Published:Updated:

'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு!' - TPL ஏல கும்மாங்குத்து

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு!' - TPL ஏல கும்மாங்குத்து
'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு!' - TPL ஏல கும்மாங்குத்து

'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு!' - TPL ஏல கும்மாங்குத்து

.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு நடைபெறும் ஏலம் போல தமிழக அரசியல்வாதிகளையும் வைத்து டி.பி.எல் (TPL) ஏலம் நடத்தப் படுகிறது. ஏலத்தொகையாகத் தொகுதிகளை நிர்ணயித்தால், அவர்களை எந்தெந்தக் கட்சிகள் ஏலத்தில் எடுக்கும் என எக்குத்தப்பாக யோசித்துப் பார்த்தோம். கொஞ்சம் இல்லை ரொம்பவே ரணகளமாத்தான் இருக்கு... 

ஏல விதிமுறைகள் : (1) சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள் ஏலத்தில் கலந்துகொள்ளும் தகுதியை இழக்கிறார்கள். 
(2) அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் அவர்களின் விருப்பத்தின் பேரில் ஏலத்தில் கலந்துகொள்ளலாம். 
(3) ஏலத்தொகைக்குப் பதில் தொகுதியை வைத்து மட்டுமே கேட்க வேண்டும். (டிஜிட்டல் இந்தியா)

பெரிய தலைகள் அரங்கில்கூட, தமிழ்நாடு பொலிடிகல் லீக் (TPL) ஏலம் தொடங்குகிறது. ஏலத்தில் விடப்படுபவர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். முதல் வரிசையிலிருந்து ஏலம் தொடங்குகிறது. நாஞ்சில் சம்பத், சீமான், தா.பாண்டியன் என அரசியல் கட்டதுரைகள் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள். 

" சசிகலா முதல்வராகக் கட்சி ஆதரவு இருக்கும்போது மக்கள் ஆதரவு எதுக்கு? " எனக் கருத்தாழமிக்கக் கேள்வியை மக்களின் மூக்கைக் குறிவைத்துக் கேட்ட நாஞ்சிலார்தான் முதல் ரவுண்டு ஏலத்திற்கு வருகிறார். சொல்வித்தைப் புரியும் சொல்லின் செல்வரைச் சொந்தக்கட்சிக்காரர்கள் விட்டுக்கொடுக்க மனமில்லாமல் ஏலத்தில் கேட்கிறார்கள். ' எந்த ஊர் ஆளா இருந்தாலும் எங்க கட்சிக்கு வந்து சென்னையில் நின்னாக்கூட ஜெயிக்கலாம். கோகுல இந்திராவே ஜெயிச்சு அமைச்சரான அண்ணாநகர் தொகுதிக்கு அண்ணன்தான் வேணும்' என அடம்பிடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். நாசா 'ம்ம்ஹூம்... இல்லப்பே அது முடியாதுப்பே..' எனத் தலையை ரெண்டுபக்கமும் ஆட்ட, தி.மு.க-வினர் திகுதிகுவெனக் குதிக்கிறார்கள் ஏலத்தில்... 

அண்ணன் பிறந்த நாஞ்சில் மண்ணையே வரும் தேர்தலில் அன்பளிப்பாக அவருக்குத் தருகிறோம் எனக் கேட்க, யோசிக்கிறார் சம்பத். 'அப்படியே ட்ராவல் பேட்டாவோட ஒரு இன்னோவா..' என மறுபடியும் கண்ணைக் காட்ட, 'சரிடே... அப்படியே ஒரு அஞ்சு உளுந்தவடை கட்டிக்கொண்டாந்துடுடே தம்பி...' என்றபடி அதே இடத்திலேயே அணி தாவுகிறார் நாஞ்சிலார். 

அடுத்த ஆள் சீமானை அவையில் இறக்க, கொதிக்கும் ரத்தத்தை உறையவைத்துக்கொண்டு வழக்கத்தை மீறி அமைதியாக அமர்ந்திருக்கிறார். அ.தி.மு.க அவருக்கு ஏற்கெனவே நின்ற கடலூர் தொகுதியைத் தருவதாகச் சொல்ல, 'ஏன்ணே... அங்க வாங்கினது பத்தாதா..?' எனப் பாவமாகப் பார்க்கிறார். தி.மு.க உள்ளே குதித்து, தனி ஈழம் வேண்டிப் போராடும் தம்பிக்கு ராமேஸ்வரம் தொகுதியைக் கொடுப்போம். அப்படியே அவர் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரத்தைத் தலைநகராக்கி பாம்பன் வரைக்கும் கோட்டைப் போட்டு பார்டரைத் தனி நாடாக்குவோம். தமிழனை ஆட்சியமைக்க வைப்போம்' என அவர் போக்கிலேயே போய்ச் சூளுரைக்க, 'ஐ இந்த டீலிங் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...' என ஒத்துக் கொள்கிறார். 

இரண்டாவது வரிசையில் ஓரமாக ஒளிந்திருக்கும் சிவப்புத்துண்டைக் கூப்பிட்டு முன்னால் அமரவைக்கிறார்கள். ஏலம் தொடங்குகிறது. 'தோழருக்கு மாநகரத்தில் ஒரு சீட்டு நிச்சயம்; மேற்கொண்டு அவர் கேட்பதைத் தருவது லட்சியம்' எனச் சொல்லி இந்த முறை தி.மு.க-வே ஆட்டத்தை அரம்பிக்க, மண்டையைச் சொறிகிறார் தோழர். 

அ.தி.மு.க ஆட்கள் குறுக்கே புகுந்து,  'கொள்கைமாறாத் தலைவனுக்குக் கோட்டைக்குப் போகும் ஆசையெல்லாம் இருக்காது. ஆளும்வரை அம்மா; அதற்குப் பின்னே சின்னம்மா..!' என்றழைக்க குதூகலமாக டெம்போவில் ஏறிக் குத்தவைக்கிறார் தா.பா.

ஞான சங்கரும் ரெண்டாவது வரிசையில் ஏலம்போகக் காத்திருக்கிறார். 'அநீதிகளை வெளக்குமாறைப் போட்டுக் கூட்டிப் பெருக்குவோம்' எனக் கொந்தளித்தவரைக் கூட்டிவந்து 'ஜாடிக்குத் தகுந்த மூடி. கழகத்தில் ஒரு கவுன்சிலர் பதவி' எனக் கவுத்து வண்டியில் ஏத்துகிறார்கள் அ.தி.மு.க-வினர்.

காதுக்கு மேலே தலையைச் சுற்றி ருத்ராட்சைக் கொட்டை சுற்றி ஒருவர் ஏலத்திற்கு வருகிறார். அறிமுகம் தேவைப்படாத அவரை 'முந்தாநாள் கனவுல சிவன் வந்து உங்களை திருவண்ணாமலை தொகுதியில் நிற்கச் சொன்னார்...' எனச் சொல்லிவிட்டு ஈஸ்வரா என மேலே பார்க்க, 'எம்பெருமான் வாக்கு... அப்படிப் போட்டுத் தாக்கு..!' எனத் தாளம்போட்டுக் கொண்டே அண்ணா நாமம் போட்ட வண்டியில் ஓடிவந்து தொற்றிக் கொள்கிறார் ஆதீனம். 

மூணாவது வரிசையில் அமர்ந்திருக்கிறார் கருப்புத் தங்கம் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால். 'நானும் மதுரைக்காரன்தாண்டா..!னு தொண்டை கிழியக் கத்தினவருக்கு, 'மதுரை மத்தி பார்சல்' என எடுத்த எடுப்பிலேயே ஒரு உடன்பிறப்பு கூடையைப் போட்டு மூட, பம்மியபடி அப்படியே திருட்டு வி.சி.டி ஒழிப்புத்துறையையும்... என இழுக்க, 'இந்தா வெச்சுக்க...' என அக்ரிமென்ட்டில் கையெழுத்து வாங்கி உள்ளே இழுத்துப் போடுகிறது தி.மு.க படை.  

'மணி இப்பவே ஆறாச்சு... என்னையும் கேளுங்கய்யா யாராச்சும்...' எனப் பின் வரிசையிலிருந்து ஒரு கொடூரமான குரல் ஒலிக்க, மிச்சம் இருப்பவர்களை அப்படியே விட்டுவிட்டு TPL ஏலக் கம்பெனிக்காரர்களும், கரைவேட்டிக்காரர்களும் தெறித்து ஓடுகிறார்கள். 

- விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு