தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒரு வார செயல்பாடுகள் எப்படி? #VikatanExclusive | Activities of Edappadi palanisamy in 7 days after becoming CM

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (23/02/2017)

கடைசி தொடர்பு:21:06 (23/02/2017)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஒரு வார செயல்பாடுகள் எப்படி? #VikatanExclusive

             எடப்பாடி பழனிசாமி

ரபரப்பான பல்வேறு திருப்பங்களுக்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் 'குட்' புக்கில் இடம்பிடித்து இருந்த எடப்பாடி கே.பழனிசாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று 7 நாட்கள் ஓடிவிட்டன.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவருக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்றும்,ஆனால் அதனைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளார் என்றும் கூறுகிறார்கள் எடப்பாடி ஆதரவாளர்கள். மேலும் அவர்கள், இப்போதைக்கு கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்துவிடுவோம் என்ற மனநிலையில் எடப்பாடி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.  

கவர்னர் சந்திப்பு,அமைச்சரவை அமைப்பு,நம்பிக்கை வாக்கெடுப்பு என்று பரபரப்பாக இருந்த நிலையைக் கடந்துவிட்டார் முதல்வர் பழனிசாமி.ஆனால் 'விடாது கருப்பு' என்கிற கதையாய் சசிகலா ஆதரவு அ.தி.மு.கவுக்கு எதிராகவும்,முதல்வர் பழனிசாமிக்கு எதிராகவும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தமிழகம் தழுவிய சுற்றுப் பயணத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

அதே நேரத்தில்,பிரதான எதிர்க்கட்சியான திமுக,ஆளுநரிடம் முறையீடு,உண்ணாவிரதம்,நீதிமன்றத்தில் வழக்கு,குடியரசுத் தலைவரிடம் முறையீடு என்று அதிரடியைக் கிளப்பி வருகிறது.இதையெல்லாம் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு முதல்வருக்கான பணியில் படு பிசியாகி இருக்கிறார் எடப்பாடி கே.பழனிசாமி.தினமும் அப்பாயின்மென்ட்,முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுதல்,தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முதன்மை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தல் என்று அவரின் அன்றாட செயல்பாடுகள் அமைந்துள்ளன.இது தொடர்பாக தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

"நண்பகலுக்கு முன்பு தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார் முதல்வர்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமர்ந்து பணியாற்றிய சி.எம். சேம்பர் அறையில் எடப்பாடியும் அமர்ந்து முதல்வருக்கான பணியை மாலை வரை மேற்கொள்கிறார்.அவருக்கு,முந்தைய முதல்வரின் அதே உதவியாளர்கள் அரசு அதிகாரிகள் உதவியாக இருக்கிறார்கள்.இப்போது அரசு ஆலோசகர்,பதவி நீட்டிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் என்று யாரும் இல்லை. இன்னும் சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதல்வரின் செயலாளர்கள் என்று பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதற்கான பட்டியல் தயாராகிக் கொண்டுள்ளது."என்று தெரிவிக்கிறார்கள் பரபரப்பாக.

தமிழகத்தின் 13ம் முதல்வராகக் கடந்த 16ம் தேதி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.தமிழக அரசியலில்,ஜெயலலிதா தலைமை இல்லாத அ.தி.மு.க. அரசு இயங்கத் தொடங்கியுள்ளது.

முதல்வரானபிறகு கடந்த 20ம் தேதி எடப்பாடி பழனிசாமி,அம்மா இருசக்கர வாகனத் திட்டம், மீனவர்களுக்கு தனி வீடு திட்டம்,மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தும் திட்டங்களில் கையெழுத்திட்டார். மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான ஆணையிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.

              எடப்பாடி பழனிசாமி

அதனையடுத்து, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் செயல்முறைப் படுத்துவதற்காக அலுவலர் குழு அமைத்து உத்தரவிட்டார்.இதற்குப் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களும் அவருக்கு நேரில் சந்தித்து நன்றியைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க,முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நிலைமை இப்படி இருக்க,மேற்கண்ட எல்லா திட்டங்களும் உத்தரவும்,மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அறிவிப்புகள் என்ற குரலும் அதிகாரிகள் மட்டத்தில் கேட்கின்றன.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தனது அண்மைக்கால பேச்சில் ஒவ்வொரு முறையும் கூறியது போல ஜெயலலிதாவின் ஆட்சித் தொடருகிறது என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில்,எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஏழுநாளில்,ஜெயலலிதாவின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டும் முதல்வர்,இன்னும் முன்னேறி மக்கள் நல அரசாக,தற்போதைய தமிழக அரசை இயக்குவாரா என்பதைப் பொறுத்துதான் பார்க்கவேண்டும்.

- சி.தேவராஜன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close