Published:Updated:

பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஓவர்டேக் செய்ய மோடி விதித்த நிபந்தனை! #VikatanExclusive

ஆ.விஜயானந்த்
பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஓவர்டேக் செய்ய மோடி விதித்த நிபந்தனை! #VikatanExclusive
பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி ஓவர்டேக் செய்ய மோடி விதித்த நிபந்தனை! #VikatanExclusive

‘தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார்’ என பன்னீர்செல்வம் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. காரணம். டெல்லியின் முழு ஆசிர்வாதம் அவருக்கு இருந்ததுதான். ‘இரண்டு மத்திய அமைச்சர்களைத் தாண்டி விவகாரம் முடிவுக்கு வந்ததற்கு பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

அதிர்ச்சி கொடுத்த அருண் ஜெட்லி! 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. ஆளுநர் அலுவலகத்திற்கு பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதமும் சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவலும் தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் இருந்த ஆளுநர் அலுவலகத்தின் ஃபேக்ஸ் எண்ணுக்குத் தகவல் சென்று சேர்ந்தது. ‘புதிய முதல்வர் பதவியேற்கும் வரையில் நீங்களே தொடருங்கள்’ என உத்தரவிட்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், சசிகலாவை முதல்வர் பதவியில் நியமிப்பது குறித்த எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவருடைய மௌனம் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை உருவாக்கியது. ‘எம்.எல்.ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் அணி திரளும் வரையில் ஆளுநர் எதுவும் சொல்ல மாட்டார்’ என்ற தகவலும் வெளியானது.

நேற்று முன்தினம் இதைப் பற்றி கட்டுரை எழுதிய ஆளுநர் வித்யாசாகர் ராவ், ‘தமிழக அரசியல் சூழ்நிலைகளின்போது, நான் எடுத்த முடிவுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சசிகலாவைப் பொறுத்தவரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. அவரை சட்டமன்றக் கட்சித்தலைவராக அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவில் வழங்க இருப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதுபோன்ற சூழ்நிலையில், சசிகலாவுக்கு முதல்வர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது தொடர்பாக, எந்த முடிவையும் எடுக்கும் முன், உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருப்பது சிறந்தது என எனக்குத் தோன்றியது’ என மனம் திறந்து பேசியிருக்கிறார்.

முதல்வர் பதவிக்கு சசிகலாவை அழைக்காததன் பின்னணியில் பா.ஜ.க கட்சித் தலைவர்கள் தீவிரமாக வேலை பார்த்தனர். டெல்லியில் அருண் ஜெட்லியை நேரடியாக சந்தித்து வலியுறுத்தினார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை. இந்த சந்திப்பில், ‘சசிகலா தலையெடுப்பதற்கு நாம் அனுமதித்துவிடக் கூடாது’ எனக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி விளக்கினார் தமிழிசை. அப்போது ஜெட்லி அலுவலத்திற்குள் நுழைந்தார் தம்பிதுரை. ‘ யாருடைய பிரதிநிதியாக வந்திருக்கிறீர்கள்?’ என அவரைக் கலாய்த்தார் ஜெட்லி. தமிழக அரசியலில் நிலவிய தாமதத்தின் பின்னணியில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடுவும் அருண் ஜெட்லியும் இருந்தார்கள்” என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

24 மணி நேர டெட்லைன்?! 

“தமிழகத்தில் பா.ஜ.கவின் நலனுக்காக சில அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் தமிழக பா.ஜ.கவினர் உறுதியாக இருந்தனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட வெற்றிடமும் அவர் உருவாக்கி வைத்திருந்த வாக்கு சதவீதமும்தான் மிக முக்கிய காரணிகளாக இருந்தன. இந்த வாக்குகளை கணிசமான அளவுக்கு பா.ஜ.க பக்கம் கொண்டு வருவதற்கு சசிகலா எதிர்ப்பை மிக முக்கியக் கருவியாக அவர்கள் பார்த்தனர். ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் கொண்டு வருவதற்காக டெல்லிக்குப் பயணமானார் பன்னீர்செல்வம். அப்போதே அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அவரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.

இந்த சந்திப்பில், ‘வீ ஆர் வித் யூ’ என பன்னீர்செல்வத்திற்கு நம்பிக்கை அளித்தார் பிரதமர் மோடி. அங்கிருந்து வெற்றியோடு சென்னை திரும்பியவரைத் தொடர்பு கொண்ட பா.ஜ.க மத்திய அமைச்சர், ‘ ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைத்துவிட்டது. உங்கள் அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுங்கள்’ எனப் பேச, ‘ என்னை வளர்த்துவிட்டவர்கள் அவர்கள்தான். இப்படியொரு நிலைப்பாட்டை எப்படி எடுப்பது?’ எனத் தயங்க, ‘ அரசியல் என்று வந்துவிட்டால் எதையும் பார்க்கக் கூடாது. நீங்கள் அவர்களை எதிர்த்து நில்லுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நல்ல வாய்ப்பு வந்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என விவரித்திருக்கிறார்.

கூடவே, ‘உங்கள் பின்னால் எவ்வளவு எம்.எல்.ஏக்கள் வருவார்கள்?’ எனக் கேட்க, ‘இப்போது சொன்னாலும் 50 பேர் என் பின்னால் வருவார்கள்’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார். அதன்பிறகும், பன்னீர்செல்வத்திடம் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. பிப்ரவரி 5-ம் தேதி சசிகலாவை சட்டசபைத் தலைவராக தேர்வு செய்த அன்று, ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து போட்டார் பன்னீர்செல்வம். இதனை அறிந்து கொந்தளித்த மத்திய அமைச்சர், ‘ஏன் அவசரப்பட்டு கையெழுத்து போட்டீர்கள்? இப்படிச் செய்வார்கள் எனத் தெரிந்துதான் எதிர்ப்பு நிலையை எடுக்கச் சொன்னோம்’ எனக் கோபத்தைக் காட்ட, ‘நான் என்ன செய்வது? என்னைச் சுற்றி நின்று கொண்டு கையெழுத்து கேட்டனர். என்னால் மறுக்க முடியவில்லை’ என விளக்கினார். ‘அடுத்து, இனி என்ன செய்யப் போகிறீர்கள்?’ எனக் கேட்க, ‘எனக்கு 24 மணிநேரம் அவகாசம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசிவிட்டு முடிவைச் சொல்கிறேன்’ எனத் தெரிவித்தார். 

தி.மு.கவிடம் தூது! 

மத்திய அமைச்சரிடம் உறுதியளித்தபடியே, ஒருநாள் கழித்து பிப்ரவரி 7-ம் தேதி ஜெயலலிதா சமாதி முன்பு அமர்ந்தார் பன்னீர்செல்வம். விவகாரம் வேறு திசையில் செல்வதை அறிந்த சசிகலா தரப்பினர், எம்.எல்.ஏக்களை வரவழைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். ‘ சசிகலாவை எதிர்த்து தங்கள் பக்கம் எம்.எல்.ஏக்கள் வருவார்கள்’ என எதிர்பார்த்திருந்த பன்னீர்செல்வத்திற்கு, சசிகலாவின் பாணி அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனே, மத்திய இணை அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசினார். அவரோ, டெல்லியில் கோலோச்சும் தமிழகத்தை சேர்ந்த ‘ஆச்சர்ய’ பிரமுகரிடம் பேசியிருக்கிறார். அவர், ‘ நீங்கள்தான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நமக்கு இது சரிப்பட்டு வராது’ எனத் தெரிவிக்க, உடனே தி.மு.க தரப்பைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.

இந்தப் பணியில் தி.மு.கவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர். தி.மு.கவிடம் அவர் வைத்த கோரிக்கையே, ‘பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். சபையில் வாக்கெடுப்பு நடந்தாலும் அவர் பக்கம் நீங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் சசிகலாவை எதிர்க்க முடியும்’ எனப் பேசியிருக்கிறார். தி.மு.க தரப்பில் இருந்து எந்த உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. இந்த நேரத்தில், ‘எடப்பாடியாவது முதல்வர் ஆவாரா?’ என சசிகலா பயப்படும் அளவுக்குக் காரியங்கள் வேகமெடுத்தன. ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை உறுதி’ எனத் தெரிந்தவுடன், கூவத்தூரை நோக்கி அதிரடிப்படை விரைந்தது. அங்கிருந்த கூட்டத்தையும் கலைக்க முடியவில்லை. ‘ஆளுநர் வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்’ என தி.க.தலைவர் வீரமணி உள்ளிட்ட சிலர் கொந்தளித்தனர். 11 நாட்களாக நடந்து வந்த அரசியல் காட்சிகள் முடிவுக்கு வரவில்லை. 

நம்பிக்கை கொடுத்த டெல்லி! 

இந்நிலையில், டெல்லிக்குப் பயணமானார் நடராசனின் தம்பி ராமச்சந்திரன். அங்கு சுப்ரமணியன் சுவாமியை சந்தித்துப் பேசினார். தொடக்கத்தில் இருந்தே சசிகலா ஆதரவு மனநிலையில் இருந்தார் சுவாமி. இதனால் எரிச்சலான தமிழக பா.ஜ.க நிர்வாகிகள், ‘ சுவாமி ஏன் தேவையில்லாமல் தலையிடுகிறார்?’ என மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டனர். இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத சுவாமி, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில், ‘நீங்கள் லீகலாக நடந்து கொண்டால், எந்தப் பிரச்னையும் இல்லை. இல்லீகலாக சில விஷயங்களைத் தாமதப்படுத்தினால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும்’ எனக் கூறியிருக்கிறார்.

அதற்கு ஆளுநர், ‘ எனக்கு டெல்லியில் இருந்து கிளியரன்ஸ் வரவில்லை’ எனக் கூறியிருக்கிறார். அதன்பிறகு 15-ம் தேதி இரவு பிரதமரை சந்தித்துப் பேசினார் சுவாமி. ‘ நான் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை. கட்சி தான் ஈடுபட்டு வருகிறது. யார் முதல்வர் ஆனாலும் எனக்குப் பிரச்னையில்லை. அ.தி.மு.கவில் உள்ளவர்கள் நமக்கு லாயலாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். இதன்பின்னர், நடராசன் தம்பியிடம் பேசிய சுவாமி, பிரதமரின் முடிவு குறித்து தெரிவித்துள்ளார். அவரும் சசிகலாவிடம் பேசிவிட்டு, ‘ உங்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுகிறோம்’ என உறுதியளித்தார். இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர், ஆளுநரிடம் பேசியிருக்கிறார். அந்த அதிகாரியிடம் நடராசனின் உறவினர்களும் பேசியுள்ளனர். அன்று இரவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து போன்கால் சென்றது. மறுநாள் காலை மிகுந்த உற்சாகத்தோடு ஆளுநர் அலுவலகத்திற்குப் பயணமானார்” என நடந்த சம்பவங்களை விரிவாக விளக்கினார். 

‘சசிகலாவா? பன்னீர்செல்வமா?’ என நீடித்து வந்த குழப்பத்திற்கு ஆளுநர் மாளிகை தீர்வைச் சொல்லிவிட்டது. நடராசன் மீதான நட்புக்கு விசுவாசத்தைக் காட்டிவிட்டார் சுவாமி. ‘எடப்பாடி பழனிசாமி எவ்வளவு நாள் நீடிப்பார்?’ எனக் கொந்தளித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். டெல்லி நடத்தும் பொம்மலாட்டத்தில் முக்கியக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

-ஆ.விஜயானந்த்
படங்கள்:ஆ.முத்துக்குமார்