Published:Updated:

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டு மாநிலங்களில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டு மாநிலங்களில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டு மாநிலங்களில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை!
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இரண்டு மாநிலங்களில் யாருக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை!

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல, பஞ்சாபில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்து இருக்கிறது. மணிப்பூர் மற்றும் கோவாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 403 தொகுதிகளில் பா.ஜ.க 324-ல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணி 54 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், பா.ஜ.க 57 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. காங்கிரஸ் 11 இடங்களிலும் பிற கட்சிகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.  

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்து பா.ஜ.க மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 117 தொகுதிகளில் 77 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. ஆம் ஆத்மி கட்சி 20 தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி 18 தொகுதிகளிலும் இதரக் கட்சிகள் 2 தொகுதிகளிலும் வென்றுள்ளன. 

இன்று வெளியிடப்பட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய இரண்டு மாநிலங்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 

மணிப்பூரில் இருக்கும் 60 சட்டப்பேரவை தொகுதிகளில், காங்கிரஸ் 28, பா.ஜ.க 21, நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி தலா 4, இதரக் கட்சிகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளன. இந்த தேர்தல் முடிவால் மணிப்பூரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. ஆயினும், நாகா மக்கள் முன்னணி கட்சி காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் என்று மணிப்பூர் அரசியல் வட்டாரம் கூறுகின்றது. 

அதேபோல கோவாவில், மொத்தம் இருக்கும் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 17, பா.ஜ.க 13, தேசியவாத காங்கிரஸ் 1, கோவா முன்னணி மற்றும் எம்.ஜி.பி கட்சிகள் தலா 3, சுயேட்சைகள் 3 வெற்றி பெற்றுள்ளன. மணிப்பூரைப் போல கோவாவிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.