வெளியிடப்பட்ட நேரம்: 06:12 (23/02/2017)

கடைசி தொடர்பு:12:03 (23/02/2017)

அ.தி.மு.க அலுவலகத்தில், ஒன்பது அடி ஜெயலலிதா சிலை!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, விரைவில் அ.தி.மு.க-வின் தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட இருக்கிறது. ஜெயலலிதா மரணம் அடைந்து இரண்டு மாதங்களைக் கடந்தநிலையில், அவருடைய பிறந்தநாள்  வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அ.தி.மு.க- வின் சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த தினம் விமரிசையாகக் கொண்டாடப்படும் என அ.தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. 

ஜெயலலிதாவின் பிறந்த தினத்தன்று அவருடைய நினைவிடத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டதால், அவருடைய நினைவிடத்தை அரசு சார்பில் கட்டமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதேபோல ஜெயலலிதாவின் திருவுருவச்சிலையை அ.தி.மு.க-வின் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் வலியுறுத்திவந்தனர். அ.தி.மு,க -வின் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை வைப்பதில் எந்தச் சிக்கலும் வராது என்பதால், அதை முதலில் செய்துவிடலாம் என்று முடிவுசெய்தனர். ஜெயலலிதாவின் ஒன்பது அடி சிலை உருவாக்கப்பட்டு,   இரண்டு தினங்களுக்கு முன் அ.தி.மு.க அலுவலகத்துக்கு வந்துசேர்ந்தது.

பிப்ரவரி 24-ம் தேதி அன்று சிலையை வைக்கலாம் என்று முதலில் ஆலோசிக்கபட்டது.ஆனால் சசிகலா சிறையில் இருப்பதால், அவரிடம் ஆலோசனை நடத்திய பிறகே சிலைத் திறப்பு விழா நடைபெறும் என்றும், சிலைத் திறப்பு விழாவுக்கு சசிகலாவை பரோலில் அழைத்து வந்து, அவர் கையாலேயே சிலையைத் திறக்கத் திட்டமிடுகிறார்கள் அ.தி.மு.கவினர். 

அ.தி.மு.க - வின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள டி.டி.வி தினகரன், அ.தி.மு.க - வின் முக்கிய நிர்வாகிகளுடன் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்த  அலுவலகம் வர உள்ளார் என்று அ.தி.மு.க - வினர் சொல்கிறார்கள். துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வாகி, முதல்முறையாக அ.தி.மு.க அலுவலகத்துக்கு தினகரன் வர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க