வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (25/02/2017)

கடைசி தொடர்பு:17:49 (25/02/2017)

அரசு அதிகாரிகள் நியமனத்தில் தொடரும் குழப்பம்: முதல்வர்-மன்னார்குடி லாபி காரணமா?

                முதல்வர்

மிழக அரசின் செயலாளர்கள் நியமனத்தில் குழப்பம் நீடிப்பதாகவும்,அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் லாபியும்,மன்னார்குடி தரப்பினரின் நேரடி தலையீடும் காரணம் என்று பரபரப்பைக் கிளப்புகிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தினர்.

ஜெயலலிதாவின் மறைவு அ.தி.மு.கவிலும் தமிழக அரசு நிர்வாகத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா ஆதரவு அ.தி.மு.க.,ஓ.பி.எஸ்.ஆதரவு அ.தி.மு.க.,ஜெ.தீபா ஆதரவு அ.தி.மு.க. என்று மூன்றாகப் பிளவுபட்ட நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது. அதன் எதிரொலி நேற்று(வெள்ளி) அ.தி.மு.கவினரால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் நிகழ்ச்சி. சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமைக் கழக அலுவலகம் தொடங்கி தமிழகத்தின் கிராமங்கள் வரை மூன்று அணியாகப் பிரிந்த நிலையில் அ.தி.மு.கவினர்,ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

அதே போல தமிழக அரசு நிர்வாகத்திலும் பல குழப்பங்கள் நீடிக்கிறது.முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு லாபியும்,மன்னார்குடி தரப்பினர் ஒரு லாபியும் அரசு நிர்வாகத்தில் நடத்துவதாகக் கூறப்படுகிறது.இது,தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமன விஷயத்தில் பளிச்சென தெரிகிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

இது குறித்து நம்மிடம் பேசிய தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர், "கடந்த 16ம் தேதி தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்.அதன் பிறகு,அதுவரை இருந்த அரசு மற்றும் அரசியல் குழப்பம் ஓரளவுக்கு நீங்கியது.பின்னர் வேகமெடுத்த தமிழக அரசு இப்போது மீண்டும் தேங்கி நிற்கிறது.அதற்குக் காரணம் சசிகலா உறவினர்கள்.இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புதிய லாபியும் சேர்ந்துகொண்டுள்ளது. இந்தச் சிக்கல்களால் தமிழக அரசின் உயர்கல்வித்துறை,சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முழுநேர செயலாளர்கள் நியமனம் இன்னும் நடக்கவில்லை. இதனால் அந்தத் துறைகள் சார்ந்த பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தத் தாமதம் எதனால் நடக்கிறது என்று துறைகள் சார்ந்த அதிகாரிகள் மட்டத்தில் தினமும் பெரிய விவாதமே நடந்து கொண்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நியமனத்தில்,எம்.நடராஜனின் ஆதரவுக் கரம் இருந்தது என்றும் அதற்கு பா.ஜனதா தலைமையும் சம்மதித்தது என்றும் தகவல்கள் வெளியாயின. நடராஜனும்,தலைமைச் செயலாளரும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரின் குடும்பமும் 1980ம் ஆண்டு முதல் நட்போடு உள்ளவை என்றும் கூறப்பட்டன.

                முதல்வர்

இந்த நிலையில்,எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.அவருக்கு முன்பு ஓ.பி.எஸ். முதல்வராக இருக்கையில் தமிழக அரசு எப்படி இயங்கியதோ அப்படியே தற்போதும் நடக்கும் என்று நடராஜன் எதிர்பார்த்தார்.ஆனால் இப்போது நிலை வேறு மாதிரியாக உள்ளது.முதல்வர் பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட தற்போதைய நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளரை, தலைமைச் செயலாளராகக் கொண்டுவர நினைக்கிறார்.ஆனால் அதற்கு மன்னார்குடி தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் எடப்பாடி தனி செல்வாக்குப் பெற்ற முதல்வராக மாறிவிடக் கூடாது என்று கருதுவதுதான். நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலம் முதல் ஒரே பொறுப்பில் இருந்து வருகிறார்.

அதே போல ஐ.ஏ.எஸ். அதிகாரி நிரஞ்சன் மார்டியை முதல்வர் செயலாளராகக் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். இருவருக்கும் நல்ல அறிமுகமும் நெருக்கமும் உண்டு.ஆனால் இதற்கும் மன்னார்குடி தரப்பு ஓ.கே.சொல்லவில்லையாம். இந்தக் குழப்பமே இப்போது வரை நீடிக்கிறது" என்றனர்.

ஜெயலலிதா மறைவின் போது எந்தமாதிரியான தேக்கம் அரசு நிர்வாகத்தில் நிலவியதோ அதே நிலை தொடருவது எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடுமோ என்ற எண்ணம் அரசின் உயர் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.

- சி.தேவராஜன்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்