வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (03/03/2017)

கடைசி தொடர்பு:16:51 (03/03/2017)

அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே 6 வித்தியாசங்கள்!

தமிழகத்தின் தலையெழுத்தை ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தலைகீழாகத் திருப்பிப்போடும் (!) இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு இடையேயும் எக்கச்சக்க வித்தியாசங்கள் உண்டு. இரண்டு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களுக்குப் போடப்போறது என்னவோ மொட்டைதான். (ஒண்ணே ஒண்ணுன்னாலும் வொர்த்தான ஒற்றுமை..!)

அ.தி.மு.க - தி.மு.க

* அ.தி.மு.க போஸ்டர்களிலும், பேனர்களிலும் அம்மா படத்தைப் பெரிதாகப் போட்டு அண்ணா படத்தையும், எம்.ஜி.ஆர் படத்தையும் ஓரமாய் சின்னதாகப் போட்டு மேட்டரை முடித்துவிடலாம். அதுவே இப்போ லேட்டஸ்ட்டா பழைய பக்திப் படங்களில் வருவதுபோல் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சக்தி கொடுக்கிற மாதிரி போட்டோஷாப் வித்தையை இறக்கி சகலத்தையும் முடிச்சுடலாம். (எம்.ஜி.ஆர் படம் பெரிதாக இருந்தால் தேர்தல் நேரம் என அறிக..)

* தி.மு.க-வைப் பொறுத்தவரை போஸ்டர்கள், பேனர்களில் இடத்தை நிறைக்கும் நிறையத் தலைகள் தென்படும். பெரியார், அண்ணா படங்களைச் சின்னதாகப் போட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களைப் பெரிதாகப் போட்டு, எதுக்கு வம்புனு 'அஞ்சாநெஞ்சன்' படத்தையும் போட்டு, சரி குடியா முழுகிடும்னு உதயநிதி படத்தையும் போட்டு கடையில் ஃபேமிலி குரூப் போட்டோ மாதிரி ஆக்கிடுவாங்க. 

* எம்.ஜி.ஆர் சினிமாவில் பேசின வசனங்களைப் பார்த்தே, 'நீ வா தலைவா..'னு வாளெடுத்துக் கையில் கொடுத்த ரசிகர்களால் கட்சி இன்றுவரை வளர்க்கப்படுகிறது. அவருக்குப் பிறகு அ.தி.மு.க-வில் சர்வமும் 'அம்மா' மயம். 'அம்மா போனா என்னம்மா... அடுத்து இருக்காங்களே எங்க சின்னம்மா...'னு அடுத்துத் தங்களை ஆள்வதற்குத் தலைவியைத் தேர்ந்தெடுத்த தொண்டர்களை உடையது இக்கட்சி. குடும்ப ஆட்சி என எதிர்க்கட்சியைக் குறைசொல்லும் இந்தக் கட்சியே ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பது வேதனையான வரலாறு. 

* தெருக்கூட்டம், பொதுக்கூட்டம் எனப் பேசிப் பேசி மக்களிடையே வளர்ந்த கட்சி இது. படித்தவர்கள், ஓரளவு விபரம் தெரிந்தவர்களால் வளர்க்கப்பட்டது. இப்போது கட்சியால் குடும்பம் வளர, குடும்பத்தால் கட்சி வளர என எல்லாமே ஒரு 'நல்ல' அண்டர்ஸ்டாண்டிங்கின்படி போய்க்கொண்டிருக்கிறது.

* அ.தி.மு.க வில் கட்சியின் கடைசிக் கிளைச்செயலாளர் முதல் நிதி அமைச்சர் வரை அடுத்த அமாவாசையில் யார் எந்தப் பக்கம் தூக்கி அடிக்கப்படுவார்கள் எனத் தெரியாமல் பதவிகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு திரிவார்கள். 

* தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர்கள் மாமாங்கத்துக்கும் மாற்றப்படாமல் சீட்டைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அனைவருக்கும் நினைவிருக்கும்படி ஒவ்வொரு துறைக்கும் அமைச்சராக ஒரு மூத்த தலைக்கட்டை நேர்ந்துவிட்டிருப்பார்கள். 

அ.தி.மு.க - தி.மு.க வித்தியாசம்

* மேதகு 'அம்மா'வின் ஆணைப்படி வெளியிடப்பட்ட அறிக்கைகளைத் தவிர அந்தக் கட்சியில் 'அம்மா' ஆணைக்கிணங்க, அல்லது 'அம்மா' ஆன்மாவின் ஆணைக்கிணங்க மட்டுமே உறுப்பினர்கள் பேச வேண்டும். சுயமாக வேறு ஏதாவது பேசினால் தூக்கி அடிக்கப்படுவார்கள். 

* தி.மு.க-வில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் கட்சித் தலைவர் கருணாநிதி கூறிய கருத்தை மேற்கோள் காட்டி, ஆக தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். (கருணாநிதியின் கருத்தை மேற்கோள் காட்டுவது அத்தியாவசியம்*)

* தலைமை நடந்து வந்தால், குனிந்து காலில் விழுவது, காரில் வந்தால் டயரைத் தொட்டுக் கும்பிடுவது, ஹெலிகாப்டரில் போனால் ஹெலிகாப்டர் அந்தமானுக்குப் போகும் வரை அண்ணாந்தபடியே கும்பிடுவது எனக் கும்பிடும் கலாசாரம் இங்கே பெருகிக் கிடக்கும். 

* தி.மு.க-வில், தலைவர் முன்னிலையில் கட்சியினர் ஜோக் அடித்துத் தொடையில் தட்டிச் சிரித்துக் கொள்ளலாம். தலைவரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு செல்ஃபியும் எடுக்கலாம். 

அங்கங்க கட்சிக்குள்ளேயும், ஆட்சிக்குள்ளேயும் ஆயிரம் பிரச்னைகள் நடந்துக்கிட்டு இருக்கு. ஆறாவது வித்தியாசம் ரொம்ப முக்கியமா? போங்கப்பா..!

- விக்கி 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்