வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (10/03/2017)

கடைசி தொடர்பு:17:19 (10/03/2017)

அ.தி.மு.க-வுக்கு வெந்நீர் ஊற்றும் பன்னீர்... கண்ணீர்விடும் டி.டி.வி.தினகரன்!

தினகரன்

.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் என்ற பதவியை ஏற்றபிறகு, சென்னை மயிலாப்பூரில் முதன்முறையாக மக்கள் வெளியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் டி.டி.வி.தினகரன். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தக் கூட்டத்தில் தினகரன் பேச்சு முழுக்கமுழுக்க பன்னீர்செல்வத்துக்கு எதிராகவே இருந்தது. ''அ.தி.மு.க-வுக்கு வெந்நீர் ஊற்றும் வேலைகளைத் தி.மு.க-வோடு கூட்டுச்சேர்ந்து செய்துவருகிறார்'' என்று உருக்கமாகப் பேசினார், டி.டி.வி.தினகரன்.

நாள்தோறும் சசிகலாவுக்கு எதிராக அக்னிக் கணைகளை வீசிவருகிறது ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கு அதிரடியாகப் பதில் தரவேண்டிய சசிகலா தரப்பு, கொஞ்சம் அடக்கியே வாசித்துவருகிறது. டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்திய தினத்தில்தான் தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்திருந்தது. இந்தநிலையில், பன்னீர்செல்வம் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு அந்த மேடையிலேயே பதிலளித்தார் டி.டி.வி.தினகரன்.
 
கூட்டத்தில் பேசிய டி.டி.வி.தினகரன், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார். அம்மாவின் ஆசியோடு நமக்கு வெற்றி நிச்சயம். நாம் ஒற்றுமையுடன் இருந்து ஜெயிப்போம். அம்மா, மறைவுக்குப் பிறகு நடந்த... நடந்துகொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் நீங்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறீர்கள். நமது இயக்கத்தில் மூன்றுமுறை அம்மாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் சில துரோகிகள் தி.மு.க-வோடு கைகோத்துக்கொண்டு எப்படியாவது அம்மா ஆட்சியை அகற்றிவிட வேண்டும்; மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க என்றைக்கும் தலைதூக்கிவிடக் கூடாது என்ற கொடிய எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்கள்” என்று ஆரம்பித்தவர், அதன்பிறகு ஓ.பி.எஸ் அணியைத் தாக்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில்... பன்னீர் எப்படி முதல்வரானார் என்று கதை சொல்லத் தொடங்கினார். “கருணாநிதி மகன் ஸ்டாலின் துணையோடு பன்னீர்செல்வம் செய்கிற அத்தனை அட்டூழியங்களையும் நீங்கள் கவனித்துத்தான் வருகிறீர்கள். அம்மா முதன்முதலாக பெரியகுளம் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலில் என்னை நிற்கச் சொன்னார்கள். நான் வெற்றி பெற்றென். அம்மா தேர்தலில் நிற்பதற்காக... ஆண்டிப்பட்டி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் இப்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன். அவரை இந்தக் கூட்டத்தில் பார்த்தபோது அம்மாவின் உண்மை விசுவாசி இங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவர், 2002-ம் ஆண்டு அம்மாவை முதல்வராக்கப் பாடுபட்டவர். ஆனால், ஒருமுறைகூட அவர் அமைச்சராக இருந்ததில்லை. ஆனால், அம்மாவால் மூன்று முறை முதலமைச்சர் ஆக்கப்பட்ட பன்னீர்செல்வம், இன்றைக்கு நமது இயக்கத்தை எப்படியாவது அழித்துவிடலாம் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்.

பன்னீர்செல்வம் எப்படி எம்.எல்.ஏ ஆனார்... அம்மாவிடம் அவருக்கு எப்படி அறிமுகம் கிடைத்தது என்பதை எல்லாம் பன்னீர்செல்வம் மறந்துவிட்டார். அதைப்பற்றி எல்லாம் எனக்கு முன்பு இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். உண்மையிலேயே, 1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது... நான் பெரியகுளம் தொகுதியில் அம்மாவால் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டபோது... பன்னீர்செல்வம் பெரியகுளம் நகரச் செயலாளராக இருந்தார்; நகர்மன்றத் தலைவராக இருந்தார். அப்போது, மாவட்டப் பேரவைச் செயலாளராக தங்க தமிழ்செல்வன் இருந்தார். 2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து... ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பிரச்னைகளை, உள்கட்சி விவகாரங்களைத் தீர்த்துவைத்து நல்ல நிர்வாகிகளை பரிந்துரைக்குமாறு அன்றைக்கு அம்மா என்னைப் பணித்தார்கள். அப்போது தேனி மாவட்டத்தில் எந்தவொரு மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தாலும் அம்மா தமிழகம் முழுவதும் நாம் மாற்றங்களைச் செய்துவிட்டோம். 'தேனியில் மாவட்டச் செயலாளரை மாற்றம் செய்யவில்லை என்றால் சரிப்பட்டு வராது' என்றார்கள். மாவட்டச் செயலாளராக தங்க தமிழ்செல்வனைத்தான் அறிவிப்பதாக இருந்தார்கள். அன்றைக்கு நானும் இளைஞன்; தங்க தமிழ்செல்வனும் இளைஞன். எனவே, 'பன்னீர்செல்வம் இருக்கட்டும்' என்று அம்மாவிடம் கூறியதுதான் நான் செய்த முதல் தவறு” என்று கூற கைத்தட்டல், விசில் சத்தம் காதைப் பிளந்தது.

பன்னீர் வளர்ந்த கதையைக் கூறியவர்... அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வர் ஆன வரலாற்றைப் பேச ஆரம்பித்தார். “தங்க தமிழ்செல்வனைக் கட்சியின் மாணவர் அணிச் செயலாளர் என்று அம்மா அறிவித்தார். 'நாங்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறோம். பன்னீர்செல்வம், தேனி மாவட்டத்தைக் கவனிக்கட்டும்' என்று சொன்னதுதான் தவறாகப் போய்விட்டது. அந்தப் பன்னீர்செல்வத்தை, பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ-வாக அம்மா ஆக்கினார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ம் தேதி அம்மா, பதவியைவிட்டு இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது... அதற்கு 10 நாள்களுக்கு முன்பாகவே என்னை அழைத்து... ''ஒருவேளை, சுப்ரீம் கோர்ட் என்னைப் பதவி விலகச் சொன்னால், நான் யாரை முதல்வராக்க வேண்டும் என்று கடந்த 10 நாட்களாக சிந்தித்து வருகிறேன். நமது இயக்கத்திலே உள்ள 141 சட்டமன்ற உறுப்பினர்களும் எனது தீவிர விசுவாசமிக்கவர்கள்தான். அவர்களில் யாரையாவது ஒருவரை முதல்வர் பதவியில் உட்காரவைப்பேன். இருந்தாலும், நீ பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறாய். பெரியகுளம் தொகுதியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களில் வருவாய்த் துறை அமைச்சராக இருக்கும் பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருக்கும் துரைராஜ் ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க இருக்கிறேன்' என்று அம்மா சொன்னார்.

தினகரன்

 

நான் அதற்குக் காரணம் கேட்டபோது, நீ எப்போதும் பெரியகுளம் தொகுதியில் கட்சிப் பணிகளையும் எனது ஆணைகளையும் ஏற்று நாடாளுமன்ற உறுப்பினராக அங்கேயே தங்கியிருந்து பணியாற்றுகிறாய். உனது நேரடிப் பார்வையிலேயே இருக்கிற ஒரு நபரை, நான் முதல்வராக நியமிப்பதுதான் அரசியலில் ஒரு சிறந்த முடிவாக இருக்கும். நான் ஒரு பெண்மணி என்பதால், இவர்களை 24 மணி நேரமும் எனது கண்காணிப்பில் வைக்கப்படக்கூடிய நபரை, என்னால் முதல்வராக்க முடியாது. ஆகையால், உனது கண்காணிப்பில் இருக்கிற பன்னீர்செல்வம் சரியாக இருக்கும். ஏனெனில், நான் அன்றைக்கு பெரியகுளத்தில்தான் குடியிருந்தேன். இதுதான் பன்னீர்செல்வம் முதல்வர் ஆன வரலாறு”  என்றவர், பின்னர் ஜெயலலிதா மரணம் குறித்து பன்னீர்செல்வம் கிளப்பிவரும் சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்தார். “பன்னீர்செல்வம் தனது பதவிப் பேராசைக்காக மருத்துவத் தொழிலையே களங்கப்படுத்தியும், உயிர் காக்கும் மருத்துவர்களை ஏதோ கூலிப் படையினர்போலச் சித்தரித்தும் வருகிறார். எம்.ஜி.ஆர் மரணத்தின்போது கழகத்தைப் பிளக்கத் துரோகக் கோடரிகளாகச் செயல்பட்டவர்களையும், அம்மாவிடம் பதவி சுகங்களைப் பெற்றுவிட்டு, அவருக்கே துரோகம் இழைத்தவர்களையும், கழகம் என்னும் கழனியில் விஷக் கிருமிகளாக முளைத்த வில்லன்களையும் ஒன்று சேர்த்துக்கொண்டு... பன்னீர்செல்வம், அம்மா கட்டிக்காத்த அ.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கிறார் என்றால், அவரை வங்கத்துக் கடலோரம் உறங்குகிற வாழும் தெய்வம் அம்மாவின் ஆன்மா ஒருநாளும் மன்னிக்காது. அம்மா, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே முதலமைச்சரின் பொறுப்புகள் அனைத்தும் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அம்மாவின் ஆரோக்கியத்தை மீட்பதற்காக... இந்தப் பன்னீர்செல்வம், எத்தனை முறை அமைச்சரவையைக் கூட்டி விவாதித்தார்? அயல்நாட்டுக்கு அம்மாவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்று எத்தனை முறை அமைச்சர்களோடும், அதிகாரிகளோடும் ஆலோசனை நடத்தினார்? அப்போதே அம்மாவின் அதிகாரங்களை தம்வசத்தில் நிரந்தரப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகளையும், வழிபாடு, பூஜைகளையும் திரைமறைவில் நடத்திக்கொண்டு, அப்போதே தி.மு.க-வுடன் மறைமுக ஒப்பந்தத்திலும் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது” என்று தடாலடியாக தினகரன் பேசினார்.

மேலும், பன்னீர் செல்வம் முதல்வரானது மட்டும் அல்ல... அவர், சசிகலாவிடம் எப்படி பவ்யம் காட்டினார் என்பதையும் தினகரன் போட்டு உடைத்தார். “அம்மா மரணமடைந்த டிசம்பர் 5-ம் தேதியன்று பன்னீர்செல்வம் யாரால் முதலமைச்சர் ஆனார்... யாரிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்றார்... அதைத் தொடர்ந்து தினமும் போயஸ் இல்லத்துக்கு வந்து சின்னம்மாவுக்கு அவர் எதற்காக நன்றி செலுத்துவதாக நடித்தார்? இதையெல்லாம் பன்னீர்செல்வம் தெளிவுப்படுத்த வேண்டும். சின்னம்மாவைத் தேர்வு செய்யும் பொதுக்குழு தீர்மானத்தை முன்னின்று முன்மொழிந்ததிலும், கழகத்தின் சட்டமன்றக்குழுத் தலைவராக சின்னம்மாவைத் தேர்வு செய்ததிலும் முன்னிற்பவர்போல நடித்துவிட்டு, திரைக்குப் பின்னே கழகத்தைப் பிளக்க துரோகக் கோடரியைக் கூர் தீட்டியது பன்னீர்செல்வம்தானே” என்று குற்றம்சாட்டினார். 
  
மேலும் அவர் பேசுகையில், “மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை, அப்போலோ மருத்துவமனை அறிக்கை, லண்டன் மருத்துவரின் அறிக்கை, இவற்றோடு உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட மருத்துவ அறிக்கைகள் யாவும் அம்மாவின் இயற்கை மரணத்தில் எந்தவித ஐயப்பாடுகளும் இல்லை என்பதையும், அவருக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்பதையும் உறுதி செய்துள்ளன. ஆனால், தமது அரசியல் வாழ்க்கை அஸ்தமனத்தை நோக்கி விரைகிறது என்னும் அச்சத்தில் பச்சைப் பொய்யர் பன்னீர்செல்வம், 'மர்மம், மர்மம்' என்ற ஒற்றைப் பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்லி, அதனை உண்மையாக்கிவிடலாம் என்ற கோயபல்ஸ் தத்துவத்தை கொள்கையாக்கிக்கொண்டு அலைகிறார். அம்மா கட்டிக்காத்து வளர்த்த கட்சிக்கு வெந்நீர் ஊற்றும் பன்னீர்செல்வத்தை அம்மா ஆன்மா ஒருநாளும் மன்னிக்காது. அவர் இழைக்கும் துரோகத்திலும், அடுத்தவர் மீது அவர் தொடுக்கும் அடுக்காத பாவத்திலும் அவரே வீழ்ந்துபோவார் என்பது மட்டும் நிச்சயம்'' என்று விரிவாக டி.டி.வி.தினகரன் பேசி பன்னீர்செல்வம் சொன்ன குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுத்தார்.


- எஸ்.முத்துகிருஷ்ணன்
 படங்கள்: ஶ்ரீனிவாசலு.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்