகுதிக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனுக்கு தொகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 'முதல்வர் பதவியை இழந்த பன்னீர்செல்வத்துக்கு, எம்.எல்.ஏ பதவியாவது மிஞ்சுமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " சட்டசபையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவருக்கும் கொறடா ராஜேந்திரன் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். 'நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்' என்றார். 

படம்: ஆ.முத்துக்குமார்

கொறடா உத்தரவுக்கு எதிராகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும் வாக்களித்தனர், பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள். வாக்கெடுப்பைப் புறக்கணித்துவிட்டு, சபாநாயகர் மீது பாய்ந்தனர் தி.மு.க உறுப்பினர்கள். தி.மு.க உறுப்பினர்கள் சீறிப் பாய்ந்தபோதும், பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவர்கள் மௌனம் காத்தனர். கொறடா உத்தரவை மீறியதால், பன்னீர்செல்வம் உள்பட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார், வாக்கெடுப்பைப் புறக்கணித்துவிட்டு கோவை சென்றுவிட்டார். பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாஃபா.பாண்டியராஜன், செம்மலை, நட்ராஜ், வி.சி.ஆறுக்குட்டி, சரவணன், மனோகரன், மாணிக்கம், எஸ்.பி.சண்முகநாதன், சின்னராஜ், மனோரஞ்சிதம் உள்ளிட்டவர்களின் பதவி பறிக்கப்படுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. இதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் வேகப்படுத்த இருக்கிறார். சசிகலாவுக்கு எதிராக, கடந்த இரண்டு வாரங்களாக பன்னீர்செல்வம் நடத்திய ஆட்டத்தை, அவர்கள் எளிதில் மறந்துவிடவில்லை. 'நாம் யார் என்பதை அவருக்குக் காட்ட வேண்டும்' என ஆலோசித்துவருகின்றனர்" என்றார் விரிவாக. 

"அ.தி.முக. சட்டமன்றக் கொறடா ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்த அதேநேரத்தில், பன்னீர்செல்வம் அணி சார்பாக கொறடாவாக நியமிக்கப்பட்டார் செம்மலை. அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அவர் உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் பார்த்தால் பன்னீர்செல்வத்தின் பதவி தப்புவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கின்றனர். ஆனால், தற்போதுள்ள அரசியல் சூழலில் பன்னீர்செல்வம் உள்பட 11 பேரின் பதவி பறிக்கப்படுவதை அ.தி.மு.க நிர்வாகிகள் விரும்பவில்லை. இதைப் பற்றி கார்டன் வட்டாரத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது. 'பன்னீர்செல்வம் உள்பட 11 பேரையும் பதவியில் இருந்து நீக்கிவிட்டால், விரைவில் இடைத் தேர்தல் வரும். மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது. தேர்தலை எதிர்கொண்டால், விளைவுகள் எப்படி இருக்கும் என சொல்லித் தெரியவேண்டியதில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அமைதியாக இருப்பதே எதிர்காலத்துக்கு நல்லது' என விவரித்துள்ளனர். கார்டன் நிர்வாகத்தில் உள்ளவர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக்கொண்டனர். சென்னை, புழல் சிறைக்கு சசிகலாவை மாற்றம் செய்யும் வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்" என்கிறார், தலைமைக்கழக நிர்வாகி ஒருவர். 

'சட்டசபையில், நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஒருமுறைதான் முன்மொழிய வேண்டும். இரண்டு முறை முன்மொழிந்ததால், எடப்பாடி பழனிசாமி தேர்வுபெற்றது செல்லாது' என அதிர வைத்திருக்கிறார் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. தி.மு.க-வும் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளது. 'புதிய அரசு இதை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது?' என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர், தமிழக மக்கள். 

- ஆ.விஜயானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு