Published:Updated:

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

மீண்டும் மும்பை அதிர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##

ரியாக 31 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் மும்பையில் குண்டு வெடிப்புகள்! 

93-ம் ஆண்டு மும்பையில் குண்டு வெடிப்புக் கலாசாரத்தை துவக்கிவைத்தது, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு. அன்று தொடங்கி, 2008, நவம்பர் தாக்குதல் வரை ஐ.எஸ்.ஐ-யின் அட்டூழியம் நேரடியாகவே இருந்தது. அந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கில், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மீண்டும் குண்டு வெடிப்புகள்!

கடந்த 13-ம் தேதி மாலை 6.50 முதல் 7.04 மணிக்குள் மும்பையின் ஜவேரி பஜார், தாதர், ஓப்ரா ஹவுஸ் ஆகிய முக்கிய இடங்களில் அடையாளம் காண இயலாத வகையிலான டிஃபன் பாக்ஸ், டேப் ரிக்கார்டர் மற்றும் கார்களில் பொருத்தப்பட்டு இருந்த குண்டுகள் வெடித்து, 18 பேர் உயிர் இழந்தார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைய, 23 பேரின் நிலைமை கவலைக்கிடம்.

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

ஜவேரி பஜார், மும்பையின் மிகப் பெரிய தங்க நகைக் கடைகள் இருக்கும் பகுதி. ஓப்ரா ஹவுஸ், இந்தியாவின் மிகப் பெரிய வைர வியாபார ஸ்தலம். தாதர் மார்க்கெட், வீட்டு உபயோகப் பொருட்கள் வியாபாரம் நடக்கும் இடம். இந்த இடங்களில் நாச வேலையை செய்து இருப்பதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் முயன்று இருக்கின்றன. இதற்குக் காரணம் இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே மும்பையை மட்டுமே தீவிரவாதிகள் குறிவைக்கக் காரணம், அதன் பொருளாதாரம். இந்தியாவின் அரசியல் தலைநகரம் டெல்லி என்றால், பொருளாதாரத் தலைநகரம் மும்பை. ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், துறைமுகம், தொழிற்​சாலைகள் எனப் பொருளாதார வளர்ச்சியில், கணிசமான பங்கு மும்பைக்கு உண்டு. இதனால்தான், மும்பையில் க்ரீம் லாலா, ஹாஜி மஸ்தான், வரதராஜ முனுசாமி என்கிற வரதராஜ முதலியார், தாவூத் இப்ராஹிம், டைகர் மேமோன் போன்ற நிழல் உலக தாதாக்கள் உருவானார்கள். தவிர, கராச்சியில் இருந்து கடல் வழியே மும்பை குறுகிய தொலைவுதான். அதனால்தான், அஜ்மல் கசாப் அண்ட் கோ மும்பை கடல் வழியே கரை ஏறியது!

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

முதல் முறையாக ஐ.எஸ்.ஐ. அமைப்பு 93-ம் ஆண்டு மார்ச் 12-ல் மும்பையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நிரூபணமானது. அப்போது, தான் உண்டு... தனது கடத்தல் தொழில் உண்டு என இருந்த தாவூத் இப்ராஹிமை, அவரது கடத்தல் சரக்கு ஒன்றை கராச்சியில் மடக்கிவைத்துக்கொண்டு ஐ.எஸ்.ஐ. அவரிடம் பேரம் பேசியது. அதன்படி, டைகர் மேமோன் மூலம் மும்பையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 275 பேர் இறந்தார்கள்.

அதன் பின்பும் மும்பையை விடவில்லை ஐ.எஸ்.ஐ. கடந்த 13-ம் தேதி தாக்குதலோடு சேர்த்து, இதுவரை மொத்தம் எட்டு தாக்குதல்கள். சுமார் 750 பேர் பலியானார்கள். 2008 நவம்பரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நமக்குக் கிடைத்த ஒரே துருப்புச் சீட்டு... கசாப். மரண தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவனது பிறந்த நாள் அன்று, இந்த தாக்குதல் நடந்து இருப்பது, தீவிரவாத இயக்கம் அவனுக்குக் கொடுத்த பரிசாகவே கருதப்படுகிறது.

அல்கொய்தாவா? ஐ.எஸ்.ஐ-யா?

அமோனியம் நைட்ரேட் மருந்தைக்கொண்டு டிரிக்கரை அழுத்தி அல்லது டைமர் பொருத்திக் குண்டுகளை வெடிக்கச் செய்திருக்கலாம் என்கிறார்கள். இந்த வகை குண்டுகளை கடந்த காலங்களில் அதிக அளவு பயன்படுத்தியது, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு. உத்தரப் பிரதேசத்தைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் சிமி அமைப்புக்கும் இந்த அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலத்தில் சிமி அமைப்பில் இருந்து பின்னர் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு வந்தவன், அப்துல் சுபான் க்யூரேஸி என்கிற தவ்ஹீர். டெல்லி, வாரணாசி, அகமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இவனே, இந்த குண்டு வெடிப்புக்கும் மாஸ்டர் மைண்டாக இருக்கலாம் என்று கருதுகிறது உளவுத் துறை.

பின்லேடன் கொலைக்குப் பின், பாகிஸ்தான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளைத் தாக்குவோம் என்று அல்கொய்தா பகிரங்க மிரட்டல் விடுத்தது. சில மாதங்களிலேயே கராச்சியின் கப்பல் படைத் தளத்தில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது. அதனால், அல்கொய்தாவுக்கும் தற்போதைய தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்திலும் உளவுத் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தத் தாக்குதலை, 'தீவிரவாத அமைப்புகளின் கூட்டு முயற்சி’ என்று சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக பீதியிலேயே கழிகிறது மும்பை மக்களின் வாழ்க்கை. மும்பை காவல் துறை, 'வீட்டுக்குள் இருந்து வெளியே வர வேண்டாம்’ என்று மக்களை எச்சரிக்கிறது.

எத்தனை காலம்தான் வீட்டுக்குள் அடைபட்டுக்​கிடப்பது?

- டி.எல்.சஞ்சீவிகுமார்

படங்கள்: லைவ் போட்டோஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு