அப்ரிடி, ஆளுநர், இளங்கோவன்..! - உங்களுக்கும் இஸ்க் இஸ்க்குனுதான் கேட்குதா மக்களே..? | A satirical article about current tamilnadu politics

வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (21/02/2017)

கடைசி தொடர்பு:15:20 (21/02/2017)

அப்ரிடி, ஆளுநர், இளங்கோவன்..! - உங்களுக்கும் இஸ்க் இஸ்க்குனுதான் கேட்குதா மக்களே..?

கண்ணுல பார்க்குற செய்திகளைலாம் கபாலத்துல ஏத்தும்போது இந்தமாதிரியெல்லாம் மண்டைக்குள்ள மணி அடிக்குது மக்களே உங்களுக்கும் இதேமாதிரிதான் அடிக்குதா....

செய்தி

'சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து  ஓய்வு'னு அறிவிச்சிருக்கார், பாகிஸ்தான் வீரர் அப்ரிடி. நம்ம ஊர் ஏர்போர்ட்ல இதுவரை விழுந்த கூரைகளின் எண்ணிக்கைகளைவிட, கடைசி ரெண்டு வாரத்துல நாம பார்த்த பிரேக்கிங் நியூஸ்களின் எண்ணிக்கைகளைவிட, ஓய்வுனு அறிவிச்சுட்டு ஹாயாக திரும்பவந்து கிரிக்கெட் விளையாடுற பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்னு நினைக்கிறேன்.  #யய்யாடி யய்யா... எத்தன தடவ எத்தன பேரு...?

திரும்ப வந்து தேர்தல் ஆணையம் மே15 -ந்தேதிக்குள்ள உள்ளாட்சித்தேர்தலை நடத்தி முடிக்கணும்னு அறிவிப்பு விட்டிருக்காங்க. இதை நடத்தி முடிக்கவேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. அதுக்கு தயார்படுத்திக்கொடுக்கவேண்டியது தற்போதைய ஆளும்கட்சியான அ.தி.மு.க-வின் வேலை. அ.தி.மு.க-வே முறையான  உட்கட்சித்தேர்தல் வைக்கப்படாம, யாரு எந்த போஸ்டிங்க் ல இருக்காங்கனு தெரியாம இருக்குது. அதைவிடக் கொடுமையா யாருதான் முதலமைச்சர்ங்கிறதும் முதல்வராக இருப்பவர் உட்பட பலபேருக்கு இன்னும் மென்சந்தேகமாகவேதான் இருக்குது. இதையெல்லாம் மொதல்ல நடத்தி முடிச்சு, ஒரு முடிவுக்கு வந்து மூச்சுவிட்டு, அடுத்து அந்த உள்ளாட்சித்தேர்தலை எல்லாம் சொன்ன தேதிக்குள்ள நடத்தி முடிச்சுருவாங்களான்னுதான் சத்தியமா தெரியலை. #சொல்லும்போதே மூச்சுவாங்குது.

முறைப்படி(!) முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட இந்நாள் முதல்வர் பழனிசாமி தனது முதல் கையெழுத்தாக ஏதோ ஐந்து திட்டங்களுக்குப் போட்டிருக்கிறார். அதுக்கு கையெழுத்துப்போட்டமாதிரி அப்படியே இனிமேல் மக்களை பிரேக்கிங் நியூஸ் பீதியில் வைத்திருக்க மாட்டேன், தனியாக ஒரு  தியானத்தைப்போட்டு தனிக்கட்சி தொடங்கமாட்டேன், கூவத்தூர் ரிசார்ட்டை மூடிவிட்டதால் எம்.எல்.ஏக்களைக் கூட்டிக்கொண்டு எடப்பாடி பக்கம்லாம் போகமாட்டேன்னும் கையெழுத்துப் போட்டுக்குடுத்துட்டா ரொம்ப புண்ணியமாப்போகும்.#செய்வீர்களாசெய்வீர்களா..?

செய்தி

சட்டப்பேரவையில என்ன நடந்துச்சு சட்டப்பேரவை நிகழ்வுகளைலாம் எனக்கு அனுப்புங்கனு  உத்தரவு பிறப்பிச்சுருக்கார், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அவருக்கு மட்டுமா இந்தச் சந்தேகம் இருக்குது, மக்களுக்கும் அதே சந்தேகம்தான். பார்லிமென்ட்டில் நடக்கும் விவாதங்களை எல்லாம் பார்க்க சானல்கள் இருப்பதுபோல எல்லோரும் தெரிஞ்சுக்கவேண்டிய சட்டசபை விவாதங்களையும் காட்டுனா என்ன?. மக்களுக்காக நடத்தப்படுகிற ஒண்ணை மக்களிடம் நேரடியா காட்டுறதுல அப்படி என்ன பிரச்னை இந்த அரசுகளுக்குனுதான் தெரியலை. கட்சிக்கு ஒரு சானல் வச்சிருக்கிற நம்ம ஊர்ல சட்டசபைக்கு ஒரு சானல் இல்லைங்கிறதுதான் பிளாக் ஹியூமர்.  சட்டையை வேறு யாரும் கிழிக்கிறாங்களா , இல்லை அவங்களே கிழிச்சிக்கிறாங்களானுலாம் தெரிஞ்சிடும்கிறதாலதான் காட்ட மாட்டேன்றாங்களோ என்னவோ. #யாருக்குத்தெரியும்.

ஒருபக்கம் வெளிநாட்டுல வச்சிருக்கிற வங்கிக் கணக்குகள் பத்தி முறையான தகவல் தரலைனு அங்க சுத்தி இங்க சுத்தி இப்போ காங்கிரஸ்காரரான கார்த்திக் சிதம்பரம் மேல குற்றம் சுமத்திருக்கார் வைப்ரேஷன் மோடிலேயே இருக்கும் பாஜக-வின் சுப்ரமணியன் சுவாமி. அதுதான் அப்படினா இந்தப் பக்கம் காங்கிரஸுக்குள்ளேயே சண்டை முத்தியிருக்கு. ஆமா, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவா செயல்படுறார், அ.தி.மு.க-வுக்கு போகப்போறார்னு திருநாவுக்கரசர் மேல பழி போட்டிருக்கார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அ.தி.மு.க வுல இருக்குறவங்களுக்குள்ளேயே யார் யார் யாருக்கு ஆதரவுனு தெரியாம மண்டையைப்பிச்சிக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல, இவர் பழனிசாமிக்கு ஆதரவா அந்தகட்சிக்கு தாவுவாரா இல்லையான்னு வேற குழப்பத்தோட அலைய வச்சிருக்கார், இளங்கோவன். #மறுபடியும் பிரேக்கிங் நியூஸா...


- ஜெ.வி.பிரவீன்குமார்


டிரெண்டிங் @ விகடன்