'போயஸ் கார்டனைத் தீண்டிய செல்போன் நம்பர்கள் மர்மம் விலக்கும்!' பி.ஹெச் பாண்டியன்


                  செல்போன், பி.ஹெச்.பாண்டியன்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் விலக, போயஸ் கார்டனில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நம்பர்களை ஆய்வுசெய்ய வேண்டும் என்று முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஜெயலலிதாவின் மரணத்தில் மறைந்துள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அப்போது பேசிய பி.ஹெச்.பாண்டியன், "கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடந்த சதித்திட்டமே ஜெயலலிதாவின் மரணம். அதாவது, ஓடுகின்ற ரயில் போல  இந்த சதித்திட்டம் இருந்திருக்கிறது. சில பேர் தாம்பரத்தில் ஏறி, நுங்கம்பாக்கத்தில் இறங்கிவிடுவார்கள். வேறு சிலர் நுங்கம்பாக்கத்தில் ஏறி, கோட்டையில் இறங்கிவிடுவார்கள். இப்படி அந்த சதித்திட்டம் நீண்டுகொண்டேபோகிறது. தமிழக போலீஸாரும் இதுவரை இந்த சதித்திட்டத்தை விசாரிக்கவில்லை. மத்திய அரசும் விசாரிக்கவில்லை. இந்த சதியைச் செய்தது யார் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்.
 

                   செல்போன், ஜெயலலிதா

ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு தடயத்தை விட்டுச்செல்வான். இப்போது, ஜெயலலிதா வசித்த அந்த வீட்டுக்குச் சென்று சோதனை நடத்துவோமேயானால், நானே கண்டுபிடித்துவிடுவேன். குற்றவாளியின் அடையாளத்தை அறிந்துகொள்ள பல இடங்களில் கைரேகைகள் இருக்கும். பல இடங்களில் கால் ரேகைகள் இருக்கும். சில இடங்களில் முடி இருக்கும். சில இடங்களில் துணி இருக்கும். வேறுசில இடங்களில் நகத்தினால் கீறியதற்கான ரத்தக்கறை சுவரில் இருக்கும். அதைப் பார்த்தாலே, அந்த வீட்டில் அம்மாவுடன் இருந்தவர்கள் யார் யார், அவருடன் பழகியவர்கள் யார், யார்? அம்மாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கண்டனத்துக்கு உள்ளானவர்கள் யார் என்பன போன்ற விவரங்களை அறிந்து, அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி, கேள்வி கேட்டிருந்தால், இப்போது 10 குற்றவாளிகள் சிக்கியிருப்பார்கள்.

ஜெயலலிதா இல்லத்தின் உள்ளே செல்போன் டவர் ஒன்று இருக்கும். செப்டம்பர் 15-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை, அந்த டவரில் பதிவான நம்பர்களைச் சோதித்துப் பார்த்தாலே பல உண்மைகள் தெரியவரும். யார் யாரெல்லாம் தொடர்புகொண்டு பேசினார்கள் என்பது போன்ற விவரங்கள் தெரிந்துவிடும். அம்மா வீட்டில் இருந்தவர்களின் 'கால் டீடைல்ஸ்'-ஐ எடுத்துப் பார்த்தால், ஏராளமான உண்மைகள் உலகுக்குத் தெரியவரும். ஜெயலலிதா மரணம் தொடர்பாக கண்டிப்பாக நீதி விசாரணை வரும். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.

சி.எம். ஆக தலையணை போதும்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன்,"கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு, எம். நடராஜன் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் அவர்களிடம், 'அடுத்து நாங்கதான் தமிழ்நாட்டுக்கு முதல்வர்' என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள், "இப்போதான் தேர்தல் முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகி இருக்கிறார். அதோடு, 5 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்துள்ளீர்கள். எப்படி நீங்கள் சி.எம்.ஆக முடியும்?' என்று கேட்டுள்ளனர். அதற்கு நடராஜன், 'நாங்க சி.எம்.ஆக கோடி ரூபாய் வேண்டாம். ஒரு தலையணை போதும்' என்று கூறியிருக்கிறார். அவர் அப்படிக் கூறியதன் அர்த்தம் டிசம்பர் 5-ம் தேதி புரிந்தது" என்று தெரிவித்தார்.

- சி.தேவராஜன் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!